பொங்கல் என்னும் புதுமைப் பொன்னாள்

தைவரும் பொங்கல் நன்னாள் - இந்த
.....தரணியில் வளம்பல தந்திடும் நாள்!
செய்தொழில் சிறக்க வரும் - ஒளிச்
.....செங்கதிர் செல்வனைப் போற்றிடும் நாள்!
பொய்வளர் பழமையெல்லாம் - தீயில்
.....புகையுறப் போக்கிடும் புதுமையின் நாள்!
வையகம் வாழ்வதற்கே - எங்கும்
.....மணிக்கதிர் விளைப்பவர் உயர்ந்திடும் நாள்!

பொங்கலோ பொங்கலென்றே - இன்பம்
.....பொங்கிடக் குரலெடுத்து இசை முழங்க,
மங்கல மணிகள் கொண்டே - வண்டி
.....மாடுகள் அலங்கரித்து ஆடி வர,
சிங்கத்தின் திறல் உடையார் - இளந்
.....தீரர் வல்லேற்றினை வெற்றி கொள்ள,
எங்கும் ஓர் இன்ப வெள்ளம் - நெஞ்சில்
.....எழுந்திட வந்தது பொங்கல் அம்மா!

எழுதியவர் : இமயவரம்பன் (14-Jan-21, 7:30 am)
சேர்த்தது : இமயவரம்பன்
பார்வை : 944

மேலே