செயற்கை சுவாசம்

பட்டாம் பூச்சி கூட்டிலே
பட்டினி கன்டதில்லை

மூச்சுப் பஞ்சம் முழுதாக
முகக் கவசம் அணிந்ததில்லை

நுண்ணுயிரி தாக்கும் பிணிகளில்
எதுவும் விதி முடித்ததில்லை

மீள முடியாத துன்பம்
மனிதா...! உனக்கு யார் தந்தது..?


அடர்காட்டின் ஆழத்தில்
அழகாய் வாழும் எந்த விலங்குக்கும்
வேற்றுமொழி இருமல் இல்லை

நுரையீரல் கொண்ட எவற்றுக்கும்,
சளி தொற்றிக் கொண்டதில்லை
சனி பார்க்கும் மனிதா...!
சளி உனக்குள் யார் இட்டது...?

இயற்கையோடு வாழும் எதுவுமே
செயற்கை சுவாசம் வாங்கியதில்லை

மரம் பிடித்து வாழ்வதெல்லாம்
மரணம் காண்பதில்லை

மாளிகையில் வாழும் மனிதா...!
உன் கட்டில்வரை மரணம்
உள்ளே யார் விட்டது..?

மண் வாழும் புழுக்களும்
மன வலிகள் கொண்டதில்லை

மணல் நெளியும் பூச்சிகள்
உடல் துன்பம் கண்டதில்லை

மண் தொடாத பாத மனிதா...!
மரணம் உனக்கு மட்டும்
ஏன் வந்தது...?

பூக்கள் செய்யாத தேன்
பூமிக்கு ரசமில்லை
நுண்ணுயிரிகள் போர் செய்யாமல்
பூமியும் இனி பிழைப்பதில்லை

இயற்கையை
இதுவரை நீ அழித்தாய்
இனி மனிதா உன்னை
இயற்கை அழிக்கத்தானோ
இத்தனைத் துன்பமும்
இயற்கை உனக்கு
இன்முகத்தோடு காணிக்கை
இட்டிருக்குமோ...!

எழுதியவர் : செ.பா. சிவராசன் (14-May-21, 4:35 pm)
சேர்த்தது : செ.பா.சிவராசன்
Tanglish : seiyarkai suvaasam
பார்வை : 97

மேலே