ஒரு குச்சி மிட்டாயும் இரண்டு கோபிகோ மிட்டாய்களும்
ஒரு குச்சி மிட்டாயும் இரண்டு கோபிகோ மிட்டாய்களும்
வண்டி விட்டு இறங்கி
இருவது நாளாச்சு...
நாலு நாள்ல கூப்டுறேன்னான்
குரங்கு மூஞ்சி மேனஜர்.
ஒரு வாரம் ஆனா நல்லதுனு
மனசுக்குள்ள சொல்லிக்கிட்டேன்.
கழுகுமலைக்கு பஸ் ஏறும்போதே
மனசெல்லாம் மணந்தா மல்லிகா.
நல்லாத்தான் போச்சு
பத்து பகல்பொழுதும்
பதினஞ்சு ராப்பொழுதும்.
போன வாரம்
பாப்பாவைக் கூப்பிட்டுட்டு
பழங்கோட்டை திருவிழாவுக்குப் போய்
துளசி மதினி வீட்டுல
கறிக் கொழம்பு சாப்பிட்டு,
பாசமாக் கொடுத்தாகன்னு
அவளுக்கும் வாங்கிட்டுவந்தேன்
தூக்கு வாளில.
அன்னைக்கு ஆரம்பிச்சது சடவு
அவளுக்கும் எனக்கும்.
அப்பனுக்கு சுகர் கட்டுப் போட
தர்மாஸ்பத்திரில ரெண்டு நாளும்
அந்தோணி வாத்தியார்
மருந்தக் குடிச்சப்ப
கலாராணி ஆஸ்பத்திரில
ரெண்டு ராத்திரியுமாக
கழிஞ்சுபோச்சு இருவது நாட்கள்.
கைக்காசும் கரைஞ்சுபோச்சு
கடனும் கொஞ்சம் வாங்கியாச்சு
கழுத கோவமும் பெருகிப்போச்சு
ராத்திரி கூட கசந்துபோச்சு
சடவு சண்டையாகி
ரெண்டு நாளாப் பேச்சில்ல.
“மைப்பாறை அண்ணாச்சிக்குப் பதிலு
வண்டி மாத்திவிட வரச்சொல்லி
போன் போட்டாரு புள்ள”
சண்டையெல்லாம் மறந்திட்டு
கிட்டவந்து கேட்டா
“எப்பவாம்”
“இன்னைக்கு மத்தியானம் ஒரு மணிக்கு
இப்பக் கிளம்புனாத்தான் சரியா இருக்கும்”
கட்டிப்பிடிச்சு முத்தம் குடுத்து
கண் கலங்கிச் சொன்னா
“சாரி (அ)த்தான்”
வெள்ளென தூத்துக்குடி போய்
கைலிய இறக்கிவிட்டு
“வணக்கம் சார்”னு நின்னேன்
ஆபிஸ் வாசல்ல.
“அடடா சொல்ல மறந்துட்டனேப்பா
ஏதோ லோடு மேன் பிரச்சனையாம்
லோடு நாளைக்குதான் ரெடியாகும்
நீ வேணா போயிட்டு நாளைக்கு வாரியா”
சமயம் பாத்துக் கழுத்தறுத்தான் மேனஜர்.
என்னக் கண்டாலே பிடிக்காது அவனுக்கு
போன தீவாளிக்கு
அவன் ஒன்னுவிட்ட மச்சானுக்கு
வண்டி மாத்தி விடச் சொன்னப்ப
மாட்டேன்னுட்டேன்.
அதுலருந்தே இப்படித்தான்.
இயலாமையும் ஆற்றாமையும் பொங்க
ஊருக்குப் பஸ் ஏறினேன்
பிள்ளையார் கோவில்ல இறங்கி
வீட்டப் பாத்து நடந்தேன்.
ஏங்கி நிக்கும் பாப்பா முகம்
நினவு வர...
மிச்சமிருந்த சில்லற குடுத்து
பாட்டயா கடையில வாங்குனேன்
‘ஒரு குச்சி மிட்டாயும்
இரண்டு கோபிகோ மிட்டாய்களும்’