மீட்க வருவாயோடி

#சிந்து வகைப் பாடல்
#(கிளிக்கண்ணி)

கண்ணில் நிறைந்தவளே காட்சியெலாம்
நீயானாய்
மண்ணும் மறையுதடி - கிளியே
மையல் பெருகுதடி..!

காதல் பழுத்திருக்கக் காத்திருக்கேன் தாமதமேன்
நோதல் நொறுக்குதடி - கிளியே
நோய்க்கூடிக் கொல்லுதடி..!

சித்திரம் போலுன்னை சிந்தைதனில் வைத்தேன்
கத்திக் கதறுதடி - ,கிளியே
கண்முன்னே தோன்றிடடி..!

சாதியினால் கொல்லி சதியினால் கொல்லி
பாதிஉயிர் போனதடி - கிளியே
பட்டமரம் ஆவதோடி..!

செங்குருதி விழிதனிலே சேர்ந்திருந்து ஊற்றாகி
பொங்கி வழியுதடி - கிளியே
புத்தி பிசகுதடி..!

மென்தென்றல் நிலைமாறி மேனிதனைத் தீண்டிடுதே
என்னில்தீ பரவுதடி - கிளியே
எரிதழல் ஆவேனோடி..!

கல்லுங் கனியாகும் கனவினி
கானலென்று
சொல்லுகின்ற காலமடி - கிளியே
சோகமென்றும் சொந்தமோடி..!

வண்ணத்துப் பூச்சியென வட்டமிட்ட
காட்சியெல்லாம்
கண்ணெதிரே மின்னுதடி - கிளியே
கைசேர வருவாயோடி..!

பாதிஉயிர் போனதடி பாழ்நிலையில்
நானுமிங்கே
மீதிஉயிர் சாகுதடி - கிளியே
மீட்டநினை வில்லையோடி..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (2-Aug-20, 7:00 pm)
பார்வை : 66

மேலே