வெற்றியின் ஏணி கட்டுரைகள் நூல் ஆசிரியர் கவிபாரதி மேலூர் மு வாசுகி நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

வெற்றியின் ஏணி! (கட்டுரைகள்)

நூல் ஆசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


நூல் வெளியீடு : மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை-6000 17. பக்கங்கள் : 112 விலை : ரூ.70.

*****
கவிபாரதி மு. வாசுகி அவர்கள் மாமதுரைக் கவிஞர் பேரவையின் கவிதைப் போட்டியில் வென்று விருதுகள் பெற்றவர். பல்வேறு கவிதைப் போட்டிகளிலும் பரிசுகள் பெற்றவர்.

இவருடைய நான்காவது நூல் ‘வெற்றியின் ஏணி’. ஒரு சிறந்த கவிஞர், சிறந்த கட்டுரையாளராகவும் உயர்ந்து இருக்கிறார், பாராட்டுகள். வாழ்ந்துவரும் மேலூர் என்ற ஊருக்கே பெருமை சேர்த்து வருகிறார். முதுமுனைவர் வெ. இறையன்பு, தமிழ்த்தேனீ இரா. மோகன் மற்றும் எனது நூல்கள் என பல்வேறு நூல்களுக்கும் மிக விரிவான, ஆழமான, அறிவான மதிப்புரைகள் எழுதி உள்ளார். இணையங்களிலும் பதிவு செய்துள்ளேன்.

இல்லத்தரசியாக இருந்துகொண்டே கவிதை அரசியாகவும், கட்டுரை அரசியாகவும் வலம் வருகின்றார். ஒரு நூல் வாசிப்பதற்கு முன் இருந்த மனநிலை வாசித்து முடித்தபின் உள்ள மனநிலை, இந்த மனநிலையின் முன்னேற்றமே வளர்ச்சியே நூலின் வெற்றியாகும். தன்னம்பிக்கையை விதையாக விதைத்து விருட்சமாக வளர வைத்து விடுகிறார். பல்வேறு நூல்கள் வாசிக்கும் வழக்கம் இருப்பதால் வெற்றித் தகவல்களை, சாதனைச் செய்திகளை மேற்கோள் காட்டி வாசகர்களை ஏணியில் ஏற்றி உச்சிக்கு கொண்டுவந்து வைத்து விடுகிறார், பாராட்டுகள்.

இனிய நண்பர் கவிஞர் ஏகலைவன் வரவேற்பு தோரணமாக வாழ்த்துரை வழங்கி உள்ளார். நன்று. 20 கட்டுரைகள் உள்ளன. கட்டுரைகள் சிறிய அளவிலேயே இருப்பதால் படிப்பதற்கு விறுவிறுப்-பாகவும் சுவையாகவும் உள்ளன. தெளிந்த நீரோடை போன்ற நல்ல நடை. ஒரு கட்டுரை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக உள்ளன, நன்று.

வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம் என்று பாடிய தாராபாரதியின் வைர வரிகளை நினைவூட்டும் விதமாக டால்ஸ்டாய் சொன்ன சொற்களை நினைவூட்டியது சிறப்பு.

“இளைஞனே உன்னிடம் விலைமதிக்க முடியாத உறுப்புகள் இருக்கின்றன. அவை தாம் உனக்கு மூலதனம். அவற்றைப் பயன்படுத்தி உழைக்கத் தொடங்கு, படிப்படியாக முன்னேறலாம்.”

பணக்காரனாகப் பிறக்கவில்லையே, அப்பாவிடம் சொத்து இல்லையே என்று ஏங்கும் இன்றைய சோம்பேறி இளைஞர்கள், கவனத்தில் கொள்ள வேண்டிய வைர வரிகள்.

உழைப்பே உயர்வு தரும், மனவலிமை முக்கியம், தன்னம்பிக்கையே சிறப்பு. இப்படி நூல் முழுவதும் நேர்மறையான எண்ணங்களை பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி அறநெறி வலியுறுத்தும் நல்ல நூல்.

மிக நேர்த்தியாக பதிப்பித்து உள்ள மணிமேகலைப் பிரசுரத்திற்கு பாராட்டுகள். தொடர்ந்து கவிபாரதி மேலூர் மு. வாசுகி அவர்களின் நூல்கள் மணிமேகலை பிரசுரத்தில் வெளிவருவது கூடுதல் சிறப்பு. காந்தியடிகள், அறிஞர் அண்னா, அப்துல் கலாம், விவேகானந்தர் என பலரையும் மேற்கோள் காட்டி பொருத்தமான இடங்களில் பொருத்தி எழுதியுள்ள கட்டுரைகள் நன்று.

நூலின் தலைப்பே நற்பண்பை விதைக்கும் விதமாக கட்டுரைகளின் தலைப்புகள் மேன்மைப்படுத்தும் விதமாக உள்ளன.

உழைப்பே உயர்வு தரும், நூலும் வாழ்வும், தலைக்கனமில்லா தலைமைப் பண்பு, தாழ்வு மனப்பான்மையை அகற்றுவோம், மாற்றுத் திறனாளிகளைப் போற்றுவோம், வேண்டும் விசுவாசம் – இப்படி கட்டுரைகளின் தலைப்பைப் படித்தாலே கட்டுரை முழுவதையும் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் நயம்பட தலைப்புகள் சூட்டி உள்ளார்.

“காயமும் கவலையும் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் இடையே ஏற்படாமல் இருக்க மதிநுட்ப பேச்சு மிகவும் அவசியமாகிறது”.

மகிழ்ச்சி தரும் மதிநுட்பப் பேச்சு என்ற கட்டுரையின் முடிப்பில் முத்தாய்ப்பாக இந்த வரிகளை எழுதி உள்ளார். தலைப்பு, தேர்ந்தெடுப்பு, தொடுப்பு, எடுப்பு, முடிப்பு என அனைத்திலும் முத்திரை பதிக்கும் வண்ணம் முத்தாய்ப்பாக எழுதி உள்ளார். இந்த நூல் பத்தாயிரம் பரிசு பெற்று இருக்கும் மகிழ்வான தகவலையும் தெரிவித்து இருந்தார்கள். இந்நூலிற்கு இன்னும் பல பரிசுகளும் பாராட்டுகளும் நூலாசிரியர் கவிபாரதி மேலூர் மு. வாசுகி அவர்களுக்கு கிட்டும்.

ஒவ்வொரு கட்டுரையின் முடிப்பு முத்தாய்ப்பு, தமிழ்த்தேனீ இரா. மோகன் அய்யாவின் நூல்கள் படித்துள்ளார். அவரைப்போல இவரது எழுத்திலும் சிறப்பு உள்ளது, பாராட்டுகள்.

“இவ்வுலகில் ஒவ்வொரு சாதனையாளரும் தங்களின் எண்ண வலிமையால் உயர்ந்தவர்களே, எனவே நல்லெண்ணங்கள் பெற்றிடுவோம்! நாளைய சாதனைக்கு வித்திடுவோம்! எண்ண அலைகள் என்ற கட்டுரையின் முடிப்பில் வந்த கடைசி அலை மனதில் எண்ண அலைகளை உருவாக்கும் வலிமை மிக்க வைர வரிகள்.

படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் வாழ்வில் நிகழ்ந்த மகிழ்வான நிகழ்வுகளை திரும்பத் திரும்ப மலர்விக்கும் விதமான அற்புத எழுத்து, பாராட்டுகள்.

அங்கீகாரத்திற்கு ஏங்காதே என்ற கட்டுரையின் இறுதி வரிகள்! இதோ! அங்கீகாரத்திற்காக நீ ஏங்குகிறாய்! சில சாதனையாளர்களோ, ‘அங்கி’ கூட இல்லாமல் வாழ்கின்றார்கள். தொடர் முயற்சிகளை செய்து கொண்டேயிரு. மலர்மாலை உன் கழுத்தை அலங்கரிக்கும். உன் சிரம் தேடி கிரீடம் புன்னகைக்கும்”. நூலாசிரியருக்கு இந்த நூலிற்காக பரிசுக்கிரீடம் தேடி வரும்.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (25-Mar-21, 8:20 am)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 234

மேலே