ஃப்ளவர் காலிங்

புத்தம் புதிய காலைப் பொழுது.ஜன்னல் கண்ணாடிகளை துளைத்து அவள் முகத்தை காண கதிரவன் வீசிய ஒளிக்கற்றைகள் அவள் மேனியில் தகதகவென விழுந்து கொண்டிருந்தன.

முகத்தில் படிந்திருந்த சூரிய ஒளியை துடைத்தவாறே எழுந்து கைகளை முறுக்கி சோம்பல் முறித்தாள்.

மணி பத்து பத்து.பெட்சீட்டை சுருட்டி தூற எறிந்து பல்துலக்கி வந்தவள் சமையலறையில் மீன் குழம்பு வாசம் மூக்கை துளைத்தது.ஓ இனிக்கு சன்டேவா.
அவள் திட்டிக் கொண்டிருந்த அம்மாவிடம் சூடாக ஒரு கப் காபிக்கு சொல்லிவிட்டு மீண்டும் படுக்கையறைக்கு வந்து மொபைலை தீண்டத் தொடங்கினாள்.

வழக்கமான குட் மார்னிங் மெசேஜ் களுக்கு சுருக்கமாக GM அனுப்பி அம்மா கொண்டு வந்த காபியை உறிஞ்ச தொடங்கினாள்.

இன்னிக்கு 3 மணிக்கு அவளுக்கு டேன்ஸ் கிளாஸ்.சட்டென மூளைக்குள் தட்டிய அலாரத்தை எடுத்துக்கொண்டு அம்மாவிடம் சென்றாள்.

ம்மா இன்னிக்கு டேன்ஸ் கிளாஸீக்கு பீஸ் கேட்டேனே

இப்ப காலம் போன காலத்துல உனக்கு எதுக்குடி டான்ஸ். வேணானு சொன்னா கேக்க மாட்டியா

ப்ளீஸ் மா ஏதோ ஆசையா இருக்கு. வீட்ல சும்மா இருக்கறதுக்கும் போரடிக்குது. ஒரு டூ மன்த் போறேன் அதுக்கப்புறம் வேணாம்

சரி சரி போகும் போது சொல்லு காசு கொடுக்கறேன்

என் செல்ல அம்மா என அம்மாவின் கன்னத்தை கிள்ளியவளை

நகருடி அடுப்பில குழம்பு கொதிக்குது

அப்பா எங்கமா

தெரியலை ஏதோ ப்ரண்ட் வீட்டுக்கு போறதா சொன்னாரு

சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சியில் மூழ்கினாள்.அம்மா அடுப்பறையிலிருந்து
இராமாயணம் சீரியல் வைடி என்றாள்

சலித்துக் கொண்டே சீரியலை வைத்தவளிடம்

சீதா இந்த பூண்ட கொஞ்சம் உறிச்சு கொடுடி என அம்மா அழைக்க

எனக்கு நகமில்லமா என சொல்லிவிட்டு நகர்ந்தவளை

கட்டிக்கிட்டு போற இடத்துல போய் நகமில்ல சதையில்லுனு சொல்லு அப்பறம் உன்ன வளத்த எனக்கு நல்ல பாராட்டு கிடைக்கும்

அதுக்கு தான் ஒரு நல்ல சமையல் கார மாப்பிள்ளையா பார்த்து கட்டிக் கொடுத்துடுங்கனு சொல்றேன்

இந்த பேச்சுக்கு ஒன்னும் குறச்சலில்லை

சாப்பிட்டு முடித்து தட்டை கழுவி வைத்துவிட்டு படுக்கையறையில் சாய்ந்தாள்.
___

டான்ஸ் கிளாஸ் வாசலில் சென்று ஸ்கூட்டியை பார்க் செய்தவள் உள்ளே சென்று அறிமுகப்படுத்திக் கொண்டு பயிற்சியை தொடங்கினாள்.வெளியேறும் போது பீஸ் கொடுத்துவிட்டு ஸ்கூட்டியை எடுக்க முனைந்தவளின் முதுகை தட்டி ஒரு  பெண் அழைத்தாள்.

திரும்புகையில் ஒரு பூச்செடியை நீட்டியவாறே ஒரு சிறு பெண் சிரித்தவாறே நின்றிருக்க

ஏய் குட்டி, என்ன இது, யாருக்கு?

உங்களுக்கு தான் அந்த அண்ணன் கொடுக்க சொன்னாரு

அவள் காட்டிய திசையில் யாருமே இல்லை

யாருமா?

இப்ப தான் இங்க இருந்தாரு எனக்கு சாக்லேட் வாங்கி கொடுத்தாரு. இத, இந்த ஸ்கூட்டியை எடுக்க வரவங்களாண்ட கொடுத்துடுனு சொன்னாரு

யாராயிருக்கும் அவள் அந்த பூந்தொட்டியை வாங்கி பார்த்தாள் மலர்ந்த பூக்களுக்கு மத்தியில் ஒரு துண்டுச் சீட்டு. பிரித்து படித்தாள்.

யாராயிருக்கும் என குழம்பத் தேவையில்லை. பூக்களை நேசிக்கும் ஒருவன், இந்த மலர்களுக்கு மோட்சம் வேண்டி உங்களிடம் அனுப்பி வைத்திருக்கிறேன். அதை நீங்கள் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில்

அதை கொண்டு வந்து தன் வீட்டின் மாடியில் வைத்து தண்ணீர் ஊற்ற மாடிக்கு துணியெடுக்க வந்த அவள் அம்மா

என்னடி இது புதுசா வாங்கனியா என பூக்களை தடவத் தொடங்கினாள்

வாங்கலாம் இல்லை என் டான்ஸ் திறமைய பார்த்து எங்க டான்ஸ் கிளாஸ்ல கிப்டா கொடுத்தாங்க
கைய எடுமா பூ கசங்கிட போகுது

நல்லா இருக்குதுடி உங்க அக்கா வந்தா கொடுத்து அனுப்பலாம்

ம்மா ஒழுங்கா போம்மா. வீட்ல ஒன்னு புதுசா வந்திட கூடாதே. உடனே அக்காவுக்கு பார்சல் பண்ணிட வேண்டியது

ஏன்டி அவதான்டி இந்த வீட்டு பாரத்தை சுமந்தவ. உங்க அப்பா கால் ஒடஞ்சி வீட்ல கிடைக்கறப்ப ஒத்த ஆளா இந்த குடும்ப பாரத்த தலையில போட்டுகிட்டு

அம்மா போதுமா தெரியாம சொல்லிட்டேன்

அவள் படியிறங்கி செல்ல இவள் அந்த பூந்தொட்டியை இரசிக்க தொடங்கினாள்.ஏனோ அத்தனை பூக்களும் அவளைப் பார்த்து சிரிப்பது போலிருந்தது.
____

என்னடி சொல்ற டெய்லியும் ஒருத்தன் உனக்கு பூச்செடி கொடுக்குறானா

ஆமான்டி ஆனா ஆளு யாருனு தெரியல. நானும் எவ்வளவோ ட்ரைப் பண்ணி பார்த்தேன். அவன கண்டு பிடிக்க முடியலை

சரி விடு. நாளைக்கு நீ டேன்ஸ் கிளாஸ் போறப்ப நானும் உன்கூட வர்றேன். நான் மறைஞ்சு நின்னு பார்த்துட அவன் யாருனு கண்டுபிடிச்சிடறேன் போதுமா

தாங்க்ஸ் டி

பட் ஒன் கண்டிஷன்.அப்படி அவன கண்டுபிடிச்சா எனக்கு ஒரு மசாலா பூரி வாங்கி தரணும் ஓகேவா

சரி டி
-----

என்னடி, அவன் வந்தானா பார்த்தியா?

இல்லைடி, அவன் ஆளேயே காணோம்

சரி வா கிளம்பலாம்

ச்...

என்னடி அவன கண்டுபிடிக்க முடியலைனு பீல் பண்றியா

அதெல்லாம் இல்லடி மசாலா பூரி திங்கனும்னு எவ்ளோ ஆசையா இருந்தேன் தெரியுமா

உன்ன... தீனிபண்டாரம். வா போற வழியில வாங்கி தரேன்

ரொம்ப டாங்க்ஸ் டி

வாசலில் பைக் நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தவளை அழைத்த அவள் அம்மா

ஏய் சீதா இன்னிக்கு டான்ஸ் கிளாஸ்ல நீ உன்னோட கிப்ட்ட மறந்து வச்சுட்டேனு ஒரு தம்பி வந்து கொடுத்துட்டு போச்சு

அதே பூந்தொட்டி. யாருமா ஆள் பார்க்க எப்படி இருந்தான்

ஹெல்மெட் போட்டுட்டு இருந்தான் முகத்தை பார்க்க முடியல

இந்த பூப்பரிமாற்றம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்க அவள் மாடியெங்கும் பூத்து குலுங்கும் மலர்கள் வாசம் பரவியபடியே அத்தனை அழகாக காட்சியளித்தது.

ஆனால் இதன் மூலக்காரணமான அந்த கள்வனை காணாத அவள் மனம் அல்லலுற்றது.

அவனைக் கண்டுபிடிக்கவே அவள் அந்த டான்ஸ் கிளாஸ்க்கு தவறாமல் போகத் தொடங்கினாள்

ஒருநாள்...

அவள் மாடியில் பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்க அவள் மொபைல் சினுங்கியது.டீரூ காலரில் பிளவர் என தெரிவிக்க பதட்டமும், ஏக்கமும் கொண்டு அவள் மொபைலை எடுத்தாள்.

மறுமுனையில் ஹலோ குரல் தாழ்ந்து வந்தது.

"நீங்க" தொண்டை செருமலோடு

உங்க வீட்டுல வளர்ற அத்தனை பூச்செடிகளுக்கும் நான் முன்னாள் சொந்தக்காரன்

ஹலோ, உங்கள தாங்க ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன். ஆமா நீங்க யாரு? எந்த சம்பந்தமும் இல்லாம எதுக்கு எனக்கு டெய்லி பூச்செடி கொடுக்கணும்?

நான் யாருனு சொல்றதுக்கு முன்னாடி உங்களுக்கு ஒரு சம்பவம் சொல்றேன். கொஞ்சம் ஞாபகப்படுத்தி பாருங்க

அன்னிக்கி ஒருநாள் பஸ்ல செம கூட்டம் அதை சாக்கா வச்சி உங்கள உரசுன ஒருத்தன அடிச்சி அவன போலீஸ் ஸ்டேசனுக்கு அழைச்சிட்டு போயி..

நிறுத்துங்க, நிறுத்தங்க, அந்த பொறுக்கி பிரகாஷா நீங்க

இல்லைங்க கொஞ்சம் என்னை முழுசா சொல்ல விடுங்க

அப்ப அந்த பஸ்ல டிரவல் பண்ணதுல நானும் ஒருத்தன்

ஓகே. அதுக்கும் நீங்க எனக்கு பூச்செடி கொடுக்கறதுக்கும் என்ன சம்பந்தம்

அன்னிக்கி நான் ஒரு கொலை பண்ணனும்னு முடிவு பண்ணி தான் கிளம்பினேன்

வாட்? கொலையா

என்னோட  ப்ளவர்ஸ் கார்டன எனக்கே தெரியாம என் ப்ரண்ட் ஒரு ரியல் எஸ்டேட் காரனுக்கு என்ன ஏமாற்றி விற்க பார்த்தான். இது தெரிஞ்சு அவன கொலை பண்ற முடிவோடு தான் கிளம்பனேன். பட் உங்களால அன்னிக்கி நான் போக வேண்டிய பஸ்ஸ மிஸ்பண்ணி வீட்டுக்கு வந்துட்டேன். அதுக்கப்புறம் அன்னிக்கி நைட் அவனே கால் பண்ணி அவன் தப்புக்கு மன்னிப்பு கேட்டான் அவன் பண்ணதுக்கு தண்டனையா அவனோட மனைவிக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சாம். இப்ப தெரியுதா

சரி உங்களுக்கு ஏதோ மறைமுகமாக என் மூலமா ஹெல்ப் நடந்திருக்கு ஒத்துக்கறேன்.  ஆனா அதுக்காக நீங்க நேரடியாவே என்ன சந்திச்சு இதைச் சொல்லி இருக்கலாமே. எதுக்கு இந்த மறைமுகமான விளையாட்டு

மறைமுகமான அன்பு தாங்க அத உணரும் போது சுவையா இருக்கும்

சரி ஒத்துக்கறேன். ஆனா ஒருமுறையாவது உங்கள் மீட் பண்ற வாய்ப்பு கொடுக்கலாமில்லையா

ஓகே நீங்க இப்படி கெஞ்சி கேட்டதால

ஹலோ, ஹலோ.. கெஞ்சலாம் இல்ல ஏதோ கேஷீவலா தான் கேட்டேன்

சரி நீங்க இப்படி கேஷீவலா கெஞ்சி கேட்டதால...

யூ.. உங்கள நேர்ல வாங்க வச்சிக்கறேன்

சன்டே மார்னிங் 10.30. காபி டே ஓகேவா

ஓகே

அவள் போனை கட் செய்ய அவன் குரல் காதுகளுக்குள் ரீங்காரமிட்டபடியே இருக்க இனம்புரியாத புன்னகையோடு
தலையில் மொபைலை அறைந்து, "அவன் பேர கேட்கவேயில்லையே" சரி சன்டே பார்த்துக்கலாம்

மிகுந்த எதிர்பார்ப்பு எப்பொழுதும் காலத்தை நீட்டிக்க செய்யும் போல அவளுக்கு அந்த சனிக்கிழமை ஆமை வேகத்தில் கடக்க அவள் மனதின் எண்ணமனைத்தும் நாளைய சந்திப்புக்காக காத்திருந்தது.அவள் கையிலிருந்த மொபைல் எப்போதும் அவன் அழைப்புக்காக காத்தபடியே இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை. காபி டே வில் அவள் அமர்ந்திருந்தாள் ஏதோ புதுவித ஆர்வமும் சந்தோஷமும் முகத்தில் பரவ.கண்கள் வாசலுக்கு காவல் புரிந்துக் கொண்டிருக்க.சரியாக பத்து முப்பது மணிக்கு அவளுக்குள் ஒருவித பதட்டம்.தன்னை, தன் உடையை சரிப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தாள்.வாசல் மீதிருந்த அவள் கவனத்தை கலைத்தவாறே ஒரு குரல் பின்புறமிருந்து

திரும்பினாள். அவள் அப்பா யாரோ இளம்வயது பையனோடு

சீதா இங்க என்ன பண்ற

அப்பா அது. அது. கீதாவுக்காக வைட் பண்றேன்

ஓ நானே உன்ன வீட்ல மீட் பண்ணலாம்னு இருந்தேன். இவரு யாருனு பாக்கறியா. என் ப்ரண்டோட சன் ராம்.இன்னும் டீடைலா சொல்லனும்னா உன்னோட வருங்கால கணவர். அவளுக்கு ஒருகணம் உடல் உதறியது.இனம் புரியாத அவஸ்தை, வலி.அப்பா அதன் பின் அந்த இளைஞனோடு சகவாசமாக சிரித்து பேசத் தொடங்க அவளுக்கு அங்கு இருப்பதற்கே பிடிக்கவில்லை

அப்பா நான் கிளம்பறேன்

இருமா உன்ன மீட் பண்ண தான தம்பி வந்திருக்காரு அதுக்குள்ள என்ன அவசரம்

இல்லப்பா லைட்டா தலவலிக்கிற மாதிரி இருக்கு இன்னொரு நாள் மீட் பண்ணிக்கிறேனே

அப்பா அந்த இளைஞனை பார்க்க, நோ ப்ராப்ளம் சீதா டேக் கேர் என விடைகொடுத்தான்

விறு விறுவென நடந்து பைக் பார்க்கிங் வந்தவள் செல்போன் எடுத்து அவனுக்கு கால் செய்தாள்.

த நம்பர் யூ டிரையிங் டு ரீச் இஸ் கரண்ட்லி ஸ்வீட்சுடு ஆஃப்

செவி உறைந்து கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.

அதன் பின் அவனுடனான தொடர்பு.அவன் பூச்செடி பரிசளிப்பு முற்றிலும் நின்று போனது.ஆனால் அவன் நினைவு அவளுள் இன்னும் வாடாமல் பூத்தபடியே இருக்க, அவள் தோட்டத்தில் மலர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரின்றி வாடத் தொடங்கின.

நாட்கள் புரள அவள் டான்ஸ் வகுப்புக்கு செல்வதை நிறுத்திக் கொண்டாள்

ஏன்டி டான்ஸ் கிளாஸ்க்கு போலையா அவள் அம்மா கேட்க

அங்க கோச்சிங் சரியில்லை அதான் போகல

ஒரு மாச பீஸ் கட்டி இப்படி தண்டம் பண்றதுக்கு தான் தாம் தூம்னு குதிச்சியா

அவள் தொலைக்காட்சியில் "யாரோ மனதிலே ஏனோ கனவிலே" சாங் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போது அவள் அப்பா கல்யாண பத்திரிக்கையோடு வீட்டுக்குள் வந்தார்.
அவள் கல்யாணப் பத்திரிக்கையை பார்த்தாள் ஏனோ துக்கம் படர, ரூமுக்குள் சென்று தாளிட்டுக் கொண்டாள்

பார்த்தியாடி உன் பொண்ணுக்கு, கல்யாண பத்திரிக்கைய பாத்த உடனே எப்படி வெட்கம் வந்துடுச்சுனு

ஏங்க மண்டபம்லாம் எப்படி...

எல்லாம் பேசி முடிச்சாச்சு. என் தலைய தவிர எல்லாத்தையும் அடமானம் வைச்சிருக்கேன். நல்ல படியா முடிஞ்சா சரி

அவள் உள்ளறையில் தன் மொபைலில் மீண்டும் அவனுக்கு கால் பண்ண முயற்சித்தாள்

த நம்பர்....ஸ்விட்ச் ஆஃப்

கல்யாண வேலைகள் அவசர அவசரமாக நடந்து கொண்டிருந்தது.
அம்மா அவ்வப்போது

ஏன்டி எப்ப பாரு மூஞ்ச தூக்கி வச்சிட்டு இருக்க. கல்யாணப் பொண்ணு கலகலப்பா இல்லைன்னா நாலு பேரு தப்பா நினைப்பாங்கடி

கல்யாணத்திற்கு முந்தைய நாளன்று அவள் தோழி கீதாவிடம் தனியாக பேச வாய்ப்பு கிடைத்தது

ஏன்டி சோகமா இருக்க

தெரியலைடி. இப்ப வரைக்கும் எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லடி என கலங்கினாள்

ஏய் என்னடி சொல்ற. விடிஞ்சா கல்யாணம். இப்ப இப்படி பேசற. என்கிட்ட மறைக்காம சொல்லு, யாரையாவது லவ் பண்றியா?

அவள் வழிந்த கண்ணீரோடு
நடந்ததை கூற

ஏய் என்னடி பைத்தியம் மாதிரி பேசற. அவன் யாரோ பூ கொடுத்தானு அவன நினைச்சு உன் லைஃப் அ நாசம் பண்ணப் போறியா. உன்ன பார்க்க கூட வராத அந்த இடியட்காக நீ இப்படி லூசு மாதிரி அழுவுறது ஏன்னு புரியல.

அதான்டி எனக்கும் தெரியல

சீதா காம்.நீ உன்னை குழப்பிக்கிறே. இப்ப நீ யோசிக்க வேண்டியது உன்னோட கல்யாணத்தை பத்தி மட்டும் தான். அவனோட பேசனுதெல்லாம் ஏதோ கெட்ட கனவா நினைச்சு மறந்துடு.அவன் உன்னை ஏமாத்திருக்கான். அதை கொஞ்சம் நினைச்சு பாரு.அதுவே அவன நீ மறக்க வழி சொல்லும்

கல்யாணம் ஒருவழியாக முடிந்தது. அன்று இரவு அவள் அம்மா அவளை முதலிரவுக்காக தயார் படுத்திக் கொண்டிருந்தாள்

அப்போது அவள் போன் சிணுங்கியது.

பிளவர்

பாய்ந்து எடுத்துக்கொண்டு மேலே மாடிக்கு வந்தாள் குரல் கம்ம எதிர்ப்புறம்

நீ கோபமா இருப்பேனு தெரியும். நான் மன்னிப்பெல்லாம் கேட்க போறதில்லை. ஆனா ஒன்னு சொல்லணும், நீ இன்னிக்கு அவ்வளவு அழகா இருந்த.

அவள் வெடித்து அழுதவாறே, மொபைலை வீசியெறிந்தாள். அம்மா மாடிக்கு வருவது தெரிந்து கண்களை துடைத்துக் கொண்டாள்.

என்னடி இந்த நேரத்துல இங்க என்ன பண்ணிட்டிருக்க. கீழ மாப்பிள்ளை உனக்காக வெயிட் பண்ணிட்டிருக்காரு. சீக்கிரம் பால எடுத்துக்கிட்டு போ

சரி மா இதோ வந்துடறேன். நீ போ

அவள் முதலிரவு அறைக்குள் நுழைந்து மேஜை மீது பால் சொம்பை வைத்தாள். அவள் கணவனிடம் பால் குடிக்குமாறு கூறினாள். அவன் அவளையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்

பால் குடிக்கலையா அவள் புடவையை சரிசெய்தபடியே கேட்டாள்

சீதா உனக்கு பூ ரொம்ப பிடிக்குமா

ஏன்? தயக்கமாக

இல்ல உன் வீட்டு மாடியில நிறைய ப்ளவர்ஸ் இருந்துச்சு அதான்

ம்...

சீதா, நான் உன்கிட்ட ஒரு கேள்வி கேட்கறேன். அதுக்கு உண்மையா பதில் சொல்லணும்

அவள் அவனை கூர்ந்து நோக்கினாள். ஒருவேளை அந்த பூவின் பின்புலத்தை கேட்க போகிறானா?

யாருனே தெரியாத ஒருத்தன நாம உயிருக்கு உயிராக விரும்பிட்டு ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையால அவன, அவனோட நினைவ மறந்துட்டு நாம இன்னொரு வாழ்க்கை வாழணும்னா நீ என்ன பண்ணுவ?

அவள் துக்கம் பீறிட அழத் தொடங்க, "ஐம் ஸாரி நான் மேரேஜ்க்கு முன்னாடியே உங்ககிட்ட சொல்லணும்னு நினைச்சேன். பட்..."

ஸாரி கேட்க வேண்டியது நீ இல்லை சீதா. நான் தான்

ஏன்? அவனை உற்று நோக்கினாள்

உன்ன, இத்தனை நாளா ஏமாத்துனதுக்கு

என்ன சொல்றிங்க?

அவன் மொபைல் எடுத்து கால் செய்தான்.

அவள் மொபைல் அலறியது.

ப்ளவர் காலிங்....

முற்றும்.

எழுதியவர் : சே.ரவிச்சந்திரன் (21-Aug-20, 11:15 am)
சேர்த்தது : Ravichandran
பார்வை : 218

மேலே