பொம்மியக்கா - அத்தியாயம் 1
ஊதக்காத்து கிளம்பிருச்சு
ஒத்த சனம் இல்லாம
ஊரும் அடங்கிருச்சு
அண்ணாந்து பாக்க ஆளில்லாமல்
அரைநிலவும் தூங்கிருச்சு
சத்தம் எல்லாம் செத்துப்போன
சாமத்து நேரத்தில
சரஞ்சரமா கண்ணீரோட
கடந்து போறா ஒருத்தி
கையில வெளக்கு இல்ல
கால்ல செருப்பு இல்ல
கலஞ்ச முடிய கண்டுக்கல
வாயில்லா பூச்சி மகளுக்கு
வழித்துணைக்கும் யாருமில்ல
ஊருக்கு ஒதுங்கி இருக்கும்
ஒத்தப் புளியமரம் தாண்டி
ஒண்டி வீரன் சாமி
ஊர்க் கோயில் தாண்டி
கம்மா கரையோரம் ஒத்தையிலே
கண்டாங்கி சேலைய கண்ணீரால் நனச்சுகிட்டே
கடந்து போறா இவ
தலைச்சுமையா கூடையில
தளதளனு மல்லிகையும்
தூக்குவாளி தல தடவ
தாளிச்ச பழையசோறும்
தலைமேல தூக்கிகிட்டு
எங்க போறா இவ ?
கம்மங்கோல்லை தாண்டி
கரும்பு தோட்டம் தாண்டி
வில்லடியான் கோவில் மேல
வட்டக் கிணத்தடியில் நிக்குறா
விம்மி அழுகுறா
வேதனைய முறிக்கிறா
வட்டக் கிணத்துகுள்ள விட்டுப்போன என்னத்தையோ
விடிவெள்ளி வெளிச்சத்துல விடாம தேடுறா
முட்டுற கண்ணீர முந்தானை முடிஞ்சுகிட்டு
திட்டுறா சாமியத்தான்
எந்த சாமி குத்தமோ?
கெட்டுன பூஞ்சரத்த
கிணத்து மேட்டில் வைக்குறா
கொண்டாந்த சோத்தையும்
குவிச்சு பக்கம் வைக்குறா
வேதன தெறிக்குது வார்த்தையா!
பட்ட பாடெல்லாம் பாட்டா விழுகுது
தேனே!
தேன்சிட்டே!!
என்னனு சொல்ல
ராசாத்தி
ரோசாப்பூ -உன்ன
என்னனு கொஞ்ச
பட்டாம்பூச்சி புடிச்சா
ரெக்கபட்டு ரெத்தம் வந்து போகுமுனு
பூவால பொத்திவச்ச பொன்மயிலே
பொம்மியக்கா
மதுர வீதி
மீனாட்சி கோபுரமே
முந்தானை சேலையில
முடிஞ்சுவச்ச கற்பூரமே
தாய தவிக்கவிட்டு
தண்ணிக்குள்ள
தவமிருக்கும் தாமரையே
பொம்மியக்கா பொம்மியக்கா னு
பொலம்புது மனசு
கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டே
நிறையுது கிணறு
காதோடு காதாக -நான்
காது கொடுத்த கதைய
பொய்யாம பெஞ்ச
பெருமழையா
பொம்பள சாமி வாழ்ந்த கதைய
ஒத்த வரி விடாம ஒப்பாரி வைக்குறேன்
கத்தாளம் காடுவழி கால் நடந்து போவோம்
கண்ணீர முளுங்கிகிட்டு கதைய மட்டு கேளு .