காலம் மாறிடுச்சி

காலம் மாறிடுச்சி! (பெண்)
(பெண் குழந்தைகளைக் காப்போம்)
எள்ளில் எண்ணெயைப் போல்
எனக்குள் நீயிருந்தாய்!
அல்லி மலர்போலே
அழகாய் பிறந்தவளே! -உன்
அருமை அறியலயே!
கள்ளிப் பால்கொடுத்து - சுடு
காட்டிற் கனுப்பி விட்டோம் !
துள்ளி விளையாடி எங்கள்
துயரெல்லாம் துடைச்சிருப்ப !
துணை இன்றி நான்வாட
தனிச்சு நிற்கின்றேன்!
வெள்ளிக் கொலுசணிந்து
வீதியிலே வந்திருப்ப!
விவரம் புரியாம - உனை
விண்ணுக்கு அனுப்பிவிட்டோம்!
வெள்ளி நிலவாக
வெளிச்சம் கொடுத்திருப்ப !
விவரம் புரியலையே?
வீதியிலே நிற்கிறேனே!
பள்ளி சென்றுநிதம்
பாடம் படிச்சிருப்ப!
பாவிகள் நாங்களடி! உனைப்
பாடையிலே ஏற்றிவிட்டோம்!
மல்லிப் பூச்சூடி
மகிழ்ந்திருக்க எண்ணாமல்
நெல்லை உனக்களித்து- மூச்சை
நிறுத்தி விட்டோம்!
கல்லில்மனம் படைத்தோம்!
கருணை இல்லையடி!
கன்னிப் பெண்களெல்லாம்
காக்கி சட்டைப் போட்டு
காவல் புரிகின்ற
காலம் வந்தாச்சு!
விண்ணில் பறக்கின்ற
விமானம் ஒட்டியிருப்ப!
வெள்ளி நிலவினிலே
வெற்றிநடை போட்டிருப்ப!
கல்லூரிச் சென்று
கணிப்பொறியும் படிச்சிருப்ப!-புதிய
கருவிகளை நீதானே
கண்டும் பிடிச்சிருப்ப!
உயிர்காக்கும் மருத்துவத்தில்
உயர்கல்வி படிச்சிருப்ப!
போகும் உயிரையும் நீ
புடிச்சி வச்சிருப்ப!
மகளே நீயும்தான்
மந்திரி ஆயிருப்ப!
மந்திரி ஆயிருந்தா -நாட்டு
மக்களை காத்திருப்ப!
அடியே உன்ஆத்தா
அரிச்சுவடி எடுக்கவில்லை!
அரைவயிறு கஞ்சிக்கே
அன்றைக்கு வழியில்லை!
கலங்கிப் போனதினால்
கள்ளி பால்கொடுத்தேன்!
கல்யாணம் நினைச்சுத்தான்
கண்ணே உயிர்பறிச்சேன்!
ஏழை எங்களுக்கு
ஏன்புள்ளே நீபொறந்த!
காலம் மாறிடுச்சு! ஆனாலும்
அந்த காயம் ஆறவில்லை. -என்
கண்ணே உனைநினைத்து
கலங்கி அழுகின்றேன்!
- கவிஞர் க.இராசன்
(பெண் குழந்தைகளை காப்போம்)