என் அப்பா மட்டும் தான்

என் அப்பா மட்டும் தான்

முதல் முறையாக நானே சமைத்தேன்!
அதை முதலில் என் அப்பாவிற்கு
அன்பாக அளித்தேன்!
முதல் வாயை சாப்பிட்டு விட்டு..
அருகில் பதிலுக்காக
ஆவலுடன் அமர்ந்திருந்த
என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே
"நல்லா இருக்கு கண்ணு" என்றார்.
என் அம்மாவின் அற்புதமான சமையலையே
பெரிதும் பாராட்டாத அவரின்
அந்த ஒற்றை வாக்கியமே
என் பசியைப் போக்கியது!
எதோ சாதித்த உணர்வு!
சற்று நேரம் கழித்து
நான் சமைத்ததை உண்டேன்..
ஒரு வாய் கூட என்னால்
உண்ண முடியவில்லை..!
என் அம்மாவை பார்த்தேன்..
அந்த நக்கலான சிரிப்பு சொன்னது..
'நல்ல வேலை நீ இத்தனை நாட்களாய்
சமையல் அறைக்குள் வரவில்லை' என்று!
தொலைக்காட்சி கண்டு கொண்டிருந்த
என் அப்பாவைச் சற்று உற்று நோக்கினேன்..
அவர் கண்களில் தெரிந்தது..
நாம் எவ்வளவு மோசமாக சமைத்தாலும்..
'நல்லா இருக்கு சாமி' என்று சொல்லி
முழுவதுமாக உண்பது
இவ்வுலகில் அப்பா மட்டும் தான் என்று..!!
- கனிஷ்கா ஜெயக்குமார்

எழுதியவர் : கனிஷ்கா ஜெயக்குமார் (12-Sep-20, 9:32 pm)
பார்வை : 3497

மேலே