நில் ஓடாதே

ஹலோ! உங்களைத்தான் !எங்கே ஓடுகிறீர்கள் ?நில்லுங்கள். நின்று நிதானித்து வாழப் பழகிக்கொள்ளுங்கள்.

வாழ்க்கை என்பது போராட்டம் தான் .வாழ்ந்து பார்ப்பது தான் நம் நோக்கம் .அதை விட்டுவிட்டு எங்கே ஓடுகிறீர்கள்?

கோவிலுக்கா? கும்பாபிஷேகம் பார்க்கவா? குறைதீர்க்க குறி சொல்பவர் வசம் உங்களை ஒப்படைக்க வா ?செல்லுங்கள் .சென்றுவிட்டு வந்து என்னிடம் கொஞ்சம் நில்லுங்கள்.

என்ன ஆயிற்றா? இதயம் நிறைந்த தா ?குறை மறைந்ததா ?ஆன்மா குளிர்ந்ததா?இன்னும் ஏன் சோகம் .இன்னும் மனம் தெளியவில்லை யா?தெளியாது. தெளிவு பிறக்காது. சாஸ்திரங்களையும் சடங்குகள் ஆக்கிவிட்டோம் .பக்தியை வியாபாரம் ஆக்கிவிட்டோம். வழிபாட்டை கண்மூடித்தனமாக்கிவிட்டோம்.

வழிவழியாய் பெரியவர்கள் சொன்னதை விளங்கிக் கொள்ளாமல் சுருக்கி சோம்பேறித்தனம் ஆகிவிட்டோம்.

என் ஆண்டவன் என்ன செய்தார்? உடனே வேறு சாமியை தேடுகிறோம் .அல்லது வேறு மதம் சார்ந்த ஆண்டவனை நாடுகிறோம் .நன்றாக யோசி .உன் உடம்பின் உறுப்புகள் அத்தனையும் அதனதன் இடத்தில் அற்புதமாக பொருத்தப்பட்டு நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்து ஆளாகி ஆறு அறிவும் அனைத்தையும் பகுத்தறியும் திறனையும் வைத்த இறைவன் உனக்கு என்ன செய்யவில்லை என்று நினைக்கிறாய்?

ஓடியாடி உழைப்பது உன் வேலை.
உன் கடமையை செய்வது உன் முடிவு.
நீ எதை விதைக்கிறாயோ அதையே அறுவடை செய்கிறாய்.
செயல்களின் பலனை நீதான் அனுபவிக்கிறாய்.

நீ என்ன நினைக்கிறாயோ ?என்ன செய்யப் போகிறாயோ? அதற்கான சூழ்நிலைகளையும் சந்தர்ப்பங்களையும் வாய்ப்பையும் ஏற்படுத்தித் தருவது இறைவனின் கருணை. அது நன்மையாக இருந்தாலும் தீமையாக இருந்தாலும் உன் முடிவிற்கும் உன் செயல்களுக்கும் அதனால் ஏற்படும் பலன்களுக்கும் நீயே பொறுப்பு.

உன் அறிவு உன் சிந்தனை உன் கருத்து உன் செயல்பாடு உன் நம்பிக்கை இவையே உனது முடிவானால் அதனால் வருவதையும் நீயே அனுபவிக்க வேண்டும்.

எப்போது என் அறிவு மனம் உணர்வு செயல் அனைத்தும் இறைவனே !அவனால்தான் நான் செயல்படுகிறேன் என்று அவனை சரணாகதி அடைகிறாயோ அப்போது அனைத்தும் அவனே ஆகிறான். அவனேபொறுப்பேற்கிறான்.

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தன் அவதார காலத்தை முடித்துக் கொண்டு வைகுண்டம் செல்ல தயாராக இருக்கும் நேரம் .ஸ்ரீ கிருஷ்ணரின் தேரோட்டியான உத்தவர் கிருஷ்ணனை பார்த்துக்கேட்கிறார்.

கிருஷ்ணா !எனக்கு ஒரு சந்தேகம் .பெருமானே! நீ வாழச் சொன்னது வேறு வாழ்ந்து காட்டியது வேறு. காரணங்களை சொன்னாய் .கண்கட்டு வித்தைபோல மகாபாரதப் போரை நடத்தினாய். பெருமானே !மகாபாரத நாடகத்தில் நீ ஏற்ற பாத்திரத்தில் நீ புரிந்த செயல்களில் எனக்குப் புரியாத செயல்கள் பல இந்த ஒன்றை மட்டும் கேட்கட்டுமா ?கோவிந்தா ! என்றார்.

கேள் உத்தவா உன்மனச் சந்தேகம் எதுவானாலும் நான் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

பாண்டவர்களின் உற்ற நண்பன் நீ .அவர்களின் ஆபத்பாந்தவன் .நடப்பது மட்டுமல்ல நடக்கப் போவதையும் நடத்துபவன் நீ !அப்படியிருக்க துரியோதனன் சூதாட அழைத்தபோது தருமனை சூதாடாபோகாமல் தடுத்திருக்கலாமே ?அப்படித்தான் தடுக்கவில்லை. சூதாட போனபின்பு அனைத்து சொத்துக்களையும் வைத்து இழந்தானே அப்போது தடுத்திருக்கலாமே? அதையும் விடுங்கள் .தன்னுடன் பிறந்தவர்களையும் தோற்றான். அப்பொழுதும் தடுக்கவில்லை. அதையும் விடுங்கள் உன் தங்கை திரௌபதியை பணயம் வைத்த போது ஓடிவந்து தடுத்திருக்கலாம். அதையும் தடுக்கவில்லை .எங்கே போயிருந்தாய் கண்ணா?
ஆபத்தில் உதவுபவனே ஆபத்பாந்தவன் ஆபத்பாந்தவா ஏன் இப்படி செய்தாய்? என்னவாயிற்று உனக்கு.

உத்தவரே! அனைவருக்கும் வருகின்ற சந்தேகம் தான் உனக்கும் வந்திருக்கிறது .நான் எங்கும் போகவில்லை உத்தவரே. கண்ணன் சொன்னான்.

உத்தவரே! விவேகம் உள்ளவனே ஜெயிப்பான் என்பது உலகதர்மநெறி .துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை .அதனால் தருமன் தோற்றான்.

எதை செய்வதாக இருந்தாலும் என்னை அழைத்து ஆலோசனைகள் கேட்பான் தர்மன். இதற்கும் அவன் அழைப்பான் என்று காத்திருந்தேன் .அழைக்கவில்லை .அவன் தம்பி யாராவது அழைத்திருக்கலாம். யாரும் அழைக்கவில்லை .அவர்கள் அவர்களை நம்பி சூதாட செல்லும்போது நான் எப்படி குறுக்கே போக முடியும். பணயம் நான் வைக்கிறேன் என் மாமன் சகுனி விளையாடுவான் என்று துரியோதனன் சொன்ன போது பணயம் நான் வைக்கிறேன்
கண்ணன் எனக்காக ஆடுவான் என்று தர்மம் சொல்லியிருக்க வேண்டாமா? ஏன் ஏன் அப்படி அவன் சொல்லவில்லை ?கண்ணன் இங்கு வந்து விடக்கூடாது .கண்ணா வந்து விடாதே என வேண்டிக் கொண்டானே !என்னை கட்டிப் போட்டு விட்டானே !அழையா விருந்தாளியாகவோ நினையாமல் இருக்கும்போதோ நித்திலனாக போவதற்கு எப்படி முடியும் உத்தவரே?

பிறகு சபையில் நடந்தது உமக்குத் தெரியும் .துச்சாதனன் திரௌபதியின் ஆடையை உரித்தான் .அலறினாள் . துவண்டாள். அப்பொழுதும் சபையில் உள்ளவர்களை அரசனை பீமனை கர்ணனை பீஷ்மரை அழைத்த பிறகு கண்ணா என என்னை அழைத்தாள்.

உலகத்தை மறந்தாள் ஒறுமை உற்றாள்.
ஹரி ஹரி ஹரி என்றாள்...கண்ணா
அபயம் அபயம் எனக்கபயமென்றாள்.
கரியினுக்கருள்புரிந்தே...அன்று
கயத்திடை முதலையின் உயிர் மடித்தாய்.

என்று அழைத்ததும் ஒரு நொடி கூட தாமதிக்காமல் ஓடிச்சென்று அவள் மானத்தைக் காப்பாற்றினேனாஇல்லையா?

கண்ணா அழைத்தால் தான் வருவாயா ?பக்தர்களை உன்னை நம்பும் பாண்டவர்களை காக்க நீயாக வர மாட்டாயா?

உத்தவரே உம்மை நம்பி உன் அறிவை நம்பி என்னால் முடியும் என்று உன்னை நம்பி நீ செல்லும்போது உம்மிடம் நானாக வந்து உதவினால் அது ஏற்புடையதா? இல்லை என்னை நம்பி என்னை அழைத்துப் போவது ஏற்புடையதா ?

புரிந்தது போல் இருந்தாலும் புரியவில்லை கண்ணா.

பகவானுக்கும் உலக தர்மம் உண்டல்லவா? தன்னம்பிக்கையோடு தன் அறிவை நம்பி செயலாற்றும் அவனுக்கு இடையூறாக நான் சென்றால் அவனது செயலின் கர்மாவை அவன் எப்படி அனுபவிக்க முடியும் உத்தவரே.எப்போது என்னை அழைத்தாலும் நான் போகாமல் இருந்திருந்தால் என் மீது நீங்கள் குற்றம் சொல்லலாம் என்றான் கண்ணன்.

நாம்தான் உத்தவர்கள். நமக்குச் சொன்ன சந்தேக விளக்கம் தான் இது.

பாண்டவர்களுடன் பகவான் உடன் இருந்தான். அவர்களுக்கும் பக்தி இருந்தது. ஆனாலும் பகவானே ஓடவில்லை .அப்படி ஓடினால்அவர்களின் அறிவின் செயல்பாடு என்னாவது? ஆம் பகவான் நம் குடிசைக்கு முன்பும் காத்திருக்கிறான்.

சடங்காக அழைத்தால் வர மாட்டான்.
சாஸ்திரத்தால் மட்டும் வர மாட்டான்.
ஆடம்பர ஆரவாரத்தால் வரமாட்டான்.
பின் எப்படி வருவான்?
அழகாய் சொன்னான் பாரதி.
உலகத்தை மறந்தாள் ஒருமையுற்றாள்.
ஹரி ஹரி ஹரி என்றாள்.

ஆம் ஒருமை மனதுடன் உலகை மறந்த நிலையில் அவனை சரணாகதி அடைந்தால் அவனால்தான் அனைத்தும் நடக்கிறது என்பதை புரிந்து அவனை சரணடைந்தால் அவன் நம்முடனே இருப்பான் என்பதுதான் நம்முடைய பெரியோர்கள் நமக்குச் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.

ஓடுவதும் இல்லை இனி ஓய்வது மில்லை.
ஆடுவதும் இல்லை மனம் உலகப் பொருளை தேடுவதும் இல்லை.
கூடுவது ஒன்றே வழி !சத்சங்கத்தில் இறைவன் நாமம் பாடுவது ஒன்றே வழி.
நில் ஓடாதே வா இதிகாசம் காட்டும் வழியில் வாழ்ந்து பார்ப்போம்.

எழுதியவர் : சு.இராமஜோதி (14-Aug-20, 11:31 am)
சேர்த்தது : ராமஜோதி சு
பார்வை : 63

மேலே