தெருவோரத் தேடல் தவிர்

(எயிடஸ் தினக்கவிதை )
====================
பொல்லாப் பசியினைப் போக்கிட லாமெனப்
புல்லைப் புசிக்கா புலிபோலே - இல்லாளே
இல்லா தவரும் இருந்திடு வாரெனிற்
பொல்லாப் பிணிக்கதுவாம் பூட்டு.
**
பூட்டுடைந்த வீட்டில் புகுந்த திருடரெனக்
கேட்டுப் பெறுகின்றக் கேவலத்தை வீட்டிலுள
மாதிடம் விட்டவள் மானத்தை வாங்கிடும்
நீதியற்ற செய்கையை நீக்கு.
**
நீக்குவதை நீக்கி நினைவினில் பேரன்பால்
தாக்குகின்ற தாரம் தழுவாமல் பாக்குவைத்
தப்பால்நோய்க் காரியைத் தீண்டிக் குடிகெடுத்தே
ஒப்பாரி வைக்கா தொதுங்கு.
**
ஒதுங்கி இருந்தே ஒழுக்கமதை பேணின்
பதுங்கி யிருந்திடும் பால்நோ யெதுவும்
உனதுடல் தொற்றி உருக்குலைக்கா தன்றோ
மனத்தில் இருத்தி மகிழ்.
**
மகிழ்வாக வாழ மனமொன்றி யுந்தன்
சகியொடு கூடிச் சமர்த்தாய் சுகிக்க
வருமின்பந் தன்னை விலைகொடுத்து நீயும்
தெருவோரம் தேடல் தவிர்.
**
* மெய்யன் நடராஜ்
(டிசம்பர் 1சர்வதேச எயிடஸ் தினம்)

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (1-Dec-20, 1:31 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 36

மேலே