வைதேகி காத்திருந்தாள்

வைதேகி காத்திருந்தாள்.

விடியற்காலை வேலை மார்கழி குளிர் உடலை நடுங்க வைத்தது. போர்வைக்குள் என் உடல் முழுவதும் தஞ்சம். தூக்கம் மீண்டும் கண்களை தழுவ, அழகான கனவு ஒன்று கண்டேன். அது ஒரு காலை நேரம் மணி 9. அப்பாவின் செல்போன் அலறியது. எடுத்துப் பேசினார். சந்தோஷத்தில் மிதந்தார்." பங்கஜம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பஸ் ஸ்டாண்ட் வந்துட்டாங்க, இன்னும் அஞ்சு நிமிஷத்துல நம்ம வீட்டுக்கு வந்திடுவாங்க வைதேகி ரெடியா காபி டிபன் ரெடியா".
" எல்லா ரெடிங்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்து நம்ம வைதேகியை பார்த்து ஓகே  வேண்டியதுதான் பாக்கி".
மாப்பிள்ளை, அவரின் அப்பா அம்மா மாப்பிள்ளையின் அக்கா, அக்கா வீட்டுக்காரர் ஐந்து வயது  மதிக்கத்தக்க ஒரு சிறுமி ஆட்டோவிலிருந்து இறங்கினர்.  "மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க" அப்பா பதற்றத்துடன் அம்மாவை பார்த்து சொன்னார். அடுப்பங்கரை ஜன்னல் வழியே மாப்பிள்ளை பார்த்துவிட்டேன். முதல் பார்வையிலேயே பிடித்துவிட்டது. சராசரி ஆணுக்கு ஏற்ற உயரம். மாநிறம். அடர்ந்த தலைமுடியை வகிடு எடுத்து படிய வாரி இருந்தார். மெலிதாகவும் இல்லை குண்டாகவும் இல்லை பூசன மாதிரி உடல் வாகு. என்ன ஒரு கண்கள். கவர்ந்து இழுக்கும் காந்தம். அதற்காகவே இவரை திருமணம் செய்து கொள்ளலாம்.
ஹாலில் போடப்பட்டிருந்த சோபா செட்டில் மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் அமர்ந்தனர். மாப்பிள்ளையின் அக்கா
" உங்க பொண்ண வர சொல்லுங்க" என்றாள் கனிவாக.
காப்பி தட்டுடன் அரக்கு கலர் பட்டுப் புடவை அணிந்து குனிந்த தலை நிமிராமல் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு கொண்டவளாய் அனைவருக்கும் காப்பியை விநியோகம் செய்தாள். வைதேகியை மாப்பிள்ளை வீட்டாருக்கு மிகவும் பிடித்துவிட்டது. சந்தோஷ ரேகை அனைவர் முகத்திலும் ஓடியது. குறிப்பாக மாப்பிள்ளை குதூகலத்துடன் காணப்பட்டார். வைதேகி வீட்டினுள் வந்துவிட்டாள். "எங்களுக்கு உங்க பொண்ணு ரொம்ப பிடிச்சிருக்கு, எங்க பையனுக்கும் இதுல பூரண சம்மதம்" என்று மாப்பிள்ளையின் அம்மா கூற,  அப்பவும் அம்மாவும் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. பிறகு  மாப்பிள்ளை வீட்டார் எவ்வளவு நகை, எந்தந்த சாமான் செட், பையனுக்கு பைக், இப்படி பேரம் பேச ஆரம்பித்தார்கள். அப்பா அனைத்துக்கும் சம்மதித்தார். மார்கழி முடிந்ததும் தை முதல் வாரத்திலே கல்யாணத்தை வச்சிக்கலாம். ரொம்ப சந்தோஷம், இருவீட்டாரும் ஒரு சேர கூற, மாப்பிள்ளை வீட்டார்  உத்தரவு வாங்கினர். வைதேகி மீண்டும் அடுப்பங்கரை பக்கம் ஓடிவந்தாள் மாப்பிள்ளையை மீண்டும் ஒருமுறை பார்த்தாள். இந்த முறை அவள் ஜன்னல் வழியே பார்ப்பதை மாப்பிள்ளை பார்த்துவிட்டார். கண்களால் கவரப்பட்ட இருவரும் பரவசம் அடைந்தனர். ஆட்டோ புறப்பட்டது. வைதேகி ரெக்கை கட்டி பறந்தாள். எப்போது தை வரும். ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தாள்.
"வைதேகி எழுந்துருடி ஞாயிற்றுக்கிழமை இன்னா குப்புறப்படுத்து காலையில எட்டு மணி வரைக்கும் தூங்கனுமா, நிறைய வேலை இருக்கு, எழுந்துருடி. இப்படி தூங்கினா தரித்திரம் தான்
தாண்டவமாடும்.
வைதேகி விழித்துக் கொண்டாள்.  சோம்பலை முறித்த அவள் நிலைக்கண்ணாடி முன் நின்று தனக்கு தானே சிரித்துக்கொண்டாள்.
செவ்வாய் தோஷம் என்ற ஒரு மிகப்பெரிய மூடநம்பிக்கையை வைத்துக்கொண்டு என் திருமண வாழ்க்கையை
தாமதப்படுத்தும் பெற்றோரை எண்ணி வேதனைப் பட்டாள் மீண்டும் ஒரு முறை நிலைக் கண்ணாடியை பார்த்து வாய்விட்டு சொன்னாள் "ஏய் வைதேகி உனக்கு இந்த தை வந்தா வயசு எவ்வளவு தெரியுமா முப்பத்தி ஒன்னுடி. எப்போ டி கல்யாணம். யாருடி மாப்பிள்ளை. அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்".

- பாலு.

எழுதியவர் : பாலு (14-Jul-21, 5:47 am)
பார்வை : 257

மேலே