அரைவேக்காடு
காசு கொஞ்சம் சேர்ந்துவிட்டால்
டாட்டாவுக்கும் டாட்டா சொல்வான்!
மெத்தைவீடு கட்டிவிட்டால்
குடிசையெலாம் சேரி என்பான்!
ஆங்கிலத்தை நக்கிவிட்டால்
ஷேக்ஸ்பியரைக் கேலிசெய்வான்!
நாகரீகப் போர்வையிலே
நாளுக்கொரு செருப்பணிவான்!
பணத்திமிரும் அதிகரித்தால்
பிராண்டை மட்டும் மதித்திடுவான்!
சொகுசு வாழ்க்கை சுகத்தினிலே
சொந்தஊரைச் சீண்டமாட்டான்!
குலசாமியை மறந்துவிட்டு
திருப்பதிக்கு விரைந்து செல்வான்!
கூட்டம் கொஞ்சம் கூடிவிட்டால்
தலைவனென்றே தனைநினைப்பான்!
சாதிமதக் குறிகளுடன்
பொதுவெளியில் வெளிப்படுவான்!
தனிஉடைமை தழுவிக்கொண்டு
பொதுவுடைமை பொய்த்திடுவான்!
செவிமடுக்க இசைந்துவிட்டால் ஜெயகாந்தனுக்கும் கதையுரைப்பான்!
கற்பனையைத் தொட்டுவிட்டால்
கம்பனையே குறை சொல்லுவான்!