ஹைக்கூ ஆற்றுப்படை நூல் ஆசிரியர் கவிஞர் இரா இரவி நூல் விமர்சனம் பெ ராம்குமார்

ஹைக்கூ ஆற்றுப்படை !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !



நூல் விமர்சனம் : பெ. ராம்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.

நூல் வெளியீடு : மின்னல் கலைக்கூடம்,
117, எல்டாம்ஸ் சாலை,சென்னை – 600 018.

பக்கம் : 96. விலை : 96 பதிப்பு ஆண்டு : 2010



*****

“பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறுத்தும் புகழ்த்தன்மை கொண்டது ஆற்றுப்படை”. ஹைக்கூ கவிதைகளின் இலக்கியப் பெருவளத்தை வாசகனுக்கும் படைப்பாளனுக்கும் ஆற்றுப்படுத்தும் புதிய முயற்சியில் “ஹைக்கூ ஆற்றுப்படை” எனும் நூலைப் படைத்த கவிஞர் இரா. இரவி அவர்களுக்கு முதற்கண் வாழ்த்துக்கள்.

படைப்பாளனின் படைப்பு வாசகனின் ஆழ்மனதைக் கவர்ந்து, படைப்பு முழுவதும் பயணிக்க, அதன் உள்ளடக்கம் துணை நிற்கின்றது. அதேப் படைப்பு அவ்வாசகனால் விமர்சனத்திற்கு உட்படும் பொழுது படைப்பும் வெற்றியடைகிறது. அப்படைப்பாளனும் வெற்றி-யடைகிறான். 26 தலைப்புகளில் (படைப்புகளில்) .... படைப்பாளிகளை அறிமுகம் செய்து அவர்களின் படைப்பு பெருவளத்தை தான் பெற்று, பெறாத இவ்வுலக வாசகனுக்குப் படைத்தளித்த திறம் போற்றுதற்-குரியது.

நூலின் அட்டைப்படம், ‘வழியறியாத ஒருவனுக்கு நீண்ட பாதையைக் காண்பிப்பது போன்று’ ஹைக்கூ என்பது அறியாத ஒருவனுக்கு ஹைக்கூ வானில் சிறகடிக்க வழிகாட்டும் விதமாக தெரிவு செய்தது, தலைப்பிற்கேற்பப் புதுமுயற்சி. இரா. மோகன் அவர்களின் அணிந்துரை நூலின் உள்ளே பயணிப்பதற்கு வாயிலாக அமைந்துள்ளது.

மூன்றடிகளால் உலக நிகழ்வை தன் உள்ளடக்கமாகக் கொண்டு உருப்பெறுவது ஹைக்கூ. சிலர் இந்த ஹைக்கூவை இன்றளவும் குறை கூறியவண்ணம் இருந்து வருகின்றனர். இத்தகைய குறை சொல்லும் மேதைகளுக்கு ஆசிரியர்,

“ஹைக்கூ கவிதையைக் கிண்டல் செய்து கேலி பேசியவர்களின் கன்னத்தில் அறையும் விதமாக இந்நூலானது வந்துள்ளது”.

“ஹைக்கூவை பொய்கூ என்றவர்களின் முகத்திரையை கிழிக்கும் வண்ணம்” போன்ற வரிகளால் ஆசிரியர் ஹைக்கூ மீது கொண்ட மாளாக் காதல் வெளிப்படையாகின்றது.

ஹைக்கூ படைப்பாளிகளின் படைப்புகளுக்கு ஆசிரியர் திறனாய்வாளனாக மட்டுமல்லாமல் சிறந்த உரையாசிரியராகவும் திகழ்ந்துள்ளார். ஹைக்கூ கவிதைக்கு உள்ளார்ந்த உட்பொதிந்துள்ள செய்திகளை இரா. இரவி சிறந்த விளக்கங்களின் மூலம் வாசகர்களுக்கு தெளிவாக்கியுள்ளார். குறிப்பாகத் தமிழகத்தில் எத்தனையோ கோவில்களும் கடவுள்களும் இருக்க, தமிழர்கள் ஆந்திராவில் உள்ள திருப்பதிக்கும், கேரளாவில் உள்ள சபரிமலைக்கும் சென்று பணத்தையும் நேரத்தையும் விரையம் செய்து வருகின்றனர். இது நோய் போல பரவி விட்டது” என்று ................................,

“பருவ காலம்
தமிழின நோய்
சாமியே சரனம் ஐயப்பா”

என்ற ஹைக்கூவிற்கு விளக்கவுரை போன்ற நம் கருத்துரையை வழங்கியுள்ளார். இது ஒருவகையில் திறனாய்வாளரின் துணிவிற்குச் சான்று. இன்று மதம் சார்ந்த செய்தியினை பேசுவதற்கே அச்சமுறும் படைப்பாளிகளின் மத்தியில் ஆசிரியரின் இத்தன்மை வியக்கத்தக்கது. சில இடங்களில் இரவி அவர்கள் உழைப்பாளி வர்க்கத்தின் வாழ்வியல் சிக்கல்களை தனது சிந்தனை வரிகளில் வெளிப்படுத்தியதும் அவரது ஆழ்மனத்தின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.

திறனாய்வு என்பது நடுநிலையாளனின் மனத்தொழிற்சாலையில் உற்பத்தியாகும் உன்னதப் பொருள். அத்தகு நோக்கில் ஆசிரியரின் நடுநிலைத் தன்மை.

“நூலில் நிறைவு தான் உள்ளது, குறையே இல்லை படித்துப் பார்த்தால் வாசகர்கள் உணர்வார்கள்”.

“தரமான ஹைக்கூ நூலில் புணர்ச்சி பற்றிய தரமில்லாத ஒரு ஹைக்கூவைத் தவிர்த்திருக்கலாம். அவரையும் அறியாமல் அதில் ஓர் எழுத்துப்பிழையும் உள்ளது.”

என்று சிறுபிழைகளைக் கூட சொல்ல வேண்டிய முறையில் கூறும் ஆசிரியர்,

“மறுபதிப்பில் ஊனமுற்றோர் என்ற சொல்லை நீக்கிவிட வேண்டும்”

என்று படைப்பாளனின் தவறை நிழல் போல நடுநிலையில் நின்று உணர்த்தும் தன்மை சிறப்பாக வெளிப்படுகின்றது.

படைப்பாளிகளில் பெரும்பான்மையும் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களே அல்லாமல் புதுவை சார்ந்த படைப்பாளிகளுக்கும் முதன்மை கொடுத்து, தமது நூலில் சேர்த்ததற்கான விளக்கமும் கொடுத்துள்ளார்.

திறனாய்வு என்பது வெறுமனே ஆய்வாக மட்டுமல்லாமல் சில இடங்களில் வாசகனுக்கு அறிவுரை கூறும் பாங்கிலும், தான் எடுத்துக் கொண்ட பொருள் கூறிடும் முறைக்கு வள்ளுவன், பாரதி, அப்துல் கலாம் என அனைவரையும் துணைக்கழைத்த எடுத்துரைப்பியல் நோக்கு தெளிவான முயற்சியாக அமைந்துள்ளது சில இடங்களில் எழுத்து பிழைகள் (22, 31, 55, 62, 72, 73, 80, 83,..........) இருப்பினும் வாக்கியப் பிழை என்பது நூல் முழுவதும் காணப்படவில்லை. ... படைப்புகளைக் குறைத்து படைப்பாளனின் திறனை மேலும் நுணுக்கமாக கூறியிருக்கலாம். இருப்பினும் ஆற்றுப்படை நூல் எனும் காரணமாகவோ என்னவோ, பானை சோற்றில் ஒரு சோற்றுப் பதத்தைக் கொடுத்து விட்டார் ஆசிரியர். சில இடங்களில் கூறியது கூறல் இருப்பினும் திறனாய்வு நூலிற்கு பெரும்பான்மையும் பெரும் பிழையாக தெரியவில்லை.

கடந்த காலம், நிகழ்காலம் என இவ்விரு காலத்தையும் பின்னணியாகக் கொண்டு படைப்புருவாக்கம் பெரும் படைப்புகளில் அடிநாதம் எதிர்காலத்தில் வளமான சமூகத்தை உருவாக்கும் நோக்கமே ஹைக்கூ ஆற்றுப்படை எனும் இந்நூல். எதிர்காலத்தில் சமூகத்தின் மதிப்புமிக்க ஒரு சிறந்த ஹைக்கூ வாசகனையும், ஹைக்கூ படைப்பாளனையும் உருவாக்கும் முயற்சியே என்பது நிதர்சனமான உண்மை. இதற்கு ஆசிரியரும் விதிவிலக்கல்ல. “துளிப்பாவின் தூதன்” என்று இரா.இரவி அவர்களைக் கூறுவதில் ஒப்பற்ற மகிழ்ச்சியடைகின்றேன். ஆசிரியரின் முயற்சி பன்மடங்கு உயர வாழ்த்தி வணங்குகிறேன்.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (23-Mar-21, 9:26 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 71

மேலே