அம்மா

அன்பின் அகராதி...

ஓர் சொல்
உலகப்பொதுமறை...

என்
எல்லா முதலுக்கும்
சொந்தக்காரி...

கருவிலும் உருவிலும்
நான் உண்ட முதல் உணவு...
முதல் தீண்டல்...
முதல் முத்தம்...
நான் பழகிய
முதல் நடை...
நான் பேசிய
முதல் வார்த்தை...
நான் கற்ற
முதல் பாடம்...
என் முதல்
சிகையலங்காரம்...

தன்னலமற்றவள்
என் தாய்...
எனக்காய்
தவமிருக்கும் முதற்கடவுள்...

அமாவாசை
வெறுத்தேன்
என் தாயின்
நிலாச்சோறு
கிட்டாதென்பதை
உணர்ந்த நாள் முதல்...

அறிவியல் அறிந்தவள்
என் அன்னை...
அறிஞர் சரிதை
படித்தவள்...
எனினும்
இவ்வுலகில்
நானே அவளுக்கு
அதி புத்திசாலி...

சிறு வயதில்
நான் வினவும்
வினாக்கள்...
இறுதியில் முடியும்
ஆச்சர்ய குறியாய்
என் தாயின்
அழகிய முகத்தில்...

பிரபஞ்ச அழகி
அவள் எனக்கு...
நான்
காதல் பாடம்
பயிலும் வரை...

காலம் வென்ற
கம்பனும் தேவையில்லை...
என்னைப்போன்ற
கார்கால கவிஞனும்
தேவையில்லை கவிபாட...

பிஞ்சு குழந்தை
கொஞ்சும் மொழியில்...
அம்மா என்றழைத்தாலே
ஆயிரம் கவிதை!!

எழுதியவர் : பழனிவேல்ராஜன் (25-Jun-21, 8:18 pm)
சேர்த்தது : பழனிவேல்ராஜன்
Tanglish : amma
பார்வை : 364

மேலே