அகலிகையின் தவம்

அகலிகையின் தவம்
*************************
அழகில் ஒளிர்ந்த தங்க தாரகை
அகலிகையை மணந்தது கௌதமரின் ஆணவப்பிழை
மனம் அறியாது செய்த மணம்
இருமனம் இணைந்தால்தானே இனிக்கும் இல்லறம்

கடமைக்காய் வாழ்ந்தவர் காதலை அறிவாரா
கன்னியின் தவிப்பை கணநேரம் உணர்ந்தாரா
பத்தினியாய் வாழ்ந்தவள் சுயத்தை இழந்தாள்
பகலிரவு பணிவிடையில் உணர்ச்சிகளை மறைத்தாள்

தாபத்தால் தவித்த பின்னிரவு பொழுதின்றில்
மாயக்கோழி கூவியதால் மாறியது வரலாறு
காமப்பசி தீர்த்துக் கொண்டான் இந்திரன்
கடும் சினத்தோடு உள்நுழைந்தார் கௌதமன்

அகலிகையின் தவறுக்குத் தந்தார் சாபம்
கல்லென வாழ்ந்தவள் கொண்டாள் கோபம்
முக்காலம் உணர்ந்தவன் இக்காலம் உணரலையோ
மனைவியைக் காப்பாற்றத் தவறியவன் மாமுனியோ

கௌதமரின் தவவலிமை இன்றே அகலட்டும்
காமுகன் இந்திரன் விழிகளிழந்து குருடாகட்டும்
அகலிகையின் சீற்றத்தால் கல்லாயினர் இருவருமே
ஆரணங்கோ அமைதிநாடி கண்மூடி சிலையானாள்.

எழுதியவர் : (17-May-21, 5:22 pm)
சேர்த்தது : Aruvi
பார்வை : 440

மேலே