கொள்ளி

பறவைகளின் பலவகை இசைகளும் இடிமுழக்கத்துடன் கூடிய மழையின் இசையுமாய் புலர்ந்து கொண்டிருந்தது அன்றைய பொழுது.

'மியாவ்... மியாவ்...' பூனையின் சுரண்டலையடுத்து கண் விழித்தார் வீரவாகு. மழை இருட்டு காரணமாய் விடிந்தும் விடியாததுமாய் இருந்தது.

படுத்த பாயினை சுற்றி ஒரு ஓரமாக வைத்துவிட்டு கம்பளி ஒன்றினால் போர்த்திக் கொண்டு வெளியில் வந்தார். காலை சுற்றி குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கொண்டிருந்த பூனைக்கு பிஸ்கட் ஒன்றை உடைத்து கொடுத்துவிட்டு வெளி திண்ணையில் அமர்ந்து கொண்டு மழையை பார்த்துக்கொண்டிருந்தார்.

அவரின் மனைவி இந்திராவும் எழுந்து வந்து அடுப்படியில் இருந்த பழைய சாம்பலை அள்ளி புதிதாய் விறகுகளை அடுக்கி அடுப்பை மூட்டி குளிர் காய்ந்து கொண்டிருந்தார்.

அமைதியாய் இருந்த பொழுதைக் கிழித்துக் கொண்டு திடீரென எங்கிருந்தோ எழுந்த பறையோசையில் இருவருமே திடுக்கிட்டு போனார்கள். மழைக் காலம் என்பதால் சத்தத்தின் வீரியம் அருகில் எங்கோ தான் என உணர்த்தினாலும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பறை ஓசை வந்த திசையில் இருக்கும் எல்லா வயசானோரும் வந்து போயினர்.

பறையின் ஓசையில் நினைவுகளில் இருக்கும் இறப்பின் வலிமையும் வலியையும் புரியவைக்கும் ஆற்றல் உண்டு தான்.

எட்டு வீடு தள்ளி இருக்கும் பார்வதம் அக்காவுக்கு அழைப்பை எடுத்து விபரம் அறிந்து வீரவாகுவிடம் கூறினாள்.

"சரி... தேத்தண்ணியை தா. குடிச்சிட்டு ஒரு எட்டு போய் பார்த்திட்டு வந்திடுறன்..." - வீரவாகு

"கவனமாக இருக்கோனும் பா... கொரோனா கேஸோ தெரியாது..."

தேநீரை குடித்துவிட்டு குடையை பிடித்துக் கொண்டு செத்தவீட்டை நோக்கி நடையை கட்டினார் வீரவாகு.

வீரவாகு சுடலையில் பிணங்களை எரிக்கும் வெட்டியான் வேலை செய்து வருபவர். மனைவி இந்திரா மகள் பிரமிளாவுடன் வாழ்ந்து வருகிறார். ஊருக்குள் மின்சார மயானம் வந்ததன் பின்னர் சுடலைக்கு வரும் எண்ணிக்கையும் குறைவடைய தொடங்கியது. வருமானமும் இல்லாமல் போனது.

செத்தவீட்டில்,

"அப்பாட மோதிரம் மகனுக்கு தானே சொந்தம். மோதிரத்தை தராமல் நான் உந்தாளுக்கு கொள்ளி வைக்கமாட்டன்..." இறந்து போன வைரவநாதனின் மூத்த மகன் சதாசிவம் குடி போதையில் தகராறு பண்ணிக் கொண்டிருந்தான். எங்கோ சேத்தில் விழுந்தெழும்பி இருக்கவேண்டும் என்பதை அவனுடைய சட்டை சொல்லியது. சேரும் சகதியுமாய் இருந்தது. முழுமையாய் தொப்பையாக நனைந்து கொண்டு வெறியில் கத்திக்கொண்டு இருந்தான்.

"அவர்ட மோதிரம் அடகுகடையில் தான் இருக்கு... கடைசி கால செலவுக்கு அதை அடகு வைச்சு தான் சமாளிச்சன்... இப்போ ஆகவேண்டியதை பாருங்கோ ண்ணா... பிறகு நான் எடுத்து தாறன்..." தங்கை பிரேமா அழுதுகொண்டு கெஞ்சிக்கொண்டிருந்தாள்.

"அதெல்லாம் முடியாது... முதல்ல மோதிரத்தை வை..."

"அண்ணா... தயவு செய்து நான் சொல்லுறதை கேளுங்கோ ண்ணா... இப்பிடி முரண்டு பிடிக்க வேண்டாம் ண்ணா. பாருங்கோ... எல்லோரும் எங்களை தான் பார்க்கினம்... மானம், மரியாதை எல்லாம் போகுது... தயவு செய்து...." - பிரேமா


"என்னடி பெரிய மானம், மரியாதை... எனக்கு சேர வேண்டிய மோதிரத்தை எடுத்துக் கொண்ட களவாணி குடும்பம் தானே டி நீங்கள்... மோதிரம் இப்ப வராமல் கொள்ளி வைக்கமாட்டன். நானும் பார்க்கரன் டி எப்பிடி சவத்தை எடுக்கிறீங்கள் என்று...." - சதாசிவம்

"அண்ணா... அப்பாட இறுதி கிரியைகளை நல்லபடியாக செய்து முடியுங்கோ ண்ணா... அந்த ஜீவனை இப்பிடி அந்தரிக்க விடாத... உன்னை கெஞ்சி கேட்டுக்கிறன்... அடகு மீட்டதும் மோதிரத்தை உன்கிட்டயே கொடுத்திடுறன்... என்னை நம்பு அண்ணா..."

"மோதிரத்தை வைத்தால் வேலை நடக்கும். இல்லாட்டிக்கு இல்லை... " கூறியவன் போதையை ஏற்றிக்கொள்ள கள்ளு தவறனை நோக்கி புறப்பட்டான்.

வீடே அழுகையில் மூழ்கியது. மழையும் விட்டபாடாக இல்லை. நேரம் போக போக அதிகரித்துக் கொண்டிருந்தது.

வெளியில் நின்ற பெரியவரிடம்,

"ஐயா... எந்த சுடலைக்காம் கொண்டு போறினம்..." - வீரவாகு

"கரண்ட் ல தான் எரிக்கிறது. கொரோனா காலம் என்றதால வெளியில் எரிக்க தரமாட்டாங்களாம்..."

"ஓஹ்... அப்பிடியே... சரி சரி..."


**************


வீட்டுக்குள்,

"பிள்ளை... ஐயர் வந்திட்டார்... கிரியைகளை தொடங்கோனும்... யார் கொள்ளி வைக்கிறது..." ஊர் பெரியவர் அப்புச்சி பிரேமாவிடம் கேட்டார்.

"அண்ணா இப்ப வந்திடுவார் அப்புச்சி... நீங்கள் தயார் பண்ணுங்கோ..."

"பிள்ளை... அவன் தண்ணியை போட போயிருக்கிறான்... அவன் செய்வான் போல இல்லை... வேற யாரும் தான் செய்யோனும்..."

"உங்களுக்கு தெரியும் தானே அப்புச்சி... அப்பாவுக்கு ஒரே ஒரு ஆம்பிளை பிள்ளை தானே..."

"அதுவும் சரி தான்..." என சற்று யோசித்தவர்

"பிள்ளை... நீயே நின்று செய்... ஒன்றும் பிரச்சனை இல்லை..."

பிரேமா மட்டும் இல்லை சுற்றி இருந்தவங்களும் அதிர்ச்சியடைந்தனர்.

"உங்களுக்கென்ன பைத்தியமே அப்புச்சி... எங்கேயாச்சும் பொம்பளை பிள்ளை கொள்ளி வைக்கிறதே... நடக்கிற காரியத்தை கதையுங்கோ.... கொஞ்சம் பொறுங்கோ மகன் வரட்டும்..." பெண்கள் கூட்டத்தில் இருந்து ஒருவர் கதைத்தார்.

"இதில என்ன இருக்கு. ஊர் உலகத்தில் நடக்காததா என்ன... ஆம்பிளைப்பிள்ளை இல்லாட்டி அனாதையாய் கொண்டு போய் எரிக்கிறதா? மனைவியோ, மகளோ வைத்து செய்யிறதில்லையா... அதுபோல தான். பிள்ளை உன்ர புருஷன் எங்கே..." அப்புச்சி கேட்டார்.

"நிற்கிறார் அப்புச்சி... ஏன் கேட்கிறியல்" - பிரேமா

"நீங்கள் இரண்டு பேரும் நின்று செய்யுங்கோ. கரண்ட் ல தானே எரிக்கிறது. பிள்ளை நீ இங்கே வைத்து கற்பூரத்தை கொழுத்தி கொள்ளி வைச்சுவிடு... மிச்சத்தை உன்ர புருஷனை வைச்சு நாங்கள் அங்க பார்த்துக்கிறோம்... போயிட்டு சீக்கிரம் ரெடியாகிட்டு வாங்கோ..."

பிரேமா தன் கணவனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று தயாரானாள்.

கிரியைகள் எல்லாம் முடித்து உடலத்தை எடுத்துக் கொண்டு மயானத்தை நோக்கி புறப்பட்டனர்.

************

வீரவாகுவின் வீட்டில்

"இப்பிடியே எல்லோரும் கரண்ட் இல் எரிக்க தொடங்கினால் நாம எப்பிடி தான் பிழைக்கிறது என்று தெரியலை..." - வீரவாகு

"இனி உதை விடவேண்டியது தான்பா... வீட்டுக்கு பின்னுக்கு இருக்கிற சின்ன துண்டில கத்தரி, மிளகாய் நட்டு சின்னதாய் தோட்டம் செய்வோம் ப்பா... எத்தனை நாளைக்கு தான் வேலை வரும் வரும் என்று பார்த்திட்டு இருக்கிறது...." - மனைவி இந்திரா

"அப்பா... உங்களுக்கு வேலை வேணும் என்று கேட்கிறது சரி தான். ஆனால், சடலத்தை எரிக்கிறதுக்கு எத்தனை காடுகள் அழிக்க வேண்டி இருக்கு தெரியுமேப்பா... இப்போல்லாம் யாரு மரங்கள் நடுகிறாங்கள். காடுகளையும் வயல்களையும் அழிக்கிறதை மட்டும் தான் செய்யிறாங்கள்.

இப்போ சுடலைக்கு பக்கத்தில எல்லாம் குடிமனைகள் வந்திட்டுது. போகிற போக்கில் சுடலைகளை இடிச்சு தள்ளிட்டு வீடுகள் வந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லைப்பா... அப்பிடியிருக்கும் போது பொதுவெளியில் எரிக்கிறதும் சுகாதாரத்துக்கு கேடு தானே பா... அப்பிடி பார்க்கும் போது கரண்ட்ல எரிக்கிறது நல்லது தானே... செலவும் குறைவு..." - மகள் பிரமிளா விளங்கப்படுத்தி கூறினாள்.

மகள் சொல்வதில் அர்த்தம் இருப்பதாய் உணர்ந்த வீரவாகு தலையை ஆட்டியவாறு ஏதோ யோசனையில் மூழ்கினார்.

***************

மழை விட்டபாடில்லை...

அரை மணி நேரம் கழித்து வந்த சதாசிவம் தந்தையின் உடலத்தை காணாது கோபத்தின் உச்சிக்கு போனான். கெட்டவார்த்தைகள் கூறி எல்லோரையும் திட்டி சத்தம் போட ஆரம்பித்தான்.

நீள் சட்டையை இடுப்பில் கட்டிக்கொண்டு வெட்டுக்கத்தியுடன் வெளியில் வந்தாள் பிரேமா.

"என்ன பிரச்சனை உனக்கு... மோதிரம் மட்டுமில்லை... இந்த வீட்டில இருந்து ஒரு பிடி மண்ணு கூட உனக்கு கிடையாது.... அந்த மனுஷன் உயிரோட இருக்கக்க எப்பயாச்சும் வந்து பார்த்தனியா... எத்தனை தடவை வரச்சொல்லி கெஞ்சியிருப்பன்... அப்போ எல்லாம் வராமல் இப்போ எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு மோதிரம் கேட்கிறாய்... வெட்கமா இல்லை உனக்கு..." - பிரேமா பத்திரகாளியாய் அவதராம எடுத்திருந்தாள்

"எனக்கு உந்த கதையெல்லாம் தேவதையில்லை.... மோதிரம் ஆம்பிளைபிள்ளைக்கு தான் உரித்து..." - சதாசிவம்

"அடச்சீ... த்தூ... வெட்கமாயில்லை உனக்கு... நீயெல்லாம் ஒரு ஆம்பளை என்று வந்து கதைக்கிறியா... "

"என்னடி வாய் நீளுது..." பிரேமாவை நோக்கி கையை ஓங்கியவாறு நெருங்கினான்.

"இதுக்கு மேலேயும் கதைச்சாய் என்றால் கை தான் நீளும்..." என கத்தியை தூக்கி காட்டியதும் சதாசிவம் சற்று பின்னோக்கி சென்றான்.


"மகனை காணோணும் என்று சாகும் போது என்ன வேதனைப்பட்டாரோ... உன்னையெல்லாம் கடைசி வரைக்கும் 'மகன் தன்னை வந்து பார்ப்பான்' என்று நம்பிட்டு இருந்தார். அவரை சொல்லனும்... அவர் புண்ணியவான் தான். புண்ணியம் செய்தவர் செத்தால் வானம் அழுது மழை கொட்டுமாம்... அதான் இண்டைக்கு மழையும் கொட்டுது. நீயெல்லாம் கையாலாகாத நாய்... இனிமேல் இந்த வீட்டுப் பக்கம் வந்திடாதே... இண்டையோட எல்லா உறவும் அறுந்து போய்ச்சு..."

"களவாணி கூட்டம் தானே நீ... நீ தான் டி அப்பாவை கொன்றுட்டாய்..." என்றவாறு அவளை நோக்கி வந்தவனை எட்டி உதைத்தாள் முழங்காலில். அதே வீராப்புடன் வீட்டினுள் சென்றாள்.

செய்வதறியாது தடுமாறி சுயநினைவில்லாமல் சேத்தினுள் விழுந்து கிடந்தான் சதாசிவம். மழை சோவென கொட்டிக்கொண்டிருந்தது.


-பெல்ழி

எழுதியவர் : பெல்ழி (14-Jul-21, 8:55 pm)
பார்வை : 125

மேலே