வல்லவினை ஆற்றிவரும் அளவே அவ்வரசை யாவரும் போற்றி வருவர் - யூகம், தருமதீபிகை 840

நேரிசை வெண்பா

கல்வி அறிவு கருதும் மதியூகம்
எல்லாம் இனிதாய் இசையினும் - வல்லவினை
ஆற்றிவரும் அவ்வளவே அவ்வரசை யாவரும்
போற்றி வருவர் புகழ்ந்து! 840

- யூகம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

சிறந்த கல்வியும் உயர்ந்த அறிவும் தேர்ந்த மதியூகமும் நிறைந்திருந்தாலும் கருமங்களை உரிமையோடு செவ்வையாய்ச் செய்து வருகிற அரசே எவ்வழியும் சிறந்து வரும்; யாவரும் அதனை உரிமையோடு புகழ்ந்து போற்றி உவந்து வருவர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

அறிவுக்கு உரிய பயன் அறிய வேண்டியதைத் தெளிவாக அறிந்து கொள்வதே; உலக வாழ்வில் பலவகை நிலைகள் அறிய வுரியனவாய் மருவியிருக்கின்றன. அகமுகமாய் உயிரை நோக்கி உண்மையை உணர்வது ஆன்ம ஞானமாய் மேன்மை மிகுந்துள்ளது. வெளிமுகமாய்க் கருமங்களைக் கருதி நோக்கி உறுதி காண்பது உலக ஞானமாய் ஒளி புரிந்து விளங்குகின்றது.

உலக நிலைகளை ஓர்ந்து உறுதி நலங்களை உணர்ந்து தன் வாழ்வை நெறியே நடத்தி வருபவன் நிறைந்த மதியுடையனாய்ச் சிறந்து திகழ்கின்றான். கூர்ந்துணரும் திறம் அரிய பல மகிமைகளை அருளி வருகின்றது. கூர்மையான சிக்தனையளவு மனிதன் சீர்மையான சிறப்புகளைச் செவ்வையாய் அடைந்து கொள்ளுகிறான்.

இயற்கையான யூகம் பயிற்சியால் உயர்ந்து வருகிறது.

கண்ணெதிரே காண நேர்ந்த பொருள்களையெல்லாம் ஓர்ந்து நோக்கி அவற்றின் உண்மையான இயல்புகளைத் தேர்ந்து கொள்வது சிறந்த விவேகமாம். காவியங்களைக் கருதியுணர்வது போல் சீவ சுபாவங்களையும் சீர்மை நீர்மைகளையும் கூர்மையாய்த் துருவியறியின் அது அதிசய மதியாய்த் துதி செய்யப் பெறும்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெ’ய்’ப்பொருள் காண்ப(து) அறிவு! 355 மெய்யுணர்தல்

உயர்ந்த அறிவுக்கு இலக்கணத்தைத் தேவர் இவ்வாறு உணர்த்தியிருக்கிறார். காண நேர்ந்த பொருள் வெளியே எவ்வாறு தோன்றினும் சாரமான அதன் மூலவுண்மையைத் தெளிவாக அறிந்து கொள்வதே விழுமிய மெய்யறிவாம் எனத் தெளிவு படுத்தியிருக்கிறார். கருதி நோக்குவதில் உறுதி காண வருகிறது.

நிலம் நீர் தீ காற்று ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களின் கலவையால் உலகம் அமைந்திருக்கிறது. அகிலவுலகங்களுக்கும் ஆதாரமாய் ஓர் நித்தியப் பொருள் நிலைத்துள்ளது. அந்த உண்மைப் பொருளையே கடவுள் என்று நாம் சொல்லி வருகிறோம். அது எங்கும் நிறைந்துள்ளமையால் மெய்யறிவாளர் எந்தப் பொருளிலும் அதன் இருப்பை அறிந்து கொள்ளுகின்றனர்.

கண்டஇட மெல்லாங் கடவுள்மயம் என்றறிந்து
கொண்டநெஞ்சர் நேயநெஞ்சிற் கொண்டிருப்ப தெந்நாளோ. 10

- 12 அன்பர் நெறி, 45. எந்நாள் கண்ணி, தாயுமானவர்

ஞானிகள் காணும் காட்சியைத் தாயுமானவர் இவ்வாறு காட்டியிருக்கிறார். இது உயர்ந்த தத்துவக் காட்சியாம்; இத்தகைய நிலையை அடையாது போயினும் எப்பொருளையும் நுண்மையாய் நோக்கி அதன் உண்மையை உணர்ந்து கொள்பவன் உயர்ந்த புத்திசாலியாய் ஒளிபெற்றுச் சிறந்து விளங்குகிறான்.

The wisest man may always learn something from the humblest peasant! - Senn

தாழ்ந்த உழவனிடமிருந்தும் சில உண்மைகளை உயர்ந்த அறிஞன் எப்பொழுதும் அறியலாம் என்னும் இது இங்கு அறியவுரியது. நல்ல அறிவு நயங்களை நாடி அறிகிறது.

அறிவு எல்லையில்லாதது; எங்கும் எவ்வழியும் கருதியுணர்ந்து உறுதி காண வுரியது. இத்தகைய அறிவும் செயலால் உயர்வடைந்து வருகிறது. ‘கண் கண்டது கை செய்யும்’ என்பது பழமொழி. அறிவும் செயலும் கண்ணும் கையும் போல் மருவியுள்ளன. இரண்டும் கலந்தால் உயர்ந்த பலன்கள் விளைகின்றன.

தொழில் செய்து வருமளவுதான் வாழ்வு ஒளிமிகுந்து வருகிறது. தன் வாழ்க்கையைச் சீர்மையாய்ச் செய்து வருவதே ஒருவனது கூர்மையான அறிவுக்குப் பயனாம். கல்வி கற்பது அறிவு வளர; அந்த அறிவு வளர்ச்சி ஆன்ம வளர்ச்சிக்கு அனுகூலமாய் மேன்மை புரிந்து வர வேண்டும். சீவியத்தை அல்லலுறாமல் செய்து கொள்வதே நல்ல கல்வியாம்.

The best education in the world is that got by struggling to get a living - Wendell Philips

வாழ்க்கை வசதி பெற வருந்தி உழைப்பதால் பெறுவதே இவ்வுலகத்தில் உயர்ந்த கல்வியாம் என்னும் இது ஈண்டு உணர்ந்து கொள்ளத்தக்கது. முயற்சி செய், அதுதான் உயர்ச்சியான கல்வி; உண்மையான படிப்பு என்று உணர்த்தியிருக்கிறார்.

வினை ஆற்று என்றது அதனால் விளைந்து வரும் மேன்மைகளை நினைவூட்டி நின்றது. அரிய மதியூகம் உரிய கருமங்களோடு ஊன்றிவரின் அது பெரிய யோகமாய்ப் பெருகி இனிய போகங்களை ஊட்டியருளுகிறது. காரியம் புரிவதே சீரிய விவேகமாம்;

மதியூகமாய் வினை செய்பவன் அதியூகியாய் உயர்வதால் யாவரும் அவனை உரிமையோடு துதி செய்து வருகின்றார். தொழிலில் யூகம் தோய எழிலும் இன்பமும் எய்துகின்றன.

சாணையில் தீட்டிய கத்தி கூர்மை ஆதல்போல் செயலில் நாட்டிய அறிவு சீர்மையாய்ச் சிறந்த திகழ்கின்றது. அரிய கருமங்களை ஆற்றுபவன் பெரிய அறிஞனாய்ப் பேர் பெறுகிறான்.

Action is the proper fruit of knowledge - Thomas

அறிவின் சரியான கனி கருமமே என்னும் இது இங்கே கருதியுணர வுரியது. வினையாண்மை வித்தக விவேகமாகின்றது.

The great end of life is not knowledge, but action. - Huxley

வாழ்க்கையின் உயர்ந்த குறிக்கோள் அறிவு அன்று; செய்கையே எனச் சீவிய நிலையை இது குறித்துள்ளது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Jun-21, 7:54 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே