இது காதல் நதிக்கரை - கே-எஸ்-கலை

பொழிவுறு மாமழை
நலிவுறும் நிலைவரும்
உன் விழிப் பார்வைகள் மலைத்தேன் !
ஒளிர்ந்திடும் சூரியன்
ஒளிந்திடும் குகையென
உன்விழி மூட நான் மலைத்தேன் !

மென்னிதழ் பூவினும்
மென்னிதழ் உன்னிதழ்
மின்னிடும் மின்னலாய் இச்சொல் !
உன் இடம் என் இடம்
ஓரிடம் ஆனபின்
உன்னிடம் பிறப்பது எது(ச்)சொல் ?

கூடுதல் ஊடலே
கூடியே ஆடினும்
கூதலின் கூர்மைக்கு தீ நீ !
ஊடுதல் ஆயினும்
ஊடுதல் காதலென்
உணர்ச்சிக்கு உயிரூட்டும் தீனி !

மென்காலைப் பொழுது
உன் காலைப் பிடித்து
மெய்யன்பை யான்சொல்ல வேண்டும் !
பொய்யான மெய்யுக்குள்
மெய்யான மெய்யொன்றை
மெய்யாலும் யாம்செய்ய வேண்டும் !

பிறப்பில் நீ தேவதை
சுரப்பில் நீ தேன்வதை
பிறகென்ன என்வாழ்வின் வதை ?
அன்பொடு ஒரு கதை
அனுதினம் நீ கதை
அதுவெந்தன் வசந்தத்தின் விதை !

காதலி காதலி
காதலைக் காதலி
கை தட்டும் வான் வந்த நிலவும் !
திருமதி பெறுமதி
வரும்படி விரும்படி
கால் கடந்தும் காதலிது நிலவும் !
-------------------
கே.எஸ்.கலை (இலங்கை)
எழுதியது 13.06.2017

எழுதியவர் : (27-Nov-20, 6:17 pm)
பார்வை : 197

மேலே