மனுவின் குலம்தழைக்க வந்த தனிவிதியே நீதியென ஓதி ஒழுகும் உலகு - தகவு, தருமதீபிகை 853

நேரிசை வெண்பா

மாநிலத்தில் வந்த மனுவின் குலம்தழைக்கத்
தானுதித்து வந்த தனிவிதியே - ஞானமுயர்
நீதியென நின்று நிலவும் அதனையே
ஓதி ஒழுகும் உலகு! 853

- தகவு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

இந்த உலகத்தில் தோன்றிய மனித சமுதாயம் இனிது வாழ்ந்து வரும்படி அமைந்த விதிமுறையே தருமநீதியாய் மருவியுளது; அந்த உண்மையை உணர்ந்து அதன் வழியே யாவரும் ஒழுகிவரின் எவ்வழியும் அதிசய நலன்கள் மேவி வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உலக வாழ்க்கையில் மனிதன் பல வகையான தொடர்புகள் உடையவன். தன்னைச் சார்ந்துள்ள சூழலின் நோக்கையும் உலகப் போக்கையும் தழுவி ஒழுகும் வகையில் அவனுடைய வாழ்வு நேர்ந்திருக்கின்றது. சேர்ந்து நிற்கின்ற சமுதாய நிலைகளை ஓர்ந்து நடந்து வருவதில் ஊறுகள் நேராமல் சீரோடு வாழ்ந்துவரின் அது சீரிய வாழ்வாய்ச் சிறந்து திகழ்கின்றது.

பாடறிந்து ஒழுகும் பண்பு மனிதனிடம் படிந்திருத்தலால் அவன் கூடி வாழும் குழுவில் கோதுகள் கூடாமல் நாடியுணர்ந்து நயமாய் நடந்து கொள்கிறான் தனி மனிதனும் சமுதாயமும் இனிது வாழ்ந்து வரும்படி அமைந்துள்ள சீவிய ஒழுங்குதான் நீதிமுறை என நேர்ந்துள்ளது. தன் நெஞ்சே நியம விதியாய் நடப்பவர் உயர்ந்த தரும சீலராய் ஒளிபெற்று நிற்கின்றார். அரசு முறை இவரைப் பரசி வருகிறது. இத்தகைய உத்தமர்கள் இருக்கும் நாடு புத்தேளுலகமாய்ப் பொலிந்து விளங்குகிறது.

பாவம் யாதும் படியாமல் எவ்வழியும் புண்ணிய எண்ணங்கள் படித்து வருபவர் இவ்வுலகிலேயே விண்ணோர்களாய் வாழுகின்றனர். தரும சிந்தனை இருமை இன்பங்களையும் ஒருங்கே அருளுகின்றது. தூய எண்ணங்களே புண்ணியங்களாகின்றன.

கலித்துறை
(தேமா கூவிளம் கூவிளம் கருவிளம் தேமா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)

புண்ணி யம்புரி பூமிபா ரதில்வரு போகம்
நண்ணி யின்புறு பூமிவா னாடென்ப நாளும்
புண்ணி யம்புரி பூமியு மதில்வரு போகம்
நண்ணி யின்புறு பூமியு மதுரைமா நகரம் 103

- மதுரைக் காண்டம், திருவிளையாடல்

பாண்டிய மன்னன் அரசு ஆண்டு வருங்கால் இந்நாட்டில் இருந்த மக்கள் நிலையையும் இந்நகரின் இயல்பையும் இது காட்டியுள்ளது. தம் உள்ளமே சான்றாக ஒழுகி வந்துள்ளமையால் எல்லோரும் சான்றோராய் விழுமிய நிலையில் கெழுமி நின்றனர்.

குற்றம் செய்தால் அரசன் தண்டிப்பான் என்று அவனது ஆணைக்கு அஞ்சி அடங்கி நடப்பவர் உயர்ந்தவராகார். தம் நெஞ்சே சாட்சியாய் நெறியே நடப்பவரே நீதிமான்களாய் நிலவுகின்றார். மனம் புனிதமானால் மனிதன் தெய்வமாகிறான்.

அரச நீதியான சட்டம் திட்டமாயிருந்தாலும் அதனையும் மீறிக் கெட்டவர்கள் கேடு செய்கின்றனர்; யாதொரு சட்டமும் இல்லாவிடினும் நல்லவர்கள் தம் உள்ளமே விதியாய் யாண்டும் நெறியே ஒழுகி எவ்வழியும் செவ்வியராய் வருகின்றனர்.

மனமே சாட்சியாய் ஒழுக நேர்ந்த போது அந்த மனித மரபு புனிதமான தெய்வ இனமாய்ப் பொலிந்து திகழ்கிறது. சுகமும் கீர்த்தியும் நன்மையிலிருந்து விளைகின்றன; துக்கமும் பழியும் தீமையிலிருந்து வருகின்றன. விளைவுகள் விழியூன்றி யுணரவுரியன.

துன்பத்தையும் இழிவையும் எவரும் விரும்புவதில்லை; இன்பத்தையும் புகழையுமே யாவரும் விழைகின்றனர். விழைந்தும் அவை கிடையாமல் பலர் இழிந்து போகின்றனர். தம்முடைய இழிவுக்கும் இழவுக்கும் காரணம் என்ன? என்பதைக் கருதி யுணராமையால் அவரது வாழ்வு பரிதாபமாய்ப் பாழ்படுகின்றது.

தம்மை நல்லவர் என்று பிறர் சொல்ல வேண்டும் என்றே எல்லோரும் விரும்புகின்றனர். விரும்பியும் பொல்லாத பழக்கங்களால் பிழைகளைச் செய்து பீழையுறுகின்றார். நல்ல பிள்ளைகளும் கெட்டவர்களோடு சேர்ந்து கெட்டு விடுகின்றனர்.

நல்லது வேண்டும் என்றே நாடியுள்ள மனிதன் அல்லலடைந்து அலமந்து உழல்வது உள்ளம் கோடியதால் நீடியது.

True goodness springs from a man’s own heart.
All men are born well - Confucius

மனிதனுடைய சொந்த உள்ளத்திலிருந்துதான் உண்மையான நன்மை ஊறுகிறது; எல்லா மனிதரும் நல்லவராகவே பிறக்கின்றனர் என்னும் இது இங்கே குறிப்போடு கூர்ந்து சிந்திக்க வுரியது. நன்மை தோய்ந்து வந்தவன் தீயனாயிழிகின்றான்

இங்ஙனம் நல்ல நிலையில் பிறந்த மனிதன் உள்ளத்தை மழுக்கி ஒழுங்கை மீறிப் பொல்லாதவனாய்ப் புலையுறுவது புல்லிய புலைப் பழக்கத்தாலேயாம். கள்ளன், பொய்யன், வஞ்சன், துரோகி என மனிதன் வெளியே பேரெடுத்து நிற்பது உள்ளே அவனுள்ளம் பிழையாய்ப் பழுதுபட்டுள்ளமையை உணர்த்தியுள்ளது. அகநிலையே புற வாழ்வாய்ப் புலனாய் வருகிறது.

தன் உள்ளம் புனிதமாய்த் தரும நீதியோடு ஒழுகிவரின் அந்த மனிதன் உயர்ந்த மகானாய் ஒளி சிறந்து நிற்கின்றான். மனித சமுதாயம் முழுவதும் அவனை மதித்துப் போற்றி மகிழ்கிறது.

There is a natural aristocracy among men.
The grounds of this are virtue and talents. - Thomas Jefferson

மனிதருள் இயல்பாகவே தலைமையான ஒரு குல மேன்மை தோன்றுகிறது; தரும குணமும் தக்க அறிவுமே அதற்குக் காரணங்களாயுள்ளன என இது காட்டியுள்ளது. நீதிநெறி மனிதனை உன்னத நிலையில் உயர்த்தி ஒளி செய்தருளுகிறது; மன்னனும் அவனை மகிழ்ந்து புகழ்ந்து மதித்து வருகின்றான்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Jul-21, 10:22 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

சிறந்த கட்டுரைகள்

மேலே