காதல் மனம்
கவிதை
காதல் மனம்
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
மங்கை ஒருத்தி
மதிமுகம் காட்டி
பூவிதழ்கள் விரிய
காதல்மொழி பேசினாள்!
சங்கு நாதம்போல்
கங்கை வெள்ளமாக
அவன் இதயம் புகுந்து
இன்பம் தந்தாள்!
மலர்விழி படபடக்க
மயக்கும் நிலைகண்டு
கவிதை வரிகளால்
சிறை வைக்க
அவன் மனம் துடித்தது!
வானில் வட்டமிடும்
அவள் முகம்
நிலவாய் நினைக்க
உள்ளம் மறுக்கிறது
நிலவு தேய்வதாலே!
குழல் யாழ் இனிது
குயில் இனிது உலகில்
அவன் நினைத்தான்
காதல்மொழி கேட்கும்முன்.
வெள்ளை உள்ளம்
கொள்ளை கொண்டு
உள்ளமெங்கும் பரவி
நிறைந்து விட்டாள்!
சிற்றுளி கொண்டு
அவள் உருவம் வடிக்க
சிற்பி சிந்தனைபோல்
காதல் மனம் சிறகடித்தது!