சொல் நகரும் கவிதை

அச்சொல்
தன்னை தொலைக்க
வரிகளில் நிசப்தம்.

வழிந்த கண்ணீரில்
ஒழுகும் இரவொன்றில்
அச்சொல் நனைய
வரிகளில் சப்தம்.

எங்கோ நிகழ்ந்து
முடிந்த மரணத்தின்
சடை பிடித்த பகலில்
அச்சொல்  திகைக்க
வரிகளில் தயக்கம்.

யாருமற்ற நாக்கொன்றில்
துயிலும் அச்சொல்...
கனவின் வர்ணத்தில்
ருசி முதிர்ந்து விழிக்க
வரிகளில் மயக்கம்.

அலையும் காற்றுக்குள்
அலையும் கவிதைக்குள்
அலையும் மனதுக்குள்
அலையும் அச்சொல்லில்
அலைகிறேன் நான்
வரிகளில் நழுவியவாறு.

எழுதியவர் : ஸ்பரிசன் (29-Jan-21, 4:30 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 511

மேலே