வலசை போனாயோ
சிறுவயதுதனில்
தினமும் உன்
கொய்ங்க் கொய்ங்க் சத்தமே
எனை எழுப்பும் ....
எத்தனையோ நாள்
கையில் பிடிக்க முயன்றும்
ஒருநாளும் அகப்பட்டதில்லை .....
வாஞ்சையுடன் அரிசிவைத்தும்
எச்சரிக்கையாகவே
அருகில் வந்தாய் ஆரம்பத்தில் .....
உன்கூடு பொந்ததில்
கைவிட்டு பிடிக்க முயன்று
தந்தையிடம் அறைவாங்கியது அதிகம் .....
அவருக்கு பெரிதாய்
உன்மீது ஈர்ப்பில்லை .....
இருந்தும் உனைதொந்தரவு
செய்யும் எண்ணமுமில்லை ......
விடுமுறை தினங்களில்
மதியவேளையில் அரிசிதூவி
காத்திருப்பேன் ......
நீயோ அழைப்புமணி அடித்தாற்போல்
கொய்ங்க் என்று பறந்துவந்து
குதித்து குதித்து உண்பாய் ....
உலகை வென்ற மாவீரனாய்
உவகை கொள்வேன் .....
பள்ளி நாட்களில்
உணவருந்தாமல் உன்உறவு பற்றியே
எண்ணியிருப்பேன் .....
நண்பர்களிடம் உன்புகழ்பாடி
பெருமை கொள்வேன் ......
மாலை வீடுதிரும்பியதும்
உன்கூட்டில் உனைகண்டு விட்டுதான்
விளையாடச் சென்றேன் .....
நாள்முழுதும் வீட்டிற்குள்
அங்குமிங்கும் பயமின்றி
சுற்றித்திரிவாய் ....
சொல்லப்போனால் அந்தவீடு
நம்மிரு குடும்பத்திற்குமே சொந்தம் .....
சோடியாயிருந்த நீ
குடும்பமாய் மாற
வேறென்ன குதூகலம் வேண்டுமெனக்கு ....
அரிசி செலவுதான் அதிகமானது
என் தந்தைக்கு .....
நீ அடைகாக்கும் தினங்களில்
பூனையின் நடமாட்டங்கண்டு
பதறியதை பார்த்து
பலமுறை கல்லெடுத்து
அடித்திருக்கிறேன் அப்பூனையை ....
அப்பாவிப்பூனையது சுண்டெலிக்குச்
சுற்றுவதை அறியாமல் ......
தந்தையில்லா நேரங்களில்
உன் குச்சிக்கூட்டுற்கு அடியில்
இதமாயிருக்க தேங்காய்நாறுதனை
வைத்துவிட்டிருக்கிறேன் மெதுவாக ....
உறவுபூண்டு உற்சாகமாய்
தானிருந்தோம் வெகுகாலம் ...
குடும்பம் பெருத்ததால்
குடிமாறிப்போனாயே என்னவோ .....
சிலநாட்கள் உனைத்தேடி
தெருவெல்லாம் நான்சுற்றி
கண்ணில் நீருடன் நிற்க
மூத்த தமையன் உரைத்தார்
பறவைதனின் இடநகர்வுபற்றி ....
வந்துவிடுவாய் என எனைத்தேற்றினார் ....
நம்பித்தான் காலம் நகர்ந்தேன்
இருந்தும் பயனில்லை ......
வேனிற்காலமதில்
மூத்ததமையன் தேங்காய் சிரட்டைதனில்
நீர்வைக்க ....
நானோ வீட்டில் வடித்த
பச்சரிசாதம் வைக்க
ஒன்றுகூடி உண்போமே ....
மறந்துவிட்டாயோ ....
எங்கிருக்கிறாய்
என்சிட்டுக்குருவியே .....
வலசை போன பாதைதனை
மறந்தாயோ .....
இன்னும் வீடுதிரும்பாமல்
இருக்கிறாயே .....
நீ கட்டிவைத்த கூட்டிடம்
நித்தமும் கேட்கிறேன் ......
முகவரி முழுதாய் தெரியுமா
உன் முதலாளிக்கு என .....
பெரும்பயணம் ஏதும்
மேற்கொள்ளா பறவையே
காலப்பயணத்தில்
கரைத்துவிட்டாயோ .....
கலங்கி நிற்கிறேன்
ஒருமுறையாவது வீட்டிற்கு
வந்து செல் ........