உன் நலமறிய ஆவல்

உன் நலமறிய ஆவல்...

எங்கே இருக்கிறாய்?
என்ன செய்துகொண்டிருக்கிறாய்?
என்னை ஒருமுறையேனும் நினைப்பாயா?
என்னிடம் பதிலில்லை இவையனைத்திற்க்கும்..

புலம்பி தீர்த்தாயா?
புன்னகையை அணிந்துகொண்டாயா?
புது உறவை தேடி கொண்டாயா?
பூக்கட்டும் உன் வாழ்வில் இனியாவது வசந்தம்

கண்கள் காணாது
கரங்கள் தீண்டாது
காதல் வளர்ந்த அழகை
கடலோர அலைகள்
காலங்கள் கடந்தும் பேசிடும்...

திட்டாமல் எனக்கு பேச தெரியவில்லை
திகட்டாமல் பேசிட நீ தெரிந்திருந்தாய்

அன்பையும் மிஞ்சியது என் கோபம்
அக்கரையில் எஞ்சியது உன் கோபம்

மாறினேன் உனக்காக நான்
மாறவில்லை யாருக்காகவும் நீ

முரண்கள் பல இருந்தாலும்
அரண்களாய் நம் உறவுகள்

எதுகைக்கு ஏற்ற மோனையாக
எனக்கு ஏற்ற துணையாக

கவிதையாய் சென்றுகொண்டிருந்த நாட்களை
கண்ணீரால் அவ்வப்பொழுது நினைத்துக்கொள்கிறேன்

குடும்ப சுமையை சுமக்க வலிமை பெற்றவனுக்கு
காதல் சுமையை தாங்கமுடியவில்லை என்றே
தயங்கினாய் நீயும்
தயங்கினேன் நானும்

சேர்ந்தால் தானே பிரிவதற்கு என்றனர்
பிரிந்தால்தானே சேர்வதற்கு என்றோம்

உடல் சேர்வது காதலல்ல
உள்ளம் சேர்வது காதலென்றால்
உன்னை விட்டு கொடுத்து
உள்மனதில் பூட்டிக்கொண்டதும் ஒருவகை காதலென்பேன்

வேறென்ன வேண்டும்?
முதலும் முடிவுமாக நாம் இருவரும் நம்
முகம் பார்த்துக்கொள்ளும் கொடுப்பணை
இருவருக்கும் அமைந்திட
இறைவனை இறைஞ்சிடுவோமாக

எழுதியவர் : ஷாகிரா பானு (18-May-21, 5:37 pm)
சேர்த்தது : Shagira Banu
பார்வை : 306

மேலே