குருங்குடி தீ விபத்து நினைவஞ்சலி

எங்கள் மன்னையில்
எத்தனை சோகம்...

எங்கள் மண்ணிலே
எங்கே ஈரம்...

காலையில் எழுந்து
வீட்டிலும் பம்பரமாய் சுழன்று
வேலைகளை முடித்து
மதிய உணவு தமக்குத்தாமே தயார் செய்து
கட்டைப் பையிலோ காகிதச் சுருளிலோ
பதப்படுத்திய பின்
வெடி தயாரிக்க புறப்பட்ட
தாயவள் அறிந்திருப்பாளா
மதிய உணவு தயாரிக்க வேண்டிய
அவசியமில்லை என்று...!

குட்டி சிவகாசி எனப்
பெருமைப்பட்டுக் கொண்ட
குருங்குடி கிராம மக்கள்
இன்று வெடி தாக்கிட போகிறது என
அறிந்திருப்பார்களா...?

இழப்புகள் அத்தனையும்
அன்னைகளாகவே அமைந்திட
இனி மாற்று அன்னையாய்
அனைத்து அப்பன்களும்
மாற முடியுமா...?

இன்றும் அம்மாவின் மடியில்
உறங்கும் நான்
இன்று பல அம்மாக்களை
பறித்துக் கொண்டு
பிள்ளைகளை
தன்னந் தனியே தவிக்க விட்ட
அந்த இறைவனைப்
பழிக்கிறேன்...
அம்மாவின் அருமை என்னவென்று
உனக்கு தெரியுமா என்று...!

தீபாவளி தினத்தன்று
ஊருக்கே வெடி தயாரித்துக் கொடுத்தவன்
கணக்குப் போடுவான்
வாங்கிய கடனில் எட்டணா
மிஞ்ச வில்லையே வெடி வாங்க என...

வெடி எங்கே என
கேட்ட மகனிடம்
அப்பாவின் கோபம் பாயும்

அந்தத் தருணத்தில்
அம்மா மாறுவாள்
தன்னுயிரை அடகு வைத்தாவது
மகனின் மகிழ்ச்சியை
கண்டு ரசித்திட...

இப்படித்தானே நம்மில் பலபேர்
தீபாவளி கொண்டாடி இருப்போம்...

அதற்குப் பின்னால் இருக்கும்
அப்பா அம்மாவின் தீராத வலிகளை உணராது...

இறந்துபோன அந்த உயிர்களுக்கு
எத்தனை எத்தனை
இழப்பீடு கொடுத்தாலும்
அன்னையவள் போல் ஆகுமா?

இனியும் இதுபோல்
ஒரு கோரம் வேண்டாம்
எம் மண்ணிலே...

எங்கள் மன்னைக்கு மட்டும்
ஏன் இந்த சோகம்...

இறைவா எங்கள் மண்ணுக்கு வேண்டும்
கொஞ்சம் ஈரம்...

மன்னை சுரேஷ்

எழுதியவர் : மன்னை சுரேஷ் (6-Sep-20, 5:51 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 56

மேலே