அண்டம் கண்டம் பிண்டம்

அண்டம் கண்டம் பிண்டம் அழகு தமிழ் சொற்கள்
அந்தரத்தில் பல துண்டுகளாய் உள்ளனவே அண்டம்
ஒன்றாய் இருந்தவை சிதைந்து பிரிந்ததுவே கண்டம்
அண்டம் கண்டம் இரண்டையும் கொண்டதுவே பிண்டம்

பள்ளம் கள்ளம் உள்ளம் அழகு தமிழ் சொற்கள்
சமநிலையின் குழிவே பள்ளம் எனப்படும்
உள்ளும் புறமும் வெவ்வேறு செயல்பாடே கள்ளம்
கள்ள எண்ணத்தால் பள்ளமாகும் இடமே உள்ளம்.

விண் மண் கண் அழகு தமிழ் சொற்கள்
கதிரவன் மூலமாய் பிற கோளின் சுழலிடமே விண்
கதிரவன் நெருப்பாய் பிற கோள்களோ மண்ணாய்
விண்ணையும் மண்ணையும் பார்க்கும் ஊடகமே கண்.

பஞ்சம் தஞ்சம் நெஞ்சம் அழகு தமிழ் சொற்கள்
ஐந்து பூதங்களின் நிறைவால் குறைவாலாவது பஞ்சம்
இதைக்களைய செழிப்பிடம் நோக்கிய நகர்வே தஞ்சம்
பஞ்சத்தால் தஞ்சமடைவோரை காப்பதே நன்நெஞ்சம்

பிடிப்பு படிப்பு நடிப்பு அழகு தமிழ் சொற்கள்
பிறப்பினால் பிறந்த நாட்டின் மீது வருவது பிடிப்பு
அறிவு வேண்டி அகிலத்திலக்கணம் கற்பதே படிப்பு
பிடிப்பினால் படித்து அயல்நாட்டில் குடியமர்தலே நடிப்பு

எம்மொழியே எதனையும் குருதியில் கலக்கும்
ஏகாந்த சொற்கள் கொண்ட ஆதி மொழியாம்
எந்நிலையிலும் இதன் உண்மை பொருளறிந்து
ஏற்றுக்கொண்டோர் வாழ்வில் வருவதில்லை கேடாம்.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (10-Mar-21, 9:37 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : andam kandam pindam
பார்வை : 97

மேலே