மௌனம் கலையட்டும்
மௌனம் கலையட்டும்!!!
பொங்கிவரும் பால்தனில் அழகாய் தோன்றி
சிதறிமறையும் குமிழ் போலே நம்மைத்
தொடரும் இன்னல் யாவும் இன்றே ஓடி
திசையெல்லாம் மறந்து சுவடின்றி மறையட்டும்!
சக்கரையும் தேனும் கலந்தான பொங்கலாய்
தித்திப்பு நிலைபெற்று நம்மோடு இருக்கட்டும்!
கிட்டாதென மறந்த வாய்ப்புகள் யாவும்
வரிசை பிடித்து நம் மனை வந்தே சேரட்டும்!
தமிழுக்குக் கேடு விளைப்போர் சிந்தை
மாறியே சுயநினைவு பெற்றிடட்டும்!
தமிழ்ப்பள்ளி எங்கும் மாணவர் நிரம்பி
பெருகியே நற்கல்வி பயின்றிடட்டும்!
நாட்டின் உயர்கல்வி கூடத்திலே நமது
தமிழ் மணம் குன்றாது கமழட்டும் !
தேவையற்ற சக்கை நீக்கி நல்ல
கருப் பஞ்சாற்றையே அமுதாய்ப் பருகிடுவோம்!
காலம் காணா களவு போன வரலாற்றை
மீட்டிங்கே ஆர் தருவார் ? ஊமையாய்
மௌனித்து யாகம் புரிவரோ?எஞ்சியிருக்கும்
சிற்சில துகள்களும் விரைந்தே மாயமாகுமே;
மௌனச்சாமிகள் அதற்கும் தலையை ஆட்டுமோ?
பொங்கிவரும் பொங்கல் நமது தானா? அன்றி
அதற்கும் குறி வைப்பாரோ ‘ நல்லாரிங்கே?’
நம்மை மீட்க நம் மௌனம் கலைவதெங்கே???
இழந்ததை பாங்குடன் மீட்டு எடுப்போம் ;
நமக்கு உரியதை பத்திரமாய்க் காத்திடுவோம்!
கலை,மொழி,பண்பாடு ,கலாச்சாரம் யாவும்
நமக்கென்று தனி ரகமுண்டு இங்கே
தூக்கி நம்மைக் கனம் பார்ப்பார் உண்டாகின்
ஓங்கி உரைத்திடுவோம்; சான்றினைக் காட்டிடுவோம்!
மறைந்து நின்று மூக்கைச் சிந்தும் போக்கதனை
காற்றில் மறையும் குமிழிக்குள் வைத்தே வெடித்திடுவோம்!!!!

