பணம் என்னும் பணம்

பாரினுள் பிறந்தோர் யாவருக்கும்
பகிர்கின்றேன் பாவால் கேளீர்
உணர்வினை ஒழிக்க முயலும்
ஊனினையும் சிதைக்க துணியும்
தாய் தந்தையரை விரட்டியடிக்கும்
தாரமாக்க எவ்வயதினரையும் துணியும்
பஞ்சமா பாதங்களை பெரியதாய் வளர்க்கும்
பழிபாவங்களுக்கு அஞ்சாமல் திரியும்
உணவிட்டோருக்கே உட்பகை செய்யும்
பருவ காலத்திற்கே முரணாய் இருக்கும்
பாசத்தினை கேலி பேசியே ஏசும்
பணமென்ற பெயரால் சுழலும்
கொடை வள்ளல் கையில் சென்றால்
கிடு கிடுவென பஞ்சம் போக்கும்
கொடூரர்கள் பையில் இருந்தால்
கோடி எண்ணிக்கையில் கெடுதல் செய்யும்
சூதடிகளின் கையினில் சிக்கினால்
சுழிநிலையில் வாழ்வை மாற்றும்
உழைக்காதோருக்கு சொத்தாய் சென்றால்
உரிமையை இழந்து அழியவையாக்கும்
அருமை தெரியாதவன் அகத்தை அடைந்தால்
பெரு நிலாவின் பிறையாய் மாற்றும்
கஞ்சனிடம் தஞ்சமடைந்தால்
காலன் கையின் உயிராய் மாறும்
கணக்கில் முறையாய் காட்டாது போனால்
கருப்பு என்ற நிறத்தில் உழலுமே.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (31-Dec-20, 9:40 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : panam ennum panam
பார்வை : 1855

மேலே