வரும் ஆனால் வராது

வரும். ஆனால்! வராது!

இளைய தலைமுறையின் நாடியைப் பிடித்துப் பார்க்கும்போது எனக்கு முதலில் தோன்றுவது தனக்கு எது வரும் என்பதை விட எது வராது என்பதில் அவர்கள் உறுதியாக இருப்பது உற்சாகக் குறைவின் முக்கிய காரணம் என்று புலப்படுவதுதான்!
இதனை வெல்ல வழி? குறைபாடுகளே வாழ்க்கை அல்ல! மாறாக, குறைபாடுகளிலிருந்து வெளியே வருவதுதான் வாழ்க்கை!
நம்மை நாமே மதிப்பீடு செய்துகொள்வது என்பது ஒரு சிறந்த ஆரம்பம். நம்மில் ஒளிந்துள்ள சிறப்புத் திறமையை(Talent Spot) க் கண்டுபிடிக்க, நமக்கு எது வரும் என்பதை அடித்தளமாகக் கொண்டு, வாழ்க்கையில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
கணக்கில் நான் ரொம்ப வீக் என்று ஒருவர் சொல்கிறார். கணக்கு என்பது கணக்கிலடங்காத பல உட்பிரிவுகளைக் கொண்டது. இதில் எது வராது என்று பார்ப்பதை விட, எது வரும் என்று பார்ப்பது அவசியம். மனக்கணக்கு வராத மாணவன், ஜியோமிதியில் சூப்பர்! அல்ஜீப்ரா வராத மாணவன் புள்ளிவிவரங்களில் கிங்க்! இது எப்படி இருக்கு?
அறிவுத் திறன் என்பது அனைவரிடமும் உண்டான ஒரு சிறப்பு. இதனை வெளிக் கொண்டுவருவதுதான் ஒருவருக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
நீச்சல் வராத ஒரு மாணவன், ஒரு நல்ல கார் பந்தய வீரராக இருக்க முடியும். அதே போல நூற்றுக்கு நூறு வாங்காத மாணவன் இன்று ஒரு சிறந்த நடிகர் என்று புகழப் படலாம். சர்ஜரி பிடிக்காத டாக்டர் இன்று ஒரு சிறந்த கன்சல்டன்ட் டாக்டர் என்று போற்றப் படலாம். சக்கர நாற்காலியிலிருந்துகொண்டே ஒரு சிறந்த ஆடிட்டர் ஆகலாம்.
இதே போல, கல்லூரி டிகிரியில் ‘ஜஸ்ட் பாஸ்’ மாணவன், துப்பறியும் புலியாகப் போலீசில் பயணம் செல்ல நேரிடுகிறது. பள்ளி என்சிசியில், முட்டி தட்டுது என்று மட்டம் தட்டப் பட்ட மாணவன் ஒரு பெரிய ராணுவ அதிகாரியாகப் பயணிக்கலாம். பள்ளியில் ஓட்டப் பந்தயத்தில் தோற்றவன் கல்லூரி டேபிள் டென்னிஸில் ஸ்டேட் லெவெல் வீரர் ஆன நிஜங்களும் உண்டு.

இதற்குத்தான் நாம் நெகட்டிவிலிருந்து பாஸிட்டிவை நோக்கிப் பயணிக்க வேண்டும். அப்போது தான் நம்மைச் சூழ்ந்துள்ள சுய நம்பிக்கை ஒளிர் விடும்.
இளமையிற் கல் என்பது படிப்பு மட்டும் அல்ல. அனுபவத்தையும் சேர்த்துக் கற்க வேண்டும். அறிவுத் திறன் அனுபவத்துடன் சேர்ந்தால்தான் முதிர்ச்சி புலப்படும்.
‘ஒன்றிற் சிறியர்; ஒன்றிற் பெரியர்’ என்பது அனுபவத்தில் கண்ட உண்மை
திறமையைக் கண்டறிவது எப்படி? வளர்ப்பது எப்படி?
1. நம்முடைய ஆழமான ஈடுபாடு எதில் என்பதைக் கண்டுபிடிக்கவேண்டும்.
2. நமக்கு இது வராது என்பதை மனத்திலிருந்து நீக்க வேண்டும்.
3. நம்முடைய சிறந்த திறமையை இன்னும் மேம்படுத்த வழியுண்டா என்று சிந்திக்க வேண்டும்.
4. திறமையை வளர்க்க அனுபவஸ்தர்களின் அறிவுரைகளை ஏற்க வேண்டும்.
5. அவநம்பிக்கையைத் தவிர்த்து, தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்.
6. சுட்டிக்காட்டப்படும் குறைபாடுகளை ஏற்று அவற்றைத் திருத்திக் கொள்ளுதல் மிகவும் அவசியம்.
7. எத்தனை சிறப்புத் திறன்களைப் பெற்றிருந்தாலும், டீம் உறுப்பினராகச் செயல்படும்போது அனைவருடனும் ஒன்றி நடப்பது மிகவும் முக்கியமான பண்பு.
8. ஏணியின் உச்சியில் உள்ளவர்களின் சத்திய சோதனைகளைப் பாடமாகப் பயில வேண்டும்.
9. வெற்றியின் படியில் நிற்பவர்கள் கொஞ்சம் கடந்து வந்த பாதையை நினைவில் கொள்ள வேண்டும்.
10. வெற்றியின் போதை தலைக்கு ஏறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக,
"எல்லாம் தொலைந்து விட்டது! ஆனால் எதிர்காலம் என்று ஒன்று கண்டிப்பாக நமக்கு இருக்கிறது! விடியலே விரைவில் வா!"
என்ற மனத் திடமும் சுய தைரியமும் வேண்டும். சுய பச்சாதாபம் வேண்டவே வேண்டாம் செல்லங்களே!

எழுதியவர் : லென்ஸ் (24-Aug-20, 1:30 am)
சேர்த்தது : சந்திரா ஐயர்
பார்வை : 104

மேலே