அன்புள்ள அப்பா

"கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே"

என்ற சுப்ரபாத பாடல் காலையில் சத்தமாக ஒலிக்கவே சந்தியா
கண்களை கசக்கிக் கொண்டு மெதுவாக எழுந்து அமர்ந்தாள்.

"என்னமா சந்தியா எழுந்துட்டியா... இந்தா காபி குடி" என ஆவி பறக்க காபியை நீட்டினார் பாலமுருகன்.

" எதுக்குப்பா நீங்க இதெல்லாம் செய்றீங்க, நான் பாத்துக்க மாட்டேனா" என தூங்கி வழிந்து கொண்டே சொன்னவள் , "அப்புறம் இவ்வளவு சத்தமா சுப்ரபாதம் போட்டு கேட்கிறீங்க தல வலிக்குது" என தலையில் கை வைத்த படி கூறினாள்.

தலை வலிக்குதா என பாட்டை நிறுத்திவிட்டு , "ஹீட்டர் போட்டு இருக்கேன் போய் குளிச்சிட்டு வா. நான் சூடா தோசை சுட்டு வைக்கிறேன்" என்றார் பாலமுருகன்.

அப்பா வேணாம் நானே சமையல் செய்றேன் என வேகமாக எழுந்தாள். "வேணாமா உனக்கு மாடல் எக்ஸாம் இருக்கு நீ குளிச்சுட்டு ரெடியாகு அப்புறம் லேட்டாகிடும். நீ படிப்புல கவனமா இரு. இது காலேஜ் பைனல் இயர் தானே என அசால்ட்டாக இருந்துடாத. ரிட்டயர் ஆகிட்டு நான் வீட்ல சும்மாதான இருக்கேன் எக்ஸாம் எல்லாம் முடிகிற வரை வீட்டில் வேலை எல்லாம் நானே பார்த்துக்குறேன்" என்றார்.

"சரி... சொன்னா கேக்க மாட்டீங்க" என காலேஜ்க்கு தயாராக ஆரம்பித்தாள்.

சந்தியா போனில் "ஐ லவ் யூ டியர், உன்ன ரொம்ப மிஸ் பண்றேன்" என பேசிக் கொண்டிருந்தாள். அந்த நேரம் பார்த்து பாலமுருகன் வந்துவிட்டார்.

"யாருமா போன்ல" என்றார். "அப்பா அது என் ஃப்ரெண்ட்" என்றாள். பொய் சொல்லாதே அது பிரவீன் தானே என்றார். ஆமாம்பா பிரவீன் இருக்கான் இல்ல என சந்தியா சொல்லும்போதே அதை கேட்காமல் நான் தோசை எடுத்து வச்சிருக்கேன் வந்து சாப்பிடு என சொல்லிவிட்டு அமைதியாக கிளம்பிவிட்டார்.


சாப்பிட்டுவிட்டு காலேஜுக்கு கிளம்பினாள். "சந்தியா ஒரு நிமிஷம் லஞ்ச்
எடுக்க மறந்துட்ட பாரு" என டிபன் பாக்சை கொடுத்தார்.

"அப்பா லஞ்ச் எல்லாம் எதுக்கு..? நான் கேண்டீன்ல சாப்பிட்டுக்குறேன். என்ன புளி சோறு கட்டிட்டு வந்துட்டடியான்னு பிரெண்ட்ஸ் எல்லாம் கிண்டல் செய்றாங்க" என கெஞ்சினாள்.

"அவங்க கெடக்குறாங்க வெளியில சாப்பிட்டா உடம்பு கெட்டுடும் நீ லஞ்ச் எடுத்துட்டு போ" என வலுக்கட்டாயமாக கொடுத்து அனுப்பினார்.

"அப்பா.மறக்காம சாப்பிட்டுட்டு மாத்திரை போட்டுக்கோங்க சும்மா காபி குடிச்சிட்டு இருக்காதீங்க அப்புறம் சுகர் ஏற போகுது, அப்புறம் வாட்ச்மேன் மாதிரி நான் வர்றதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே வாசல்ல நின்னு வெயிட் பண்ணாதீங்க. நைட்டுக்கு எதும் சமைக்க வேண்டாம். நான் சீக்கிரமா வந்துருவேன், நானே பாத்துக்கிறேன். உங்களுக்கு மூட்டுவலி இருக்கு ரெஸ்ட் எடுக்கணும் டாக்டர் சொன்னார் இல்ல மறந்துடாதீங்க"என பாச மழையை பொழிய ஆரம்பித்தாள்.

"அது எல்லாம் நான் பாத்துக்குறேன் கவலை படாதே, நீ பாத்து பத்திரமா போயிட்டு வாம்மா காலேஜுக்கு லேட்டாக போகுது" என்றார்.

சந்தியா காலேஜ் முடித்து விட்டு வந்தாள். பாலமுருகன் தனது அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். "அப்பா இந்த டிரஸ் மாத்திட்டு வாங்க
உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்! உங்களை பார்க்க ஒரு விஐபி வந்திருக்கிறார் என்றாள்.

என்னவா இருக்கும் என மனதில் நினைத்துக் கொண்டே தயாராகி ஹாலுக்கு வந்தார். ஹால் முழுக்க அலங்கரிக்கப்பட்டிருந்தது. பலூன்கள் தொங்க விடப்பட்டிருந்தன. பர்த்டே கேக் வெட்ட தயாராக இருந்தது. "விஷ் யு ஹாப்பி பர்த்டே அப்பா" என்றாள்.

"சந்தியா எனக்கு பர்த்டேனு உனக்கு எப்படிமா தெரியும்" என பாலமுருகன் ஆச்சரியமாக கேட்டார். "எல்லாம் நம்ம பிரவீன் ஏற்பாடு தான். பிரவீன் வா ...என கூப்பிட்டாள் சந்தியா. பாலமுருகன் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றார்.

பிரவீன் மெதுவாக தயங்கிய படி வந்து நின்றான்."கல்யாணம் ஆகி அடுத்த நாளே நீ பாட்டுக்கு யூ.எஸ் கிளம்பி போய்ட இப்ப எதுக்குடா வந்த.... " என கோபமாக கேட்டார்.

"இவரு சண்டை போடுவார் நான் வரலைன்னு சொன்னேன் கேட்டியா சந்தியா" என்றான் பிரவீன். "உன்னை யாரு வா வா என வெத்தலை பாக்கு வச்சி அழைச்சா" என சொல்லிவிட்டு வேகமாக முகத்தை திருப்பிக் கொண்டார் பாலமுருகன்.


"நான் என்ன உங்களை விட்டுட்டு யுஎஸ்லே போய் செட்டில் ஆகிவிட்டேனா என்ன..? ஆபீஸ்ல ஒரு ப்ராஜக்ட் வொர்க் ஆறு மாசம் யூ.எஸ் போக வேண்டியிருந்தது போயிட்டு வந்தேன். இனி இங்க தான் இருப்பேன்" என்றான் பிரவீன்.

'முதல்ல அவனை என் கண்ணு முன்னாடி நிற்காமல் போக சொல்லு" என்றார் பாலமுருகன். "அப்பப்பா... உங்க அப்பா, பிள்ளை சண்டையை நிறுத்துங்கள்" என்றாள் சந்தியா.

"கல்யாணம் ஆகி அடுத்த நாளே பாரின் போய்விட்டான், பாவம்... என் மருமகள் சந்தியா அம்மா அப்பா வீட்டுல போய் கொஞ்ச நாளைக்கு இருந்துகோன்னு சொன்னா கூட வேணாம்பா நீங்க தனியா இருக்கீங்க இல்ல நான் உங்க கூடவே இருக்கேன்னு, இருந்து என்ன எப்படி பாத்துக்கிட்டா தெரியுமா என்றார்.

சந்தியா காலேஜ் கடைசி வருடம் படிக்கும் போதே அவளுக்கும் பிரவீனுக்கும் திருமணம் ஆகிவிட்டது.திருமணம் ஆனா கையுடன் பிரவீன் யூ.எஸ் சென்றுவிட்டான். ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. அவள் பாலமுருகனை தனது அப்பா போல பார்த்துக்கொள்கிறாள். அவரும் அவளை மகள் போலவே நடத்துகிறார். ஆனால் பிரவீன் சிறுவயதில் இருந்தே அவனுக்கும் அப்பாவுக்கும் செட் ஆனதே இல்லை எப்பவும் அவர்களுக்கு நடுவே ஒரு இடைவெளி இருந்து வந்தது.

"அப்பா நீங்க டென்ஷன் ஆகாதீங்க... உங்களுக்கு பிறந்த நாள்னு எவ்ளோ ஆசையா புது ட்ரஸ் கேக் எல்லாம் பிரவீன் வாங்கிட்டு வந்து இருக்கான். அவனை போய் திட்டுறீங்களே... வாங்க வந்து கேக் வெட்டுங்க என்றாள் சந்தியா.

"எனக்கு பிறந்தநாள் ஒன்னும் கொண்டாட வேண்டாம்" என வேகமாக அறைக்குள் சென்றுவிட்டார். "ஏன் சந்தியா நீ வாங்கிட்டு வந்த டிரஸ் கேக் எல்லாம் நான் வாங்கிட்டு வந்தேன்னு சொன்ன...? இப்ப பாரு கேக் வெட்டாம கூட போயிட்டாரு. உனக்கு தெரியாது சந்தியா சின்ன வயசுல இருந்தே எனக்கும் அப்பாவுக்கும் செட்டாகாது என்றான் பிரவீன்

அவர் கோபத்தில் போகல சந்தோஷமா தான் போயிருக்கார் என்றாள். சந்தோசமாக என பிரவீன் குழம்பினான். ஆமா வா... என பிரவீனை அழைத்துக்கொண்டு பாலமுருகன் ரூம் அருகில்சென்றாள். பாலமுருகன் கண்ணாடியில் அவரை ஒருமுறை பார்த்துவிட்டு மீசையை முறுக்கிக்கொண்டார். அப்புறம் அவர் மனைவி சிவகாமி போட்டோ முன் நின்று சொன்னார். "பார்த்தியா சிவகாமி என் பையன் பிறந்த நாளைக்கு எனக்கு டிரஸ் வாங்கிக் கொடுத்திருக்கான் ஆனால் நான் தான் கொஞ்சம்
கோபத்தில் திட்டி விட்டேன் என தலையில் மெதுவாக தட்டிக் கொண்டார். பிரவீன்
பிறந்த அப்போ நமக்கு பையன் பிறந்து இருக்கான் என என் கையில அவனை நீ
கொடுத்த, ரொம்ப குட்டியா, மென்மையா, சின்னதா இருந்தான் என்னால அவனை சரியா பிடிக்க முடியல காயம் ஏதோ பட்டுருமோனு பயமாயிருந்தது. அவனை எப்படி
கொஞ்சுவது, அவன் கிட்ட எப்படி பாசத்தை வெளிப்படுத்துவதுனு எனக்கு தெரியாம
இருந்துச்சு. இருபத்தைந்து வருடம் ஓடிருச்சு ஆனா இன்னும் அவன் கிட்ட எப்படி
பேசுறது என் பாசத்தை எப்படி வெளிப்படுத்துவது என எனக்கு தெரியல அவன
புரிஞ்சுக்கவும் முடியல. நீ பாட்டுக்கு பிரவீன் 10 வயசா இருக்கும்போதே போய்
சேர்ந்துட்ட.... அம்மா இல்லாத பிள்ளை என்று ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்து
விடக்கூடாது நல்ல பையனா வளர்க்கணும்னு அப்போதிருந்தே ஒரே கண்டிப்புடனே
அவனை வளர்த்தேன். அதற்காக அவன் மேல பாசம் இல்லாமலாம் இல்ல. ஆறு மாசத்துக்கு முன்னாடி வந்த மருமகள் சந்தியா என்ன புரிஞ்சுகிட்டா ஒருநாள் நம்ம பிள்ளையும் புரிஞ்சுப்பான்" என கண்ணீரைத் துடைத்தவாறே போட்டோவை பார்த்து புலம்பிக் கொண்டிருந்தார்.


இவர் பேசியதெல்லாம் சந்தியாவும் பிரவீனும் வெளியே இருந்து கேட்டுக்கொண்டிருந்தனர். பிரவீன் கண்களும் கலங்கியது. "அப்பா அம்மா போட்டோ முன்னாடி எவ்வளவு நாள் பேசி இருக்காரு. ஆனா நான் எதையும் காது கொடுத்து கேட்டதில்லை. அவர் பாசம் எல்லாம் எனக்கு புரியாம இல்ல... ஆனா ஏன் இவ்வளவு கோபப்படுகிறார் கண்டிப்புடன் இருக்கான்னு நினைப்பேன். ஆனால் அவர் மனசுக்குள்ள என்கிட்ட மனசு விட்டு பேசணும், பாசமா நடந்துக்கணும், அவர் என்ன புரிஞ்சுக்கணும் அவரை நான் புரிஞ்சுக்கணும் என இப்படி எல்லாம் நெனச்சி பீல் பண்ணுவாருனு எதிர் பாக்கல" என வருந்தினான்.

"ரொம்ப எல்லாம் பீல் பண்ணாத உனக்கு அது சூட் ஆகலை. போய் அப்பாவை கேக் வெட்ட கூட்டிட்டு வா" என சந்தியா கூறினாள். நானா... முடியாது என தயங்கினான். "அவரு உன் அப்பா தானே அப்புறம் நீ தான் போகணும்" என அவனை போ என தள்ளினாள்.

பாலமுருகன் அறைக்குள் சென்ற பிரவீன் "என்னை மன்னிச்சிடுங்கப்பா" என
அவரை உருக்கத்துடன் கட்டிப்பிடித்தான்.

"எதுக்கு இப்ப மன்னிப்பு எல்லாம் கேக்குற நீ வேலை விஷயமா தானே போன. தன் பிள்ளை வாழ்க்கையில் முன்னேறுவது எந்த அப்பாவுக்கு தான் பிடிக்காது. என்ன கொஞ்ச நாள் கழிச்சு போயிருக்கலாம் கல்யாணமாகி அடுத்த நாளே போய்ட அதுதான் எனக்கு கொஞ்சம் கோபம் அவ்வளவுதான் என்றார்.

சரி வாங்கப்பா கேக் வெட்டுங்க என பிரவீன் அவரை அழைத்துச் சென்றான். பாலமுருகன் கேக் வெட்டி பிரவீனுக்கும் சந்தியாவிற்கு ஊட்டினார், அவர்களும் அப்பாவிற்கு கேக் ஊட்டினர். "இன்னைக்கு எனக்கு ரொம்ப சந்தோஷமா
இருக்கு" என அவர் தோளில் ஒரு புறம் சந்தியாவையும் மறுபுறம் பிரவீன் சாய்த்துக்
கொண்டே சொன்னார். இன்றுஅப்பா பிள்ளைக்கு நடுவே எந்த இடைவெளியும் இல்லை. சந்தியாவின் அன்பு பாலம் மட்டுமே இருந்தது.

எழுதியவர் : (8-Jul-21, 4:14 pm)
சேர்த்தது : Lakshmi
Tanglish : anbulla appa
பார்வை : 159

மேலே