ஆசிரியத்துறை - முதல் வகை
ஆசிரியத் துறை நான்கு வகைப்படும்; நான்கு அடிகளாய் இடையிலே குறைந்த அடிகளை உடையனவாய் வருவது பொது இலக்கணம்; அந்த நால்வகையும் வருமாறு:
1. நான்கு அடி உடையதாய் ஈற்றயலடி குறைந்து வருவது.
2. நான்கு அடி உடையதாய் ஈற்றயலடி குறைந்து இடைமடக்காய் வருவது.
3. நான்கடியாய் இடையிடை குறைந்து வருவது.
4. நான்கடியாய் இடையிடை குறைந்து மடக்காய் வருவது.
ஒரடிக்கு எத்துணைச் சீரும் வரலாம்
1. கரைபொரு கான்யாற்றங் கல்லத ரெம்முள்ளி வருதி ராயின்
அரையிருள் யாமத் தடுபுலியோ நும்மஞ்சி யகன்று போக
நரையுருமே றுங்கைவேல் அஞ்சுக நும்மை
வரையா மங்கையர் வவ்வுத லஞ்சுதும் வார லையோ.
- உரைநூல்_மேற்கோள்_பாடல்
இது நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து, மற்ற அடிகள் மூன்றும் ஒத்து வந்த ஆசிரியத்துறை
ஆசிரியத்துறை - முதல் வகை
புலவர் அரசஞ் சண்முகனார் போற்றும் எங்கள் பெருந்தகையார்!
பொலிவாய் இன்ப நற்றமிழில் புதிது புதிதாய்க் கவிசெய்தார்!
திலகம் போன்ற நந்தமிழில் தேன்போல்
இலங்கு தமிழில் இன்பமுற இனிதாய்ப் பாக்கள் இயற்றினரே!
- வ.க.கன்னியப்பன்
மூன்றாவது அடியும் ஒத்திருந்தால் இது ஆசிரிய விருத்தமாகிவிடும்;
இது நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து, மற்ற அடிகள் மூன்றும் ஒத்து வந்த ஆசிரியத்துறை