நீதி நிலைதவறின் அவ்வரசு பாதி அழிந்து படுதுயராம் – நீதி, தருமதீபிகை 830
நேரிசை வெண்பா
நீதி சிறிது நிலைதவறின் அவ்வரசு
பாதி அழிந்து படுதுயராம் – நீதி
திரியாது நின்றுவரும் சீரின் அளவே
மரியாதை யாகும் மதி! 830
- நீதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
நீதிமுறை சிறிது தவறினும் அந்த அரசு பாதிக்குமேல் அழிந்து படுதுயரங்களை அடையும்; நீதி வழுவாமல் நின்று வருமளவே அரசு விழுமிய நிலையில் விளங்கி எவ்வழியும் உயர்ந்து மரியாதை மாண்புகளை அடைந்து வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
உலகத்தை ஆளும் அரசபதவி அரிய பெரிய மகிமையுடையது. தெய்வீகம் தோய்ந்தது. மிகுந்த பொறுப்பு வாய்ந்தது. மனித சமுதாயத்தை நெறியே நடத்த நேர்ந்தவனாதலால் முதலில் தான் புனிதமாய் நடக்க வேண்டியது அரசனுக்குக் தலைமையான கடமையாய் அமைந்தது. உரிய ஒழுக்கம் அரிய விழுப்பமாகிறது; ஆகவே அவ்வேந்தன் மேலான நீதிமானாய் நெடிது நிலைத்து ஞாலம் முழுவதையும் வழிமுறையே ஆள நேருகிறான்.
தரும நீதியே அரசை மருமமாய் நடத்தியருளுகிறது. உடலுக்கு உறுதி குருதி, அரசுக்கு உறுதி நீதி என்பது ஆதி மனுமொழி. இரத்த ஒட்டம் சரியாகவும் ஒழுங்காகவும் இருந்தால் தேகம் சுகமாகவும் பலமாகவும் இருக்கும்; அது பழுதாய்ச் சீர் குலைந்தால் தேகம் பிழையாய்ப் பீழையுறும். உயிர் வாழ்வு செந்நீரால் இயங்கி வருதல் போல் அரச வாழ்வு செங்கோலால் நடந்து வருகிறது. கோல் கோடாத வரையும் அரசு வாடாத வளமையாய் வளர்ந்து வரும்; அது கோடின் யாவும் அவலமாய் அழிந்தே போம்.
ஆகி.பகவன் அருள் நீதிவழியே வருதலால் அதனையுடைய அரசன் அதிசய நிலையில் ஒளி வீசி மிளிர்கிறான் நீதியுடையானிடம் அரிய பல குணநீர்மைகள் நேரே உரிமையாய் வருகின்றன.
கலித்துறை
(தேமா புளிமா 4)
ஆதி மதியும் அருளும் அறனும் அமைவும்
ஏதில் மிடல்வீ ரமும்ஈ கையுமெண் ணி(ல்)யாவும்
நீதி நிலையு மிவைநே மியினோர்க் குநின்ற
பாதி முழுது மிவற்கே பணிகேட் பமன்னே 2 .அரசியல் படலம், பால காண்டம், இராமாயணம்
தசரத மன்னனிடம் மருவியிருந்த குணநலங்களை இது குறித்துள்ளது. பொருள் நயங்களைக் கருதியுணர வேண்டும். மன்னர் பெரும! இன்று என்ன பணி செய்ய வேண்டும்?' என நீதி முதலியன இந்த அரசனிடம் ஏவல் கேட்கும் என்றதனால் இவனது பரிபாலன முறை அறியலாகும். இவ்வளவு நீதிமான் கைகேசியிடம் அளவு கடந்த காதல் கொண்டமையால் இது அடைய நேர்ந்தான்; ஆயினும் சொன்ன மொழி மாறாமல் இன்னுயிரை ஈந்து எவ்வுலகும் புகழ இசை மிகப் பெற்றான்.
நீதிமுறை அரசனுக்கு உயிர்; அதனை எவ்வழியும் செவ்வையாக அவன் பேணி வரவேண்டும். நாட்டு மக்கள் சுகமாய் வாழ்வது அரசன் நடத்தும் நீதி நெறியாலாதலால் அதனை உரிமையோடு கருதிச் செய்வது அரிய பெரிய தருமமாய் வந்தது.
One hour in the execution of justice is worth seventy years of prayer. – Justice
நீதி முறை செலுத்துவதிலுள்ள ஒருமணி நேரம் கடவுளைத் துதிக்கின்ற எழுபது வருடங்களுக்குச் சமம் என்னும் இது இங்கே அறியவுரியது. மனித சமுதாயத்துக்குத் தினையளவு இதம் செய்தாலும் அது கடவுளுக்குப் பனையளவு பூசனை செய்வதினும் மேலாம் என்பதை இது சால்பாக உணர்த்தியுள்ளது. இராச நீதியை எவ்வழியும் செவ்வையாகச் செய்து வருவோர் திவ்விய மகிமையை அடைகின்றார். பாரபட்சம் பாராமல் நியாய முறையை யாரிடமும் நேர்மையாய்ச் செய்வதே நெடிய சீர்மையாம்; அதனால் அரிய மேன்மைகள் உளவாம்.
Let justice be done though heaven should fall.
தெய்வம் தவறு செய்தாலும் நீதி தவறாமல் செய்யப்படும் என்னும் இது இங்கே அறியவுரியது. யாராயிருந்தாலும் பிழை காண நேர்ந்தால் தண்டிப்பதே நீதி மன்னர் சிறப்பாம். தீது களைவதால் நீதி வளர்ந்து நெடிது நிலவுகின்றது.
தான் தவறியதாகக் கண்டபோது தன் இன்னுயிர் போன மன்னவனையும் இந்நாடு முன்னம் பெற்றிருந்தது. கோவலனைக் கள்ளன் என்.று வஞ்சித்துக் கொண்டு வந்த கொடிய வஞ்சகன் சொல்லை நம்பி நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னன் அவனுக்கு மரண தண்டனை விதித்தான். கண்ணகி நேரே வந்து உண்மையை உரைத்தாள்: ‘'என் கணவன் நல்லவன், கள்வன் அல்லன்” என்.று அக் கற்புடையாள் காட்டவே உண்மை தெளிந்த மன்னன் உள்ளம் பதைத்து உயிர் துடித்து அரியணையிலிருந்து கீழே வீழ்ந்து உடனே இறந்து போனான். அவன் தேவியும் கூடவே ஆவி நீங்கினாள்.
மன்னன் மறுகி மாண்டது.
பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட
யானோ அரசன்? யானே கள்வன்;
மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது; கெடுகயென் ஆயுளென
மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே- தென்னவன்
கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கி,
‘கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ(து) இல்லென்(று)
இணைஅடி தொழுது வீழ்ந்தனளே மடமொழி 20 சிலப்பதிகாரம்
தான் செய்தது பிழையென்று தெரிந்தவுடன் யானோ அரசன்? யானே கள்வன் என்று உள்ளம் துடித்து அலறியிருக்கிறான். துயரம் தாங்க மாட்டாமல் உயிர் நீங்கிப் போயது. நாயகன் பிரிவைச் சகிக்க முடியாமல் தேவியும் உடனே மாண்டாள். இது எவ்வளவு அதிசயம்! எத்துணைப் பரிதாபம்! உய்த்துணர வேண்டும். உத்தம நீதிமான் என்று அரசகுலம் முழுவதும் அதிசயம் மீதூர்ந்து பரிவோடு இவனைப் பரசியுள்ளது.
'வல்வினை வளைத்த கோலை மன்னவன்
செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது”
கொடிய விதி கடிது வளைத்துக் கொடுங்கோல் செய்தது; அதனைத் தன் உயிரைக் கொடுத்து நேரே நிமிர்த்திச் செங்கோல் ஆக்கினான் என இவ்வேந்தனை வியந்து மறுபுல மன்னரும் இன்னவாறு புகழ்ந்துள்ளனர். தரும நீதியைத் தம் உயிரினும் அருமையாய்க் கருதி அரசர் பேணியருள்வர் என்பதை உலகம் காண இவன் உணர்த்தி யருளினான். இவனது நீதி முறையை ஓதி உணருந்தோறும் உலக உள்ளங்கள் மிகவும் உருகி வருகின்றன.
தரும நீதியாய் ஒழுகிவரும் அளவுதான் அரசன் எவ்வழியும் பெருமை மிகப்பெறுகிறான்; அது வழுவின் இழிவுகள் பல எய்தி அழிதுயரங்களை அவன் அடைய நேர்கின்றான்.
Nothing can be honourable where there is no justice. - Cicero
எங்கே நீதி இல்லையோ அங்கே கண்ணியமான மகிமை இருக்க முடியாது என்று சிசெரோ என்பவர் இவ்வாறு குறித்திருக்கிறார். நேர்மையான நீதி அளவே அரசு சீர்மையாம்.
இன்னிசை வெண்பா
எங்கண் இனையர் எனக்கருதின் ஏதமால்
தங்கண்ண ரானும் தகவில கண்டக்கால்
வன்கண்ண னாகி ஒறுக்க ஒறுக்கல்லா
மென்கண்ணன் ஆளான் அரசு! 322 பழமொழி நானூறு
தன் கண் தவறு செய்தாலும் மன்னன் அதனைத் தண்டித்து நீதி முறை புரியவேண்டும் என இது ஓதி உணர்த்தியுள்ளது.