வீதியோர விண்மீன்கள்
என்றுமே நிலா சோறுதான்
அயில்வது ஓடை நீர் தான்
பாடும் பறவைகள் கூடு அடைய
பாட்டாளி எங்களுக்கோ குரம்பை இல்லை
கூரை வீடு எங்கள் கனவாய்
சிற்றில் கூட சொந்தமில்லை
நடைபாதை எங்கள் மெத்தை
கை கால்கள் எங்கள் போர்வை
உறவியாய் ஒன்றுகூடி
அல்கல் உழைக்கிறோம் – ஆனால்
அசும்பில் புரள்கிறோம்
கந்தல் காழகம் மறைக்கவே
சாக்கு பைகள் நாடுகிறோம்
வயிற்று பசியை போக்கவே
சிலநேரம் கைகள் ஏந்துகிறோம்
அத்தம் ஏதும் தெரியவில்லை
கவ்வை கூற ஏதுமில்லை-உங்களுக்கோ
ஓர்வு செய்ய நேரமில்லை
கட்டுபாடற்ற சகடங்கள்
ஏற்றி நிறுத்த வருவதால்
காவலாளியாய் மாறிவிட்டோம்
உடமைகாக்க அல்ல உயிர்காக்க
ஒரே ஒரு கங்குலாவது
நிம்மதியாய் தூங்க ஏங்கும்
வீதியோர விண்மீன்கள் நாங்கள்....