யார் நீ
"யார் நீ?"
" வழக்கம் போல இன்றும் பொழுது புலர்ந்து விட்டது. ஆனால் மனதில் மட்டும் ஏதோ ஒரு உணர்ச்சி.
உள்ளங்கைகளை கண்களில் ஒற்றிக் கொண்டு, அவள் எழுந்து சென்று, வழக்கம் போல தேதி காலண்டரில் நேற்றிய தேதியை கிழித்தாள்.
'ஜூலை 18' அடடே இன்று நமக்கு 'பிறந்த நாள்' என்று தோன்றியது. நாம் பிறந்து 40 வருடங்கள் ஆகி விட்டதா? மனம் வியந்தது. இது என்ன வாழ்க்கை?
இனி என்ன வாழ்க்கை?
குழம்பியது.
கைகள் என்னவோ வழக்கம் போல வேலை செய்தாலும்,
மனம் எங்கெங்கோ பின்னோக்கி சென்றது.
அம்மாவுக்கு சமையலறையில் உதவியாக, அப்பாவிற்கு எடுபிடியாக, காலம் கழிந்தது அவளுக்கு முதலில் நினைவு வந்தது.
படிப்பு சுமார் தான், வேலைக்கும் செல்லவில்லை எனவே வீட்டு பொறுப்பு அவள் தலையில்.
அண்ணன் தம்பிகளுக்கு உதவியது, அண்ணன் திருமணத்தில் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு பொறுப்பாக செய்தது,
தம்பிக்கு படிப்பில் உதவியது.
இப்படியாக கொஞ்ச காலம் கழிந்து விட்டது அவளுக்கு தெரிந்தது.
எல்லாமே முடிந்து, நிமிர்ந்து
பார்க்கும் போது, 'வயது 40'.
ஓரிரு மாதத்திற்கு முன்னால்,
தன் திருமண பேச்சு வந்தபோது,
'இந்த வயதிலா?' என்று நமுட்டு
சிரிப்புடன் அண்ணி கேட்டதும்,
அண்ணன் தலை குனிந்து
அமைதியாக இருந்ததும்,
தம்பியோ வேறு எங்கோ பார்த்ததும், இயலாமையில்
அம்மா அப்பா விழித்ததும்,
ஞாபகம் வந்தது.
இது நாள் வரை தன்னைபற்றி, தான் நினைக்கவில்லை, மற்றவர்களும் அதை பற்றி கவலைபடவில்லை. என்பது இன்றுதான் அவளுக்கு புரிந்தது.
சரி, தான் பிறந்த இந்த நாளையாவது யாராவது நினைவில் வைத்துச் சொல்கிறார்களா பார்க்கலாம், என்று எண்ணி,
அன்று முழுவதும் அவள் அமைதியாக இருந்தாள்.. கோயிலுக்கும் சென்று வந்தாள்.
ஆனால் எல்லோரும் வழக்கம் போல அவரவர் வேலைகளை பார்த்துக் கொண்டுதான் இருந்தனர்.
சரி, அம்மாவாவது ஏதாவது சொல்லுவார் என்று எதிர்பார்த்தால், அவளுக்கு அன்று தான் உடம்பு முடியாமல், சென்று படுத்து விட்டாள்.
இவளுக்கு ஏதும் புரியவில்லை, யாருக்குமே என் நினைவில்லையா
என்று வருத்தமாக இருந்தது.
நான் யார்?
என் வாழ்க்கை என்ன?
கலக்கமாக இருந்தது.
சாப்பிட்டு விட்டு அப்பா எழுந்து போனார். அவர் தட்டை எடுத்து வைக்க சென்றவளுக்கு தட்டின் ஓரத்தில். 'கருவேப்பிலைகள்' கிடப்பது கண்ணில்
பட்டது.
----------