கொரோனா - 2

எதையேனும் கூறினாலும், எவருக்கும் தெரியாது.
கதையென்று தள்ளிடாது, நிகழ்வுகள் சாட்சிகளாம்.
வூஹானில் உயிர் கொண்டதோ, வவ்வாலால் பரவியதோ
எவரெவரோ செப்பியதும், எதிலுண்மை அறிந்திலோமே?
உயிரியல் பேராயுதமா, உளவியல் ஒடுக்குமுறையா ?
மெய்யொன்றும் அறிந்திலோமே; மேதினியில் வெறும் ஓலம்.
அழகான அகிலத்தை அசைத்து பார்த்த நுண்வைரி .
கைதட்டி கதவடைத்தோம், விளக்குவைத்து வெளியில் நின்றோம் !
மருத்துவர்கள் கடவுளாக, அவர்மனையெலாம் கோயிலாக ,
கோவில்களும் பொலிவிழக்க, கல்விக்கூடங்களும் கதவடைக்க ,
உயிரற்ற ஒரு ஜந்து உலகத்தை உலுக்கியதே!
தீநுண்மியின் பெருந்தீமை திசையெட்டும் வசை பாடும்.
இருமல் சுரமென இயல்பாய் நுழைந்திடுமே!
ஈரல் குலையென்று இதமாக வருடிடுமே !
இதயத்தை பொசுக்கிவிடும் நச்சுண்ணித் தீயதுவே !
கூட்டம் பாட்டம் என்றால் கொள்ளை நாட்டமாகும்.
தனிமை ஒருமை என்றால் நில்லா ஓட்டமோடும்!
கிமு கிபி கண்ட இனிய நல்லுலகு -அன்று ;
கொமு கொபி என்றே கொடிதாய் ஆனதின்று ;
கொடுநோய் பலவும் பல காலம் உண்டிங்கே !
காலரா பிளேகால் கோடிமக்கள் மாண்டனரே !
அஸுடெக் பேரரசு அம்மையால் வீழ்ந்ததாமே !
ப்ளுவின் கொடுமையிலும் பல கோடி வீழ்ந்தனரே!
மீண்டது மானுடமே; வென்றது மருத்துவமே!
கொல்லும் கோரானவை வெல்லும் மானுடம் - ஓர் நாள்
காலம் நேரம் வரும்; தனித்தே விழித்திருப்போம்.
அல்லும் பகலுமே அர்ப்பணித்து உழைப்போமின்
ஞாலம் காத்திடுவோம்; நம்பிக்கை பூத்திடுமே!