உணர்வுகள் உறையவில்லை

சிறகடித்துப் பறந்தாலும்
சிந்தையில் உள்ளதோ
ஒருவழி பாதை !

வட்டவழியை விளித்து
வெட்டவெளி யாக்கி
உற்று நோக்கினால்

குறுகிய பார்வையும்
விண்ணளவு விரியும்
கையளவேனும் புரியும்

பூமியும் தெரிந்திடும்
புத்துலகம் புரிந்திடும்
புதுமைகள் விளங்கிடும்

வியப்பினை அளிக்கும்
விந்தையாக தெரியும்
விளைவுகளை உணர்த்தும்

செப்பனிடும் மனதால்
செய்பவை திருந்திடும்
செயல்களும் மாறிடும் !

வாழும் மனங்களுக்கு
மறந்தது பலவுண்டு
அறநெறிகள் அதிலுண்டு !

சீரழியும் சிந்தையால்
சிதையுறும் சிந்தனை
சீர்கெடும் சமுதாயம் !

அருளாசி எனும்பேரில்
நித்தமும் பிதற்றிடும்
நித்தியானந்தா நானல்ல !

அறிவுக்கு எட்டியதை
அனுபவம் உணர்த்தியதை
உரைக்கிறேன் உலகிற்கு !

ஏற்பதற்கும் மறுப்பதற்கும்
உரிமையுண்டு எவருக்கும் இது
கட்டாயமல்ல கட்டளையல்ல !

கற்றறியும் பாடத்தைவிட
பெற்றிடும் அனுபவங்கள்
போதிக்கும் பன்மடங்கு !

புரிந்ததைக் கூறினால்
புலம்பல் என்கிறாரகள் !
புரியாமல் பேசுபவரை
புத்திசாலி என்கிறார்கள் !

விந்தையான உலகிது
விவேகமிழந்த சூழலிது
உண்மைகள் உறங்குது
உணர்வுகள் இறக்குது !

வாய்மைக்கு இடமில்லை
வளம்பெற வழியில்லை
வாழ்க்கை இனிக்கவில்லை !

ஓலங்கள் குறையவில்லை
கூக்குரல்கள் எடுபடவில்லை
உணர்வுகள் உறையவில்லை !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (7-Jul-21, 2:59 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 294

சிறந்த கவிதைகள்

மேலே