மரணத்தினூடே

மரணத்தினூடே
(இந்த கோரானாக்காலத்தில் நாங்கள் புது தில்லியில் கடந்து வந்த அனுபவங்களை எழுத முயன்றுள்ளேன்.)
அலையாய்த்தான் வந்தது
முதல் அலையோ
மூன்றாம் அலையோ
மீண்டு எழமுடியவில்லை
அலைக்கழித்துவிட்டது .
கொத்துக்கொத்தாய்
பறித்துச்சென்றது.
எங்கள் உயிர்களை.
எட்டு நாள்களில்
பத்து உயிர்கள் .
எங்கள் நண்பர்கள்
எங்கள் சுற்றத்தவர்.
முதல் நாள்
பக்கத்து வீட்டு நண்பருக்கு வந்தது
பிறகு அவரது மனைவிக்கு,
அவர்களது பாலகனுக்கு.
எனக்கும் வந்தது
எனது துனைவிக்கும் வந்தது.
பயமும் வந்தது
பதட்டமும் வந்தது.
பிறகு வந்தது
மரணம் மரணமாய்
மூன்று நாட்களில்
நாலு மரணங்கள்
கடந்த வாரம்
பணிநிறைவுசெய்த நண்பர்
கடந்து போய்விட்டார்
என்றாரம்பித்த மரணம்
அவரது தாயாரும் அவரைச்சேர்ந்தார்
என்றே விரைந்து விழுங்கியது.
'என்மனைவிக்கு
ஒரு படுக்கை வேண்டும்
உதவி செய்யுங்கள்'
ஓலக்குரலாய்
வாட்ஸ்அப் குழுவில்
சக அதிகாரி,
வருத்தமும்
கோபமும்
இயலாமையில்
மூன்று மருத்துவமனைகள்
அலைந்து
நான்காவதில்
படுக்கை கிடைத்தது
அதுவே அவரது மனைவிக்கு
கடைசி படுக்கையானது.
'ஒரு ஆக்ஸிஜன் உருளை தேவை
யாராவது தயார்செய்யமுடியுமா?'
எல்லோருக்கும் கேட்டது.
யரைக்கேட்க?
எங்குமில்லை.
அவசர ஊர்தி
அவசரத்திற்கில்லை.
தேடித்தேடி
பலமணி நேரம் தேடி
வந்தது அவசர ஊர்தி
உறுதியாய் காப்பாற்றி விடலாம்
என்றே வண்டி ஏறினால்
ஆக்ஸிஜனும் தீர்ந்தது
ஆருயிர் அண்ணியும் தீர்ந்தாள்.
இப்போது சவப்பெட்டி அவசரம்
அவசரமாய் குளிர் சவப்பெட்டி
தேடித்தேடி, இல்லை இல்லை
பிறகு சுடுகாட்டுத்தேடல்
அங்கேயும் இடமில்லை
பதினெட்டு மணிக்குப்பிறகுதான்
இடம் கிடைக்கும்
அதுவும் பல அழுத்தங்களுக்கு பிறகு.
அவ்வளவு நேரம் வைத்திருக்க
குளிர் சவப்பெட்டி வேண்டுமே.
வாழத்தான் விடவில்லை
செத்தபிறகாவது
நல்லடக்கம்
நல்லுயிர்க்கு முடியுமா
நானிக்குறுகியது
நாடி இழுத்தது.
பட்டம் பதவி
பையில் நாலு
வங்கி அட்டைகள்
கையில் ஆயிரமாய் பணம்.
ஏன் இருக்கின்றோம்?
என்கின்ற நினைப்பு
பக்கம் சென்று
முகம் பார்க்கூட
முடியவில்லை
கட்டிப்பிடித்து
கதறி அழ முடியவில்லை.
எங்கே, எப்படி அடக்கம் செய்வது
என்ற கவலை
'என்ன நாடடா இது?'
மரணம் இப்போது துக்கமல்ல
கணக்காய் போனது.
தெரிந்தவர் மரணக்கணக்கு.
'ஒரு மனிதனின் இறப்பு துயரம்
பல மனிதர்களின் இறப்பு எண்ணிக்கை'
என்றானாம் ஒரு சர்வாதிகாரி.
ஒரே வளாகத்தில்
பத்து சாவுகள் .
மரண அமைதி
ஆனால் மயானம் அமைதியாயில்லை.
அமைதியே சப்தமானது.
கைபேசி அழைப்பு வந்தால் பயம்
அடுத்த இறப்பே, இழப்போ ?
குறுந்செய்தி பார்க்க தையிரியமில்லை
முகநூல் இரங்கல் நூலாகிப்போனது .
கூச்சலிடும் தொலைகாட்சி
ஓலமிடும் காட்சி
பார்க்க பயம்
சாவு சகஜமாகிப்போனது
சவங்கள் , பாடைகள்
சுட்டெரிக்கும் சுடுகாடுகளோடு
கங்கையில் மிதக்கும்
புண்ணிய ஆத்மாக்கள் .
ஈடுகொடுக்க இயலா
மருத்தவ மனைகள்.
மானுடம் காத்த
மருத்துவர்கள்
இரக்கமான செவிலியர்
எல்லோரும் என்ன செய்ய
எங்குமுள்ள
பிராண வாய்வின்றி
பிராணன் போனது
கன்னுக்குத் தெரியா
தீ நுண்மி, கிருமி
எல்லாம் வல்ல
மனிதனை,
எதிரியை
நூறு மையில் தொலைவிலிருந்து
தொலை நோக்கில்
தாக்கி அழிக்கும்
ஏவுகணை கண்ட மனிதனை
தெரியாமல்
உள் நுழைந்தே
உருகுழைக்கின்றது .
என்ன செய்ய ?
யாரை குறை சொல்ல?
படைத்தவனையா?
அடுத்தவனையா?
ஆள்கின்றவனையா?
இல்லை
விதி என்றே வீழ்ந்த்திடவோ?
கட்டாயம் இல்லை
மானிடம் இழப்புகளை
இதனினும் வல்லிய
இழப்புக்களினுடே
வாழ்ந்துதான்
வளர்ந்திருக்கின்றது.
'இதுவும் கடந்துபோகுமென்றே'
நம்பிக்கை மீது
நம்பிக்கை வைத்தே
மானிடம் வாழ
மானிடம் வெல்லுமென்றே
மனிதம் கொண்டே
மாண்புறு மானிடம்
விழாது வாழ விழைவோம்.

எழுதியவர் : இராமானுஜம் மேகநாதன் (28-May-21, 1:17 pm)
பார்வை : 39

மேலே