அன்னையர் தினம்
உயிரைத் தந்து உடலை வளர்த்து
உலவ விட்டாய் வீட்டிலே !
உன்னை உருக்கி உணவு தந்து
உயர வைத்தாய் அன்பிலே !
எந்தத் துயரம் வந்த போதும்
நொந்து போக வைக்கல…
அந்தத் துயரம் போன வழியை
எனக்கு நீயும் சொல்லல…
ஊரைச் சொல்லி உறவைச் சொல்லி
உண்மை தன்னை உரைத்தவள்.
பாசம் காட்டி படிப்பு ஊட்டி
பார் புகழச் செய்தவள்.
உன்னால் கிடைத்த உறவு எல்லாம்
உன்னைப் போல ஆகுமா ?
துன்பம் என்னைத் துரத்தும் நிலையில்
உன்னைப் போல நோகுமா ?
வாழ்ந்தால் வாழ்த்தும் உறவு என்றும்
வறுமை வந்தால் தேடுமா ?
வாடும் போது வாடி நிற்க
உன்னைப் போல நாடுமா ?
கொடுத்து விட்டு எடுத்துக் கொள்ளும்
உலகை எண்ணி வெறுக்கிறேன்.
என்று மிங்கே உன்னை எண்ணி
இதயம் துடித்து வாழுறேன்.
என்னை விட்டு உலகை விட்டு
விண்ணைத் தேடிச் சென்றவள்
கண்ணைவிட்டு சென்றுவிட்டு
கண்ணீர் பெருக வைத்தவள்.
அன்னை பாசம் இன்று இல்லை
என்னும் நிலையைத் தந்தவள்.
உன்னை நானும் இழந்து விட்டு
என்னை மறந்து தவிக்கிறேன்.
என்னை ஈன்ற அன்னை உன்னை
என்றும் நானும் மறப்பதோ ?
உற்ற தெய்வம் ஆன உன்னை
உள்ளம் வைத்துப் பேற்றுவேன் !