லொக்டவுணில் ஒரு கலியாணம் - பகுதி 04

லொக்டவுணில் ஒரு கலியாணம் - பகுதி 04

நடராசா ஓய்வு பெற்ற பிரதேச செயலாளர். ஊருக்குள் நல்ல பெயரும் மரியாதையும் அவருக்கு உண்டு. நிறைய பேருக்கு வேலை வாய்ப்புக்கள் கொடுத்து உதவியுள்ளார். அவர் பதவியில் இருந்த காலத்தில் யாருக்கும் அடிபணியாத அஞ்சா நெஞ்சன் என பலராலும் பாராட்டப்பட்டவர். அவரது மனைவி பவளம். அவரும் ஓய்வு பெற்ற சிறுவர் பாடசாலை ஆசிரியை. ஆதி, கவியழில் என இரண்டு பிள்ளைகள். ஆதி, கொழும்பில் இருக்கும் பிரபல நிறுவனம் ஒன்றில் பிரதான கணக்காளராக இருக்கிறான். விடுமுறையில் வீட்ட வந்தவனுக்கு மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் வீட்டில் இருந்து வேலை செய்கிறான். கவியழில், யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயிரியல் பாட ஆசிரியராக பணியாற்றுகிறாள்.

தங்கச்சிக்கு பிறகு தான் அண்ணனுக்கு கலியாணம் செய்ய வேண்டும் என்ற எழுதப்படாத சட்டத்தின் கீழ் கவியழிலுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். எதேச்சையாக ஆதியின் ஜாதகத்தை பார்த்த போது தான் அதிர்ச்சி காத்திருந்தது. அவனின் ஜாதகத்தின் பிரகாரம் அடுத்த மாதத்துக்குள் கலியாணத்தை முடிக்காவிடின் அடுத்த ஐந்து வருடங்களின் பின்னரே வரன் அமையும் என சாஸ்திரி சொல்லிவிட்டார். உடனே ஆரம்பித்தது தான் இந்த அவசர கலியாணம்.

ஆதிக்கு பார்த்திருக்கும் பொண்ணு பெயர் தமிழிசை. அழகு கொட்டி கிடக்கும் அளவுக்கு அறிவு ஏறவில்லை. சின்னவயதில் இருந்தே தகப்பனோடு தோட்ட வேலைகளில் இருந்தவளுக்கு அதுவே பிடித்துப் போயிருந்தது. வீட்டில் கத்தரி, மிளகாய், பயிற்றை, வெண்டி, கீரை, வல்லாரை, பூசணி என பலவகைப்பட்ட பயிர்செய்கையில் ஆர்வமாய் இருந்ததால் படிப்பில் கோட்டை விட்டுவிட்டாள். பாவாடை சட்டையுடன் தலையில் ஒரு துணியையும் கட்டிக் கொண்டு விடிஞ்சா பொழுதுபடும் வரை தோட்டத்தில் தான். சிலநேரங்களில் அங்கு நடப்பட்டிருக்கும் வெருளிகளுடன் கதைத்துக் கொண்டிருப்பாள். அவளுடைய உலகம் ரொம்பவே சிறிது. அம்மா, அப்பா, அந்த மரக்கறி தோட்டம்.

மறுநாள் விடிந்தது. ஆத்தியடி பிள்ளையார் கோயில் மணி கேட்டு கண்முழித்தான் ஆதி. தொலைபேசியை எடுப்பதற்காக கையை துளாவிய போது தான் படுத்த பாயை விட்டு வெறும் நிலத்தில் படுத்திருப்பது தெரிந்தது. மீண்டும் பாயில் படுத்துக் கொண்டவன் தொலைபேசியை எடுத்து பேஸ்புக்கில் ஒரு ரவுண்ட் போய்க்கொண்டிருந்தான். கவியழில் எழுந்து வெளியே வந்தாள். தாய் குசினிக்குள்ளும் தகப்பன் முற்றம் கூட்டிக்கொண்டும் இருந்தனர்.

"மியாவ்வ்.... மியாவ்வ்..." பூனைக்குட்டி தான் அவளை வரவேற்றது.

மகள் எழும்பிவிட்டாள் என்பதை தெரிந்து கொண்டு வெளியில் வந்த தாய்,

"எல்லாம் நீ கொடுக்கிற இடம் தான். விடியக்காத்தாலையே கத்திக்கொண்டு... ரெண்டு அடி போட்டு துரத்திவிடு...' தாய் பவளம்

" சும்மா இருனை... அதுக்கும் பசிக்கும் தானே... ஒரு பிஸ்கட்டை உடைச்சு போட்டுவிட்டால் சாப்பிட்டுட்டு போகப் போகுது..." - கவி

"நானும் பார்க்கிறன் எத்தனை நாளைக்கு உந்த கூத்தெல்லாம் நடக்குது என்று.... எல்லாத்துக்கும் ஸ்கூல் தொடங்கட்டும்..." பவளம்

"எப்பிடிப்பா இந்த அம்மாவை கலியாணம் கட்டிக்கிட்டீங்கள்... எப்போ பாரு தொண தொண என்றுகிட்டு" - அப்பாவை பார்த்து கேட்டவள் பூனைக்குட்டிக்கு பிஸ்கெட் ஒன்றை உடைத்து கொடுத்தாள். தகப்பன் கேட்டும் கேளாத மாதிரி முற்றம் கூட்டுவதில் முனைப்பாய் இருந்தார்.

"ஓம்மடி... உனக்கு இப்ப என்னை பார்த்தால் பைத்தியம் மாதிரி தான் இருக்கும்...போகிற இடத்தில் கஷ்டப்படும் போது தான் தெரியும்..."

"சரி சரி விடும்மா... அதெல்லாம் இப்போதைக்கு நடக்காது தானே... அதான் உன்ர மோன் வில்லனா வந்திட்டானே.... எனக்கு ஒரு ரீ போட்டுத் தாவேன்னனை..." - வழமை போல் தமையனை சீண்டினாள்.

"அம்மோய்... நான் சொன்னேன் தானே... உவளாவது பாசத்தில விட்டு தாரதாவது... வயித்தெரிச்சலோட தான் இருக்கிறாள்..." அறைக்குள்ளே இருந்து ஆதியின் குரல் வந்தது.

"பிள்ளை... பால் வந்திருக்கும் எடுத்து தந்திட்டு பல்லை தீட்டி முகத்தை கழுவிட்டு வா... இரண்டு பேருக்கும் ரீ போட்டு தாறன். புட்டு அவிச்சிட்டன். சம்பல் செய்யோனும் வந்து உதவி செய்..." - பவளம்

"தம்பி... விடியக்காத்தாலை போனை நோண்டிக்கொண்டு இராமல் எழும்பு... சந்தைக்கு போயிட்டு மரக்கறி கொஞ்சம் வாங்கிட்டு வறோனும்.... இரவிலையும் போன் தான். பகல்லையும் போன் தான். அப்பிடி என்ன தான் இருக்கோ..." - பவளம்

"அம்மா... கோழி இறைச்சியும் வாங்கிட்டு வரட்டே..." - ஆதியின் ஆசை

"என்னது... கோழியோ... இண்டைக்கு என்ன கிழமை என்று தெரியுமோ. சங்கடஹர சதுர்த்தி எல்லே... அடுத்த கிழமை கோயில் திருவிழா தொடங்குது. இனி எல்லாம் முடிச்சு தான் மச்சமோ என்னென்றாலும்..." - தாய்

"பிள்ளையாரப்பா... ஏன் என்னை இப்பிடி சோதிக்கிறாய்... கெதியா கொழும்புக்கு போகவிடுப்பா..." - ஆதி

"அண்ணா... பார்த்திருக்கிற பொண்ணு மச்சம் சாப்பிடமாட்டாங்களாம்... சுத்த சைவமாம்..." - கவி சும்மா ஒரு பொய்யை சொன்னாள்

"எனை... உண்மையாவேனை... அப்பிடியென்றால் உந்த பொண்ணு வேண்டாம்... தெரிஞ்சு கொண்டே கிணத்துக்க விழமுடியாது. அப்புறம் சண்டை சச்சரவு தான் மிஞ்சும்..." - ஆதி

"அவள் தான் விளையாடுறாள் என்றால் நீயும் சேர்ந்துகிட்டு... போ...வெயிலத்துக்கு முதல் போய் மரக்கறி வாங்கிட்டு வா..." - தாய்

-கலியாண பேச்சு தொடரும்

எழுதியவர் : பெல்ழி (3-Jun-21, 10:09 am)
சேர்த்தது : மணிவாசன் வாசன்
பார்வை : 117

மேலே