தவம்

வார்த்தைகளை தேடி மனம் முழுக்க தவம்
கிடைத்த வார்த்தைகளில்
சந்திப்பிழைகள் சண்டைபிடிக்கிறது
சாமர்த்தியமனது வேறு வார்த்தைகளை
தேடுகிறது தவறுணராமல்
கருத்துக்கள் கண்விழிக்கும்போது
உவமைக்குழந்தை ஊமையாகிவிடுகிறது
பாத்திரம் கழுவும் போது கிடைத்த சந்தத்தில்
பொருத்த முனைகையில்
சாத்தியமற்றுப்போன வார்த்தைகளை
கொண்டு எதை எழத
நான்கடி எடுத்து வைத்தபின் கீழே விழும்
மழலையின் நிலைதான்
கருத்தும் உவமையும்
கருத்து வேறுபாடு கொண்ட காதலர்களாய்
தனித்தே வருவேன் என்று அடம்பிடிக்கும்போது
எப்படி எழுத
பஞ்சமற்ற தமிழுக்குள்
மஞ்சம் கொண்ட வார்த்தைகள் ஏராளமிருந்தும்
கொஞ்சமேனும் தந்தால்தானே
எஞ்சியதை முடிக்க முடியும்
மழை நின்றதும் இரைதேடும் பூனையாய் மனது
எவ்வளவு நேரம் இந்த கவிப்பசி தீர்க்க
காத்திருக்க வேண்டும்
சொல்லுங்கள் தோழர்களே
அலுவலக ஊர்தி வந்து விட்டது

எழுதியவர் : இளவல் (3-Oct-20, 3:14 pm)
சேர்த்தது : இளவல்
Tanglish : thavam
பார்வை : 127

மேலே