சம்மதமா
பிறை நெற்றி திலகமிட்டு,
நிறை முடியில் பூச்சூடி,
பூவை நீ நடந்து வர, இந்த
பூமி செய்த தவமென்ன?
கண் மையும் விடமும் கலந்தா
கண்ணில் கோடு வரைந்தாய்?
தாக்கிக் கொல்லும் கூர் வேல்
பார்த்ததுண்டு.
பார்த்துக் கொல்லும் வேல்விழி
பார்த்ததில்லை.
வஞ்சிக்கு அணிகலன்கள்
வஞ்சமிலா அழகு தரும்.
புன்னகையாளின் மேனி தவழ,
பொன் நகையோ போட்டியிடும்.
பெண்ணுக்கு பெண் மயங்கும்
பெடை அன்னம் போல வந்தாய்.
கை தளும்ப மருதாணி இட்டு,
கண்ணிலொரு மேடையிட்டு,
ஒய்யாரமாய் நடந்து ஒரு
ஓவியம் போல் வந்தாய்.
உல்லாசமாய் நடந்து, அந்த
ஊர்வசி நாண வந்தாய்.
கொத்து மலர்க்குழல் மங்கை உன்
நினைவினால்,
சித்தம் கலங்கி உள்ளம் மயங்கும்
உணர்வினால்,
நித்திரை கெடுத்து இறந்து போகும்
என் நீண்ட இரவு.
கற்கண்டு பல் வரிசை வியந்து
காண,
கன்னி உன் மூக்குத்தியே கீழே
எட்டிப் பார்க்கிறது.
கண் எதிரில் நான் மட்டும்,
உயிர் துருவும் உன்னழகை,
உளமுருகப் பருகா விட்டால்,
ஊரில் என்னை பித்தனென்று
ஊரார் சொல்ல மாட்டாரா?
கனிவாய் மொழியே, நீ
மொழிவாய் சம்மதம் எழிலாய்.
பரிசம் போடும் நாளை, நல்ல
பரிசாய் எனக்குத் தருவாய்.
ச.தீபன்.
94435 51706