இந்தியன் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலும் அதிலிருக்கும் பெண்ணியமும்

இந்தியன் படத்தில் கவிஞர் வாலி எழுதிய ஒரு பாடல் ...

அக்கடான்னு நாங்க உடை போட்டா
துக்கடான்னு நீங்க எடை போட்டா
தடா .. உமக்குத் தடா ..

திரு ரஃஹ்மான் அவர்களின் இசையில் இடம் பெற்ற இந்த பாடல் முழுக்கவே ஜாலியாக இருந்தாலும் பெண்ணியம் பற்றிய வரிகளாகவே வரும் . சுவர்ணலதாவின் குரலில் ஒலித்த அட்டகாசமான பாடல் .

மேடை ஏறிடும் பெண் தானே ..
நாட்டின் சென்சேஷன்
ஜாடை பேசிடும் கண் தானே ..
யார்க்கும் டெம்ப்ட்டேஷன்
ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம்
ஹோய் ஹோய்
ஓல்டைஎல்லாம் ஓரங்கட்டும்
தையத்தக்க தையத்தக்க தோம் ..
ஹோய் ஹோய் தையலுக்கு
கையத்தட்டுவோம் ..

ஆங்கிலமும் தமிழும் கலந்து எழுதப்பட்ட இந்த பாடலில் "தையலுக்கு கையத் தட்டுவோம் "என்றும் ஒரு வரி எழுதியிருக்கிறார் வாலி அவர்கள் .

தையல் என்ற சொல் பெண்ணையும் குறிக்கும் . "தையல் தளிர்க்கரங்கள் என்று தமயந்தியின் கைகளை பற்றிச் சொல்கிறார் புகழேந்திப் புலவர் ..

தையல் பற்றி தையல் ஒருத்தி சொன்ன கருத்து இன்றும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது . மையல் கொண்ட பையல் எவனாயினும் இப்படிச் சொல்லியிருந்தால் அவனைப் பிய்த்து எடுத்திருப்பார்கள் .. அப்படிப்பட்ட ஒரு கருத்தை சொன்னார் அவ்வையார் .

: தையல் சொல் கேளேல் -- ஆத்திச்சூடி , அவ்வையார் .

இப்படி அவ்வை சொன்னதை பின்னாள் வந்த ஒரு ஆண் கவி ஒத்துக்கொள்ளவில்லை . பெண்களின் உயர்வுதான் நாட்டை உயர்த்த்தும் , நல்வழிப்படுத்தும் என்று மனதில் பட்டத்தை சொன்னவர் தேசியக்கவி பாரதி தான் .

தையலை உயர்வு செய் .. நூல் புதிய ஆத்திச்சூடி , பாரதியார்

பெண்களை பற்றிய கருத்து மாறிக் கொண்டே வருவதை இது போன்ற பலதரப்பட்ட காலங்களில் வந்த நூல்களிலிருந்து நாம் தெளிவாக புரிந்துகொள்ளமுடியும் .

ஒரு குடும்பத்தில் புதிதாக ஒரு துன்பம் வருகிறது , அதற்கு தீர்வே இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும் ?அந்த குடும்பத்திலேயே மூத்த பெண்ணாக பார்த்து வழி கேட்க வேண்டும் . அந்த பெண் பட்டறிவில் சொல்லும் வழி சரியாகவே இருக்கும் என்பது ஒரு கருத்து . அந்த காலத்தில் போர்களின் காரணமாக ஆண்களை விட பெண்களின் வாழ்நாள் நீடித்திருந்ததால் பெண்கள் உலக நடப்புகளை அதிகமாக புரிந்து வைத்திருந்தார்கள் . நல்லதையும் கெட்டதையும் உணர்ந்து ஆய்ந்து பக்குவமாகிருந்தார்கள் . ஆகையால் அவர்கள் சொல்லும் வழி சரியாவே இருந்திருந்தது .

ஆனால் இன்று தொலைக்க காட்சித் தொடர்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் பெண்கள் அவர்களிடம் கருத்துக் கேட்டால் அவர்களின் உள்ளீடு ஏற்றுக் கொள்ளும் விதத்தில் இருக்குமா என்பது நூறு விழுக்காடு ஐயத்திற்கு உட்பட்டது .

கடைசியாக ஒரு நகைச்சுவை !

புலவருக்கு ஒருவர் வேட்டி தானம் கொடுத்தாராம் . தானம் கொடுத்த மாட்டை பல்லை ப் பிடித்துப் பார்க்கக் கூடாது தான் . ஆனாலும் அது கிழிந்த வேட்டி , பல இடங்களில் தையல்கள் . அதைப்பார்த்ததும் அந்தப் புலவர் வருத்தத்தை மறைத்துக் கொண்டு சிலேடையாக ஒரு வரி சொன்னாராம் .

"சோமனுக்கு இருபத்தேழு தையல் "

வேட்டிக்கு சோமன் என்றொரு பெயருண்டு . சோமனுக்கு இருபத்தேழு தையல் என்றால் வேட்டியில் அத்தனை தையல்கள் இருக்கின்றன என்று பொருள் .

சந்திரனுக்கு சோமன் என்றொரு பெயருண்டு . சோமனுக்கு இருபத்தேழு தையல் என்றால் சந்திரனுக்கு இருபத்தேழு மனைவிகள் என்று பொருள் . அதுவும் புராணப்படி உண்மைதான் .ரோகினி முதலான இருபத்தேழு விண்மீன்களையும் சந்திரன் மணந்து கொண்டான் , ஆகையால் சோமனுக்கு இருபத்தேழு தையல் .

இப்போது புரிந்திருக்குமே புலவரின் சிலேடை .

நன்றி சகோ திரு கோவிந்தராஜன் அவர்கள்

எழுதியவர் : வசிகரன் .க (14-Aug-20, 1:52 pm)
பார்வை : 45

மேலே