காலம் கடந்த ஞானம்

தூய வானை
வேடிக்கை பார்க்கும்
தொலைந்த நட்சத்திரம் நான்...

கண் முன்னே இருந்தும்
சென்றடையும் வழி தெரியாமல்....
தத்தளித்து நிற்கிறேன்...

இதுவரை பயணித்த தூரம்
புரிந்துவிட்டது...
இன்னும் செல்ல வேண்டிய தூரம்
எவ்வளவு என்ற கணக்கு
மட்டும் பிடிபடாமல்...

மானுட பிறவி
எடுத்தோம்...
எதற்கோ?!!!
தான் வாழ
பிற உயிர்களை
வீழ செய்வதற்காகவோ?

பெண் என்றாலே
அவளை போதை பொருளாய்
பாவிக்கச்செய்யும்
அரக்க கூட்டம் ஒன்று...
அந்த அரக்கர்களுக்கு
இரக்கம் காட்டி...
வக்காலத்து வாங்கும்
சில பிணந்தின்னி கழுகுகள்...

பிறர் முதுகில் குத்துவதையே
பிரதான குணமாக
கொண்டிருக்கும்
சில வேடிக்கை மனிதர்கள்
அறிந்திருக்க வாய்ப்பில்லை...
எல்லா செயல்களுக்கும்
செய்வினை என்ற ஒன்று
காத்திருக்கிறது என்று....

நல்ல செயல்களை
செய்யக்கூட
இங்கு
சில விலைகளை
கொடுக்க வேண்டியிருக்கிறது...
அந்த விலை
சில நேரங்களில்
தன்மானமாகவும்
சில நேரங்களில்
உயிராகவும் கூட
இங்கு வசூலிக்கப்படுகிறது....

காடுகளை அழித்து
அழகிய நகரங்களை உண்டாக்கிய
மமதை...- அது
நகரம் அல்ல நம்மை விழுங்க
காதித்திருக்கும் நரகம்
என்று இன்னும் உணராமலே....

சுவாசிக்கும் காற்றில் கூட
வஞ்சகம் இல்லாமல்
நஞ்சை கலந்தாயிற்று....
இனி இயற்கை சுவாசம்
என்பதைக் கூட
வருங்காலத்தில்
கூகிள் செய்து
தெரிந்துக்கொள்ள நேரும் போல...

நீர்நிலைகளை எல்லாம்...
கட்டிடங்களும்
குப்பைத் தொட்டிகளும்
நிறம்பிக் கிடக்கின்றன...
பல தொண்டைகளில் ஈரம்
வற்றிய நிலையில்....

வளங்களை வாரி வாரி
வழங்கும்
இப்பூமித் தாயின்
கறுவைக்குள்
இருக்கும் வளங்களை
எல்லாம் கருவருத்து
மலாடாக்கி விட்டு
என்னவென்று வாழப்
போகிறதோ
இந்த மானிடப் பதர்கள்....

வாரி வாரி வழங்குகின்ற
இயற்க்கை அன்னை....
பல காயங்களுக்கு மத்தியிலும்
அரவணைக்கவே கரங்களை
நீட்டுகிறாள்
மீண்டும்...மீண்டும்....
துண்டிக்கப்பட்டுக் கொண்டிருப்பது தெரிந்தும்...
அன்னையல்லவா?!!

பிறவி எனும்
கிளையின் நுனியில்
நின்றுக்கொண்டு...
அதை அறுக்கும்...
மூடர் கூடம்...
விழுந்தால்
பாதாளம் வரை
செல்ல நேரும்
என்பதனை
அறிந்தும் அறியாமலேயே...

காலம் கடந்த ஞானம்
காற்றில் உலர்ந்து போகும்
ஈரம் போன்றது....
இனியும்
விழித்துக் கொள்ளவில்லை
என்றால்
உலகம் என்ற ஒன்று
இருந்ததாக
வேற்று கிரகத்தின்
வரலாற்று நூலில்
இடம் பெற்றிருப்போம்....

இந்த மூடர் கூடத்தில்
தொலைந்த நட்சத்திரமாய்
இருப்பதை காட்டிலும்....
மீண்டும் அன்னையின்
கருவறைக்குள்
தஞ்சம் புக துடிக்கும்
நான்...

எழுதியவர் : தேவிராஜ்கமல் (20-Apr-21, 6:31 am)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
பார்வை : 82

மேலே