பாவேந்தர் கொட்டும் புதுமுரசு

பாவேந்தரின் பாடல் ஒவ்வொன்றும் மடமை என்னும் காட்டை அழிக்கும் அக்கினிக் குஞ்சு; புதுமை என்னும் தென்றல் வீசும் செழுங்கவிதை; உலகின் இருளைக் கெடுக்கும் எழில் விளக்கு – இவ்வாறு பாவேந்தரின் கவிப்பெருமையை சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்தப் பதிவு புரட்சிக் கவிஞரின் நற்புகழை வெண்பாவில் சொல்ல நான் செய்த சிறு முயற்சி!

தோளை உயர்த்தித் தொடடாவவ் வானத்தை
வாளை உயர்த்தியிவ் வையங்கொள்! – மாளாத
புத்துலகம் காணப் புதுமறைசெய்! என்றறைந்தார்
முத்தமிழ்ப்பா வேந்தர் முரசு.

தமிழென்னும் வாளெடுத்துச் சாதிவேர் சாய்த்துச்
சமயச் சடங்கெதிர்த்துச் சாடி – இமயச்
சிகரம்போல் நின்றொளிரும் செந்தமிழ்ப்பா வேந்தர்
புகழ்கொள் புரட்சிக் கவி.

தாளாத் துயர்கொடுக்கும் சாதிமதச் சண்டையிலே
நாளும் நலமிழக்கும் நானிலத்தீர் – கேளுங்கள்!
பாரொன்றப் பாட்டிசைத்தப் பாவேந்தர் சொல்மறந்தீர்,
யாரும்மைக் காப்பார் இனி?

எழுதியவர் : இமயவரம்பன் (18-Jan-21, 1:21 am)
சேர்த்தது : இமயவரம்பன்
பார்வை : 59

மேலே