அ முதல் விதை , ஓ வரை கவிதை

அன்பு என்றால் அம்மாதான் , அன்பான
அருமை மொழி என்றால்,நம் தமிழ் தான்!
ஆண்டவர் இருக்கிறார் நம்முள்ளே, எப்படி
தமிழ் நம்மில் புதைந்துள்ளதோ அது போலே!
இன்றுவரை தமிழ் அமிழ்துண்டோம், இனி
தமிழ் கடலில் மூழ்கி முத்துக்கள் எடுப்போம்!
ஈகை மறப்பது நற்குணம் அன்று, இல்லை
என கை விரிப்பது தமிழ் பண்பாடு அன்று!
உறவின் இரு பெரும் தூண்கள் தாய், தந்தை
தமிழின் துணைகள், இயல், இசை, நாடகம்!
ஊக்கம் தர தாய், தந்தை, ஆசான், தோழமை
தமிழுக்கு ஆக்கம் அளிக்க நானும் நீங்களும்!
எதிர்நீச்சல் தான் நம் வாழ்க்கைப் பயணம்
துணிச்சல் தரும் தமிழுக்கு என்றும் சரணம்!
ஏழையையும் வாழ வைப்பது, மனித நேயம்,
ஏற்றம் தருவது தமிழெனும் இனிய காவியம்!
ஐயா என்று அழைக்கும் அழகு தமிழ்ச் சொல்
ஐயமே இல்லை என முழங்கும் நமது செயல்!
ஒவ்வொரு தினமும் நமக்கு புதிய ஆனந்தம்
இதை தரத்தான் இருக்கிறது தமிழ் வசந்தம்!
ஓரடி தாய் பாய்ந்தால்,புலிக் குட்டி ஈரடி பாயும்
தமிழ் மொழிந்தால் காதுகளில் தேன் பாயும்!

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (16-Jun-21, 12:51 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 47

மேலே