புதுமைப்பெண் பொன்னாத்தாள்

ஏ!!பொன்னாத்தா!!அங்குட்டு என்ன செய்யறவ??நின்னுகிட்டே கனவு காணுதீயளோ??சோலிய பாப்பியா?? என்ற ஆச்சியின் காட்டுக் கத்தல் தாமதமாகத்தான் பொன்னாத்தாவின் காதில் விழுந்தது.இந்தா!! வாரேன்?? என்று கத்தியபடி மாட்டுத் தொழுவம் சுத்தம் செய்யச் சென்றாள்.பால்ய விவாகம் தனக்கு நடந்தது கூட அவளுக்குத் தெரியாது.படிக்கச் சென்ற கணவன் மாடு முட்டி இறந்ததை எல்லோரும் உச்சுக் கொட்டுவதைக் கேட்டு ஒன்றும் புரியாமல் முழித்தபடி நிற்பாள்.
தன் பாரத்தைக் குறைக்கவே பொன்னாத்தாவின் பெற்றோர் அவளுக்கு பால்ய விவாகம் செய்தனர்.அப்படி இருக்க இப்போது அவளை வீட்டுக்குக் கூட்டிச் செல்லவா போகின்றனர் ?? பாவம் அவள்??
ஆத்தா!!ஆத்தா!! நானும் உஸ்கூலுக்கு போறேனே!! என்று தலை சொறிந்தபடி கெஞ்சுவாள்.
அடி!! தத்தேரி சிறுக்கி!! என்று கையில் கிடைத்தவற்றை தூக்கி எறிவாள் அவளுடைய மாமியா பூசானம்.இப்படியாக பொன்னாத்தாவின் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தது.கிராமத்துல தண்ணி இல்ல,கரண்ட் இல்ல,குடி ஆளுங்க தொல்ல,ரூவா நோட்டுக்கு ஆசபட்டு சிறுசுக கண்ணாலம்-இப்படி பல விசயத்த பாத்துபுட்டா பொன்னாத்தா.
ஐயோ!! அம்புட்டும் போச்சே!! என்ற கதரல் கேட்டு பாதி ராத்திரியில் கிராமமே விழித்துக் கொண்டது.விளைச்சலுக்கு ஏத்த கூலி இல்லனுட்டு பக்கத்து வூட்டு கலியமூர்த்தி மாமா தூக்கு போட்டு நாண்டுட்டாரு.ஊரே கூடியிருந்தது.முப்பது வயசு வந்துட்ட பொன்னாத்தாவுக்கு இவைகள் மெல்ல மெல்லப் புரிந்தது.பழயபடி கம்பத்த பிடிச்சுகிட்டே ரோசனைல போய்ட்டா.
திவாளி சமயம்.
துபாய்க்கு வேலைக்கு போன கலியமூர்த்தி அப்பச்சியோட பையன் பழனி திரும்ப வந்து சிலுக்கு சட்ட போட்டு ஊரையே வாய்பொளக்க வச்சான். பூசானமும் அவனிடம் தங்கொரயச் சொல்லி மூக்கு சிந்தினாள். "" ஏன் ஆச்சி!! வூட்டு வேலைக்கு ஆள் கேக்குறாங்க.பொன்னாத்தாவ அனுப்பி வுடு"" என்றான்.லீவு முடிஞ்சு போவும் போது அவளையும் கூட்டிப் போனான்.
ஷேக்கு வீட்டில் எல்லா வேலைகளையும் செய்தாள் பொன்னாத்தா. வேலை இல்லாத போது பிள்ளைகள் படிப்பதை உண்ணிப்பாக கவனிப்பாள்.யாரு செஞ்ச புண்ணியமோ?? கொஞ்சம் கொஞ்சமாக படிப்பும் எழுத்தும் அவளிடம் ஒட்டிக் கொண்டது.இன்றய கால வாழ்க்கை முறை அவளுக்கு மெதுவாக பிடிபட ஆரம்பித்தது.
கடைத் தெருவுக்குப் போகப் பழகினாள். ""ரூபா-பைசா "" புழக்கத்தின் பழக்கமறிந்தாள்.தன் ஆடையிலும் மாற்றத்தை உணர்ந்தாள்.இப்படியாக வயதும் நாற்பதை எட்டியது.
ஒரு நாள் தன்னுடைய மாமியார் பூசானம் இறந்த செய்தி வந்தது. ஷேக்-குடும்பத்தாரும் நல்ல முறையில் பணம் கொடுத்து பொன்னாத்தாவை ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
பல வருடங்கள் கழித்து மீண்டும் ஊரைப் பார்த்து மகிழ்ந்தாள்.ஆனால் ஊரானது மிக சொல்ப மாற்றமே அடைந்திருப்பது கண்டு வருந்தினாள். தான் ஒண்டிக் கட்டை என்பதால் தன்னிடம் இருந்த பணத்தை கிராமத்தின் முன்னேற்றத்திற்கு செலவிட நினைத்தாள்.
ஊர் பெரியவர்கள் என்ற போர்வையில் உள்ள முதலைகளின் ஆட்டத்தை ஒடுக்கினாள்.சிறிது சிறிதாக ஊர் சனங்களிடம் உண்மை நிலவரத்தை எடுத்துச் சொன்னாள்.ஊராட்சி ஒன்றியம் பற்றி விளங்கினாள்.
இவளின் நடவடிக்கைகள் பிடிக்காத பெருசுகள் ஒன்று கூடி அவள் விதவை என்றும், கீழ் சாதி என்றும் கூறி பொன்னாத்தாவை அமுக்கினர்.
ஊர் கலெக்டரிடம் மனு கொடுத்தாள் பொன்னாத்தா.
ஒன்றிய ஆபீஸில் அவளை நுழையக்கூடாது என்று அடித்தும், தகாத வார்த்தைகளாலும் தாக்கினார்கள்.
ஊர் மக்களின் ஆதரவோடும் கலெக்டரின் உதவியோடும் பொன்னாத்தாள் ஒன்றியத் தலைவி ஆனாள். தன்னை ஒடுக்க முயன்றவர்களின் முன்னிலையிலேயே சுதந்திர தின விழா அன்று கொடியைப் பறக்க விட்டாள். அவளின் பெயர் ஒன்றிய ஆபீஸின் பலகையிலும் எழுதப்பட்டது.
இந்த நிகழ்ச்சி காட்டுத் தீ போல மத்திய அரசு வரை பரவியது.பிரதம மந்திரியின் வாழ்த்து மடலுடன் வெற்றி நடை போட்டாள் ஒன்றியத் தலைவி பொன்னாத்தாள்.

எழுதியவர் : சுதா சேஷாத்திரி (21-Aug-20, 6:20 pm)
சேர்த்தது : Sudhaseshadri
பார்வை : 148

மேலே