நாளை எனக்காகவும் விடியலாம்..

சுமந்து வந்த கருப்பு விதிகளைக் கடப்பதற்கு முன்,
வாழ்க்கையின் எல்லையைக் கண்டு விடுவோம்...

வாழ்க்கைப் பாதையின் முட் கம்பிகளில் பட்டு,
கழன்று, சிதைந்து போன சதைத் துண்டுகள் நினைவில் கூட இல்லை.

கடந்து வந்த பாதச் சுவடுகளுக்குள், பளிங்குகளும் முத்துக்களுமல்ல;
சோகங்களும் இரத்தத் துளிகளும் கரையாய் படிந்து விட்டது...

ஓய்வூதியம் கேட்கும் பாதணிகளுக்கு ஓட்டுப் போட்டதில்,
தேய்ந்து போனது இதயவரை..

காலையில் கதிரவனை விட கடன் காரனை எதிர் பார்த்த
கசப்புகளுக்குப் பஞ்சமில்லை.

ஓட்டைக் கூரையும் ஒட்டுத் துணியும்
உழைக்கும் தொழிலாளிகளுக்கு உதாரணமாயிற்று..

சிரித்துப் பேசிய நாட்களைக் குறித்து வைத்திருந்திருப்பினும்,
பரி போன நாட்களை எண்ணிப் பெரு மூச்சு விட்டிருக்கலாம்..

வாழ்க்கை இன்னும் முடியவில்லை.
ஓரிரண்டு மூச்சிலே இழுத்துக்கொண்டிருக்கிறது.
நாளையும் ஒரு விடியல் உண்டு..
அது எனக்காகவும் விடியலாம்..

எழுதியவர் : jiff (5-Aug-10, 10:44 am)
சேர்த்தது : jiff0777
பார்வை : 1291

மேலே