அன்றொரு நாள்

அன்றொரு நாள்
கீழ்வானில் எழுந்தவன்
தன் சுடர்விழிப் பார்வைகளால்
கொஞ்சம் சுட ஆரம்பித்த நேரம்
ஓர் ஓட்டு வீட்டின் எதிர் சாலை ஓரம்
சிறு தூரத்தில்
மழைதரும் கார்முகில்
இப்ப வருமோ? எப்ப வருமோ? என்று
வான் பார்த்த நிலம்போல்
நான் காத்திருந்தேன்.,

அவ்வழி வந்தவர்களில்
எனை அறிந்தோர்
ஏன்? இங்கே என்று
தொல்லை செய்து நகர்ந்தார்கள்
அறியாதோர்
நமக்கு ஏன்? தொல்லை என்று
எனைக் கடந்தார்கள்.,

எங்கோ? ஓர் இடத்தில்
மழை வரப் போவதை
என் தேகத்திற்கு
விசிறி வீச வந்த தென்றல்
குளிர்வழி
ஒரு குறுஞ்செய்தி அனுப்பியது
வானம் என்ற தபால்காரன்
ஒலி, ஒளி அஞ்சல்களை
எடுத்துக் கொண்டு
பூமியோடு சேர்த்து எனக்கும் சேர்த்தான்.,

இதுபோல் எனக்கும்
ஒரு குறுஞ்செய்தியோ? அஞ்சலோ?
வந்து விடாதா என்று
இமைநீங்கக் காத்திருந்தேன்.,

இந்த உலகத்தில்
எத்தனை சத்தங்கள் நிறைந்திருப்பினும்
எனக்கு மட்டும்
ஏதோ? ஒரு பேரமைதி
என் உயிர்த்துடிக்கும் ஓசையோ?
நன்றாய்க் கேட்கிறது
எனக்குப் பின்னே உள்ள
ஓர் அசோக மரத்தில்
அதன் காம்பிலிருந்து
ஒரு பூ உதிர்ந்து
இலைகளில் விழுந்து விழுந்து
தட்டுத் தடுமாறி
மண்ணை முத்தமிடும் ஓசையும்
நன்றாய்க் கேட்கிறது.,
சற்றே பொறுக்கவும்,

அந்த ஓட்டு வீட்டில்
இரும்புக் கம்பிப் போட்ட கதவு
தன் தாழ்ப்பாள் திறக்கப்படுவதை
எழும் ஓசைவழி
காதுகளுக்குத் தகவல் சொல்கிறது.,

இதோ?
காற்றின் அலை வரிசையில்
மல்லிகைப் பூ வாசனை
எனை நெருங்கி நெருங்கி
என் சுவாசப் பைக்குள்
புது வாசச் செய்தியை நிரப்புகறது.,

இது என்ன அதிசயம்
வெள்ளிக் கொலுசோடு
துள்ளிக் குதிக்கும் முத்துகளில்
ஏழுசுரங்கள் குடியிருந்து
கொஞ்சி கொஞ்சிக் குடும்பம் நடத்துதே
என் மனதைக் குடைஞ்செடுக்குதே.,

ஓ..! கைகளில்
கண்ணாடி வளையல்களோ?
அவை ஒன்றை ஒன்று
முத்தமிட்டு முத்தமிட்டு
என் காதோரம் வந்து
இன்பச் சத்தமிடுதே.,

வெண்ணிற மேகங்கள்
வெய்யோனின் வெயில் பார்வையைச்
சூழ்ந்து கொண்டு
கருமேகங்களாய் மாறி நிக்க
இளம்பச்சைச் சேலையில்
தார்ச்சாலையில்
சோலை ஒன்று நடைபயில
விழித்திரையில் படம் பிடித்தேன்.,

நீர்நனைந்த கார்மேகப் பந்தலுக்குள்
கலைநிலா ஒளி வீசி
மயங்க வைக்க,
காந்தங்களைக் குழைத்து குழைத்து
இருளோடு கலவை செய்த
ஈர்க்கும் கண்கள்
கருவண்டோ? மானோ? மீனோ?
எனக் குழம்ப வைக்க,
செக்கச் சிவந்த அந்தி வானத்தைக்
அலுங்காமல் குலுங்காமல் கத்தரித்து
எழில் கொஞ்ச சித்தரித்து
நிலாப் பரப்பில்
தேனூற்றிப் பயிர் செய்த
உதிராத இதழ்கள்
கிறங்க வைக்க
மனம் குளிர்ந்தேன் வியந்தேன்
சற்று உடைந்து உறைந்தும் போனேன்.,

ஒரு நொடி என்றாலும்
தவறவில்லை
என் உசுர உருக்கத் தவறவில்லை
கருமேகங்களைப்
பிரித்து வந்த மின்னலைப்போல்
செங்காந்தள் வேலியைப் பிரித்து வந்த
அந்தப் புன்னகை
என் உசுர உருக்கத் தவறவில்லை.,

பல்லவச் சிற்பிக்குப்
பாடம் கற்பிக்க வந்த
பளிங்குச் சிலையோ?
சித்திரம் செய்வோர்க்குச்
சரித்திரம் சொல்ல வந்த
கலையின் விதையோ?
ஐயோ..!
நான் என்னென்று சொல்வேன்.,

எனை நோக்கி நகர்ந்து நகர்ந்து
நெருங்கி வந்து
இங்க பாருங்க என்று சொல்ல
நிமிர்ந்து பார்த்தே நின்றேன்
இந்தக் குரல்வளையில்
குயில்களை அமர வைத்தது யாரோ?
இல்லை இல்லை
குயில்கள் தான் கடனாளி.,

இங்க பாருங்க
எங்கிருந்தோ? நினைவு திரும்பினேன்
இனிமேல் இங்கே நிற்காதீர்
நான் செத்துப் போனேன்
என்மேல் பழிச்சொல்
தலை நிமிர நிமிர விழுகிறது
அதைச் சரிசெய்யவே
உயிர் மீளத் துடித்து மீண்டு வந்தேன்.,

ஏதோ? சொல்ல நினைத்தேன்
எனக்குள்ளே சொல்லி முடித்தேன்
"என்வாழ்வில் நான் கண்ட அதிசயம்
நீ தந்த தரிசனம்"
அந்த உதடுகளும்
ஏதோ? சொல்ல நினைத்தன
அதைத் தனக்குள்ளே சொல்லி முடித்தன.,
சிறு மௌன இடைவெளியில்
கால்கள் விலகி நடந்ததும்
மழை பெய்தது
அவள் குடை விரித்தாள்
நான் நனையத் தொடங்கினேன்...

...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

எழுதியவர் : இதயம் விஜய் (21-Apr-21, 12:52 pm)
Tanglish : androru naal
பார்வை : 325

மேலே