பெரிய மனிதன்
பெரிய மனிதன்.
யார் பெரிய மனிதன்
பெரிய பணக்காரனா?
மெத்தப் படித்தவனா?
நாலும் தெரிந்த அறிஞனா?
தத்துவம் உதிர்க்கும் ஞானியா?
நாட்டை ஆளும் தலைவனா?
இறைவனே கதி எனச் சரணாகதி அடைந்த சாமியாரா?
இவர்களில் யார் பெரிய மனிதன்?
யாருமே இல்லை என்பது தான்
என் பதில்.
காரணம் இவர்கள் யாவரும்
எதையோ நோக்கிச் செல்கிறார்கள்.
ஏதோ ஒரு பலனை எதிர் பார்த்துப் பயணிக்கிறார்கள்.
எதிலும் தன்னை முன்னிறுத்தி வாழ்க்கை நடத்துகிறார்கள்.
அப்போது யார் தான் பெரிய மனிதன்.
எந்த நிலையிலும் சக மனிதனை மதிப்பவனே பெரிய மனிதன்.
ஏழை, பணக்காரன் எனப் பாகுபாடு பாராமல் சக மனிதனை நேசிப்பவனே பெரிய மனிதன்.
தான் புசிக்கும் போது பிச்சை கேட்கும் மனிதனுக்கு இடையூறு என்று நினைக்காமல் தான் உண்ணும் உணவை உடனே அவனுக்கும் சரிபாதி வழங்குபவனே பெரிய மனிதன்.
தனக்கு உறவு இல்லாத ஓர் உயிர் மரண படுக்கையில் துன்புறும்போது நான் இருக்கிறேன் கவலைப் படாதே! என்று மனமுவந்து ஆறுதல் சொல்பவனே பெரிய மனிதன்.
வறுமையில் வாடும் நெஞ்சங்களை
தன் சொந்தங்களாக
என்றும் நினைப்பவனே
பெரிய மனிதன்.
மனைவியைத் தவிரப் மற்ற பெண்களைத் தாயாகவும், தங்கையாகவும் பார்ப்பவனே
பெரிய மனிதன்.
சாதி, மதம், ஏற்ற, தாழ்வு அனைத்தையும் குழி தோண்டி புதைத்து சமதர்ம சமுதாய நோக்குடன் எதையும் அணுகுபவனே பெரிய மனிதன்.
பணத்தைத் துச்சம் என மதித்து மனித நேயத்தை மகோன்னதமாக நினைப்பவனே இன்று அல்ல என்றும்
பெரிய மனிதன்.
- பாலு.

