தாயினுள் நான் , என்னில் தாய்

தாயினுள் நான் , என்னில் தாய்

முதல் திருமணமே என் அன்பு அன்னைக்கு இரண்டாம் திருமணமானது விந்தை!
முதல் மனைவியை இழந்த பின் என் அன்னையை மணமுடித்தார் என் தந்தை!
மணமுடித்த மறுநாளே அந்த கன்னித்தாய், தந்தையின் முதல் தாரத்தின் மூன்று மகன்களுக்குத் தாயானாள்!
அந்த காலத்தில் ஆண்களுக்கு மிக எளிய, செலவே இல்லாத கேளிக்கை, நிறைய குழந்தைகளை உருவாக்குவது தான்!
என் தாயார் குழந்தை பெறும் இயந்திரமாகி உற்பத்தி செய்த குழந்தைகள், ஆறு தான்!
ஆறுதலைகளை பெற்றாலும் ஆறுதலைக் காணாமல், மாறுதலை தான் கண்டாள், தாய்!
நான்காவது பிள்ளையாக உலகத்தில் அவதரித்தவன் நான், ஆறிலே ஒருவனாய்!
ஆசிரியரானதால், தந்தை எமக்கு திட்டையும் அடிகளையும் அதிகமாகவே கொடுத்தார்!
பதினோரு பேர் கொண்ட குடும்பத்தில், முதல் மூன்று மகன்களுக்கு முன்னுரிமை!
எங்கள் ஆறு பேருக்கும் மூன்று வேளை உணவு படைப்பதே தாய்க்கு மிகப் பெருமை!
உணவு சமைப்பது மட்டுமின்றி, இரண்டு மாடுகளையும் பராமரித்தாள் என் அன்னை!
சொல்லப் போனால், 11 ஆடுகள் மற்றும் 2 மாடுகளைப் பேணினாள் என்பது உண்மை!
வருடங்கள் தேய்ந்தது, நாங்கள் வளர்ந்தோம்
தாயின் ஓய்ச்சல் இல்லாத உழைப்பால்!
சகோதர சகோதரிகள் ஒன்பது பேரும் ஒரு வழியாக முடித்தோம் அவரவர் படிப்பினை!
குடும்பத்தில் எவ்வளவோ இன்னல்களை எதிர் கொண்ட தாய், எங்களுக்கு படிப்பினை!
காலத்தின் மாற்றங்கள், வாழ்க்கையில் ஏற்றங்கள், பார்ப்பின் எல்லாம் ஏமாற்றங்கள்
நான் கல்லூரிப் படிப்பை முடிக்கும் முன்பே ஓய்வு பெற்ற தந்தை இயற்கை எய்தினார்!
இதன் பிறகு என் தாய் அநுபவித்த துன்பங்கள், அம்மம்மா, சொல்லி முடியாது!
கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டாள், பிறர் பேச்சுகளையும் வாங்கிக் கொண்டாள்!
ஒன்பது பிள்ளைகளும் ஒவ்வொரு விதமாக அவரவர் வாழ்வை அமைத்துக் கொண்டனர்!
வாழ்க்கை புரியாமல், திருமணம் புரியாமல் வாழும் என் தம்பிக்காக வாழ்ந்தாள் எம் தாய்!
மற்றவர்கள் கல்யாணமாகி குடும்பத்துடன் வாழ்கையில், தம்பி தாய்க்கு ஆனான் சேய்!
சில வருடங்களில் தாய் கொண்டாள் உடல் உபாதைகள், என் தம்பிக்கு ஆனாள் சேய்!
என் தம்பி கொடுத்து வைத்தவன், கடைசி காலங்களில் என் தாயை பூப்போல பார்த்துக் கொண்ட புண்ணியம் தம்பிக்கு மிக அதிகம்!
கனவுகளில் சுகம் என்பதை கண்டாளோ என்னமோ, என் அன்புத் தாய், வாழ்க்கையில் கண்ட சுகம் குறைவைவிட மிகக் குறைவே!
மெழுகுவர்த்தி, என் தாய் இந்த இரண்டுமே தன்னை உருக்கிக் கொண்டு பிறர்க்கு ஒளி தருவதை நான் நேரிலேயே பார்த்தவன்!
அவள் ஆத்மா எங்கே புகலிடம் அடைந்தது? சாந்தியிலா அல்லது மீண்டும் ஒரு சாந்தியாக,பூமியிலா! நான் அறியேன்!
ஆனால் உலகில் உள்ள ஒவ்வொரு தாய்க்கும் என் கண்ணீர் துளியால் ஆராதனை செய்கிறேன்! வாழ்க தாய் குலம்!

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (15-Jun-21, 1:13 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 122

மேலே